தூமை

கண்காணிக்கும் காவலர்கள்

ஜனவரி 7, 2010 · 1 மறுமொழி

         

தர்மினி

        பாண்டிச்சேரிப் பொதுச்சனங்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதற்குத் துடிதுடிக்கின்றார் தமிழச்சி. ‘பாலியற் தொழிலாளிகள் பாவம்’ என்ற ஒரு வசனத்துடன் அவர்களது பிரச்சனைகளை ஓரங்கட்டித் தாண்டிச் சென்று விடுகின்றார். 

          மற்றவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்தல், கண்காணித்தல், கதையைப் புரட்டிப் போட்டு தன் ஒழுக்கத்தை நிருபித்தல்,  பொலிஸ், நீதிமன்றம்,அரசாங்கம் ஆகிய அதிகார மையங்களைச் சொல்லி மிரட்டுதல் ஆகியவை தான் ஒடுக்கப்படுவோருக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களின் வழிமுறையாகவிருக்கிறது.  மக்களுக்காகப் புரட்சி செய்கின்றோம்,புரட்டிப் போடுகின்றோம்  என்று இவர்கள் சொல்வதையும் மீறிக் கொண்டெழும் தூய்மைப் பண்புகள்.
              இதனைச் மிகவும் குதூகலத்துடன்  தனது இணையத்தளத்தில் கடந்த 30 டிசம்பரில் ‘பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்பில் விபச்சாரம்!  ‘ என்ற தலைப்பில் தோழர்கள் படையுடன் துப்பறியச் சென்று வெகு வீராப்பாக எழுதியுள்ளார். காவல் துறை என்ன செய்கிறது? ‘ஒழுக்கங் கெட்டுப் போகிறதே பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்’ என்று கவலைப்படுகின்றார். அங்கு பாலியற் தொழிலுக்கு வந்த பெண்களை அடையாளங் கண்டு அது, இது என அஃறிணையிற் குறிப்பட்டுப் பேசுகின்றார்கள்.       ஒரு பொலிஸ்காரியின் வேலையைப் பார்ப்பது தனக்கு கௌரவம் என்று காட்டிக் கொள்வது போல அலட்டிக் கொள்கின்றார்.
             அந்தக் கிராமத்துப் பெண்கள் சித்தாள் வேலைக்குப் போவதைப் போலவோ ,வயல் வேலைக்குச் செல்வதைப் போலவோ ஒரே கிராமத்திலிருந்து குழுக்குழுவாகச் சேர்ந்து வருகின்றார்கள். காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறுவரை வேலை பார்க்கின்றோம் என்கிறார்கள்.பொதுவாகவே கிராமங்களில் இரகசியம் பேணப்படுவது கடினம்.கூட்டாக வந்து தொழில் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் காரணம், குடும்ப வறுமை.கொழுப்பெடுத்து குத்தாட்டம் போடவோ, ஊர் உலாத்தவோ கிராமத்திலிருந்து பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப் வரவில்லை. ‘அவர்களிடம் மேட்டர் எதுவும் கிடைக்கவில்லை காமெடியானது தான் மிச்சம்’ என்று கவலை வேறு.

            தமிழச்சி, நளினி ஜமீலாவின் ஒரு பாலியற் தொழிலாளியின் சுயசரிதத்தைப் படித்திருந்தால் வயிற்றுப்பாட்டுக்கு தொழில் செய்யும் பெண்ணின் கையில் காசைத் திணித்து அவரது தோழர்களும் சனங்களும் சுற்றி நிற்கக் கையைப் பிடித்திழுத்து ‘வாரியா?” என்று கிண்டல் செய்திருக்க மாட்டார். மிராசுதார்ப் புத்தியும்  ,  எளிய விளிம்பு நிலை மக்களின் மீதான எள்ளலும்,பணத்தின் திமிர்த்தனமும்  தமிழச்சி நெஞ்சில் பொங்கி வழிகின்றது.
         எவனாயிருந்தால் எனக்கென்ன என்று எழுந்த மானத்துக்கு செருப்பால் அடிப்பேன் என அறைகூவல் விடும் தமிழச்சி அந்தப் பெண்களைக் கூட்டிக் கொண்டு போன ஆண்களிடம் ஏன் பேட்டி எடுக்காமல் விட்டு விட்டார்? பணங் கொடுத்து ஒரு பெண்ணை லாட்ஜ்க்கு அழைத்துச் செல்வது அவர்களது குடும்பத்துக்குத் தெரியுமா? என்று ஆண்களிடம் கேட்காமல்,அப்பெண்களிடங் கேட்கின்றார். இந்தத் தொழில் செய்வது உங்கள் குடும்பத்துக்குத் தெரியுமா? என்று விடுப்பு விசாரிக்கின்றார்.  அங்கு பரபரப்பான இடமென்பதால் உடனே வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றார்களாம்.ஏன் வேலை மினக் கெட்டுப்போறாய் என அவன் ஒருத்தனிடமாவது கேட்டுக் கொள்வது தானே. அரசயந்திரம் பாண்டிச்சேரியில் அவலமாய் கிடக்குதென்று புலம்பி கண்காணிப்பாளராகவிருக்கின்றார். ஏன் பணங் கொடுத்துப் போகும் அந்த ஆண்களை நிறுத்தி காசு கொடுத்துக் காதலற்ற, காமத்தை வேண்டுவதன் உளவியலை ஆராய்ந்து எழுதியிருக்க வேண்டியது தானே.
          நடுத்தர வயதான பெண்ணுடன் இருபத்தைந்து வயதுள்ள ஆண் சென்று வந்ததைக் குறிப்பிட்டு   ” நடுத்தர வயதான அந்த பெண்ணிடம் படுத்த பொடியனுக்கு 25-வயதிற்குள் தான் இருக்கக்கூடும். கொடுமை! ” கவலைப்படுகின்றார். கலாச்சாரக் காவலர்கள் நிறைந்த நாட்டில் பாலியல் வறுமை அந்த இளைஞனுக்கு இருக்கிறது.பொருளாதார வறுமை அந்தப் பெண்ணுக்கு இருக்கிறது.அதிலே தமிழச்சிக்கு என்ன கொடுமையை யார் செய்தார்?
              அடுத்தவர்களது இரகசியங்களை ஆராய்ந்து ஒழுக்க மதிப்பீடுகளைக் கற்பித்துக் கொண்டு பொலிஸ்காரியாக பெருமிதமாய்ப் பேசுதல்,அதிகார மையங்களைத் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிமுறையிடல் போன்ற மேல் வர்க்க குணாம்சங்கள் பெரியாரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் காட்டிக் கொள்ளும் பிம்பத்திற்கு எதிரானவை. ’ஆண் இரண்டு ஆசைநாயகிகளை வைத்திருந்தால்,பெண் நான்கு ஆசைநாயகர்களை வைத்திருக்க வேண்டும்’ எனப் புனிதங்களைக் கவிழ்த்த பெரியாருக்கு இழுக்கு.

→ 1 மறுமொழிபகுப்புகள்: கட்டுரைகள்

மேராக் அகதிகளுக்கான உடனடித் தீர்வு அவசியம்

December 31, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

          இந்தோனேஷியாவின் மேராக் துறைமுகத்திலிருக்கும் தமிழ் அகதிகள் சார்பாகப் பேசிய ரவிக்குமார், ‘இந்தோனேஷிய அரசுடன் அகதிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
     இந்த அகதிகள் இந்தோனேஷியத் தடுப்பு முகாம்களிற் தடுத்து வைப்பதற்கு மட்டுமே மறுப்புத் தெரிவித்திருந்தனர். அடிப்படை வசதிகளற்ற மிக மோசமான இம்முகாம்களில் இருப்பதற்கு யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். முகாம்களில் குடும்ப உறுப்பினர்கள்,சிறுவர்கள் உட்பட பிரித்துத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அகதிகள் அங்கு வருடக்கணக்காக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
   இவர்கள் யு.என்.எச்.சி.ஆரிடம் உடனடியாகத் தங்களின் அகதிக் கோரிக்கையை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தனர். இந்தோனேஷிய அரசு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான சர்வதேசச் சட்டத்தில் கையெழுத்திடாதபடியால் அகதிகளின் உரிமைகளுக்கான கடப்பாடு தனக்கில்லையென்ற நிலையில் அகதிகளுக்கான உதவிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை அவர்களின் உரிமைகளை நிவர்த்தி செய்வதில்லை.          அவுஸ்திரேலிய அரசு,இந்தோனேஷிய தீர்வு என்ற திட்டத்தின் மூலம் அகதிகள் சார்ந்த தன் கடமையை இந்தோனேஷியா மீது திணித்து பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகின்றது.
  இதனால் தான் அகதிகள் யு.என்.எச்.சி.ஆரை நோக்கியும் , இந்தோனேஷிய-அவுஸ்திரேலிய அரசுகள் நோக்கியும் அகதிகளுக்கான நியாயமான தீர்வை வழங்குமாறு கேட்கின்றனர். ஒத்துழைக்க மறுக்க மாட்டோமெனச் சொல்லவில்லை.
      அவர்கள் குறைந்தளவு தரமான உணவு,மருத்துவ உதவிகளைக் கோரியிருந்தார்கள். இக்குறைந்த பட்சத் தேவைகள் கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் கடந்த 2009 டிசம்பர் 23 ஆம் திகதி 29 வயதுடைய ஜேக்கப் சாமுவேல் கிறிஸ்ரியன் நோயினால் மரணமடைந்தார். இதற்கான காரணம் அவுஸ்திரேலிய-இந்தோனேஷிய அரசுகளின் அலட்சியமாகும். இவ்வுயிரிழப்பை பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் கண்டித்திருந்தன. குறிப்பிட்ட நோய்க்கான விசேடமருத்துவரும், மேராக் அகதிகள் தொடர்பான முக்கிய செயற்பாட்டாளருமான மருத்துவர் பிறையன் செனிவிரத்ன இது பற்றித் தெரிவிக்கையில் இந்நபர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் காப்பற்றப்பட்டிருக்கலாம் எனவும் அத்தடன் இதற்கு இந்தோனேஷிய-அவுஸ்திரேலிய அரசுகளே பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
     இந்த இறப்பின் பின்னருங் கூட எவ்விதமான முன்னேற்றமும் அகதிகள் நிலையில் காணப்படவில்லை. கடந்த 28 ஆம் திகதி 9 வயது சிறுமி   வினிஜா கடும் வயிற்றுவலி காய்ச்சலுடன் வருந்த மருத்தவமனைக்கு எடுத்துச் செல்ல மறுக்கப்பட்டது. வயிற்றுவலியுடன் இருந்த மற்றமொரு பெண்மணியும் வைத்தியசாலை செல்ல மறுக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து கெஞ்சிக் கேட்ட நிலையில் சிறுமி மட்டுமே தாயிடமிருந்து பிரித்தத் தனியாக மருத்துவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின் 30 ஆம் திகதி பிறையன் செனிவிரத்ன தொலைபேசியில் உரையாடி பெண்மணியின் நோயை அடையாளங்கண்டு நோயாளியை அம்புலன்ஸில் அனுப்பக்கூடியதாகவிருந்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக,மோசமான ஒரே மாதிரியான உணவு உட்கொள்வதால் அனைத்து அகதிகளும் வயிற்றுக் கோளாறுகளாலும் மற்றும் பல நோய்களாலும் வருந்துகிறார்கள்.
      அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த செயற்பாட்டாளாகள் மாதுனி,சாரதா நிறையப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது.அகதிகளுக்கு உதவ முடியாதளவு சிக்கல்களை எதிர்கொண்டனர்.
      இந்தோனேஷிய அரசு அகதிகளுக்கு மனிதாபிமான , சட்டரீதியானஉதவிகளை மற்றும் ஊடக தொடர்புகளுக்கான தடைகளை ஏற்படுத்தி வருகிறதென இவர்கள் தெரிவித்தனர்.
     கடந்த ஒக்ரோபர் 11லிருந்து  இரண்டு மாதங்களுக்கும் மேலாக தமிழ் பேசும் அகதிகள் படகிலிருக்கின்றனர்.டிசம்பர் 30 அன்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ கோனெர் ஏ.பி.சி நியூசுக்குத் தெரிவிக்கையில் ‘அவுஸ்திரேலியா இந்தப் படகிலிருக்கும் அகதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்திருந்தார். அவுஸ்திரேலிய நாட்டுக்கு வெளியேயும் அகதிகளுக்கான மனிதவுரிமைத் திட்டம் வைத்திருப்பதையும் தெரிவித்திருந்தார்.
     அகதிகள் இவ்வறிக்கையை வரவேற்கிறார்கள்.அதே வேளையில் இந்த அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயான திட்டத்தினால் எவ்வித பயனுமேற்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்கள். இந்தோனேஷியத் தீர்வு என்ற திட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அரசுடன் இணைந்து செயற்படும் இந்தோனேஷிய அரசும், யு.என்.எச்.சி.ஆர் அகதிகளின் படகிற்குப் போவதைத் தடைசெய்துள்ளது.
     இத்திட்டம் ஏற்கனவே ஓர் உயிரைப் பலியாக்கிய பின்பும் யு.என்.எச்.சி.ஆர் அகதிகளை முறைப்படியாகச் சந்திப்பதற்கான வசதிகள் எற்படுத்தப்படவில்லை.
     தமிழ் ஒருங்கமைப்பு ஏற்கனவே இலங்கையில் கொடிய யுத்தத்தினாற் பாதிக்கப்பட்ட இந்த அகதிகள் மேலும் துன்புறக்கூடாது எனத் தெரிவித்திருந்தது.அவுஸ்திரேலிய அரசு மனிதவுரிமைகள் சாhபான தீவிர அக்கறையுள்ளதாக இரக்கமானால் மேலும் ஒரு நாளைக் கூட விரயங் செய்யாது அகதிகளுக்கான தீர்வை உடன்வழங்கத் தமிழ் ஒருங்கமைப்பு கோருகின்றது.
      இரண்டரை மாதங்களான பின்னரும் கடத்தப்படும் ஒவ்வொரு நிமிடமும் படகிற் தத்தளிக்கும் உயிர்களுக்குப் பெருந்துன்பத்தையளிக்கும் என்பதை அவுஸ்திரேலிய-இந்தோனேஷிய அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் ஒருங்கமைப்பு

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கட்டுரைகள்

கடந்து கொண்டே கொன்றுவிடும்

December 29, 2009 · 1 மறுமொழி

 பாதித்தூரத்திற் கண்விழித்தபோது
வாழ்வு,
வேலியோரம் பதுங்கி நடக்கும் பூனையாக
மெதுவாகக் கடந்து சென்று கொண்டிருந்தது.

அதுவொரு உதறலிற் கழற்றிய மயிர்களாக
காலடிகளிற் பறந்து கிடந்த சொச்சங்கள்
உயிரை உசுப்பின.

இடமூளை வலமூளை கசங்கி விரியாமல்
கண்கள் உக்கிப் போகப்போக
நித்திரையான கிழட்டுச்சவமெனத் திட்டி,
வாழ்தலின்
பாதியை எட்டிப்பிடிக்க மனமேங்கிப் பதறியெழ
சாவின் மணமறிந்து
கூர் சொண்டுகள்
குதறும் நகங்கள்
கிழித்துப் பிய்க்கும் பற்களுமாகப் பலவும்
செத்த உடலந் தின்னச் சுற்றி நின்றன.

 தர்மினி

→ 1 மறுமொழிபகுப்புகள்: கவிதைகள்

பேரினவாதத்தின் பாசக்காரப்பங்காளிகள்

December 22, 2009 · 2 மறுமொழிகள்

      

                       மூன்று நாட்களுக்கு முன்னர் தூமை வலைப்பக்கத்தில் பதிவிடுமாறு தூமைக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதன் தலைப்பு ‘ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? ‘ .-கனடியத் தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்-ரொறன்ரோ, என்ற  அமைப்பிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.அதன் சுருக்கம் என்னவென்றால் மகிந்த ராஜபக்ஷ ஜனநாயகத்தை நிலைநிறுத்தியுள்ளார் ஆகவே தமிழர்கள் அவருக்கே வாக்களிக்கவேண்டும் என்பது தான்.
                             ஸ்ரீலங்காவின் பேரினவாத அரசோ,புலிகளோ மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளைச் செய்பவர்கள் யாராயினும் கண்டித்துத் தூமையிற் பதிவிட்டுள்ளோம்.                    

வன்னி யுத்தத்தின் வெற்றியையே தனது பெரிய கெட்டிக்காரத்தனமெனச் சிங்கள மக்களிடம் உலகநாடுகளிடம் மார்தட்டும்  அவரது  ஆட்சிக்குப்பரிந்து பேசினால் அவையனைத்தும் எம்மாலும் ஏற்றக் கொள்ளப்படுவதாகத் தானே அர்த்தம்.
              வன்னியுத்தத்தில் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசத்தினுள் செல்லுமாறு இராணுவம்  உத்தரவிட்டு, இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருப்பதை நன்கு அறிந்து கொண்டும் கூட்டமாகக் கொன்றழிக்கப்பட்டனர்.கஞ்சிக்காகவும் பாலுக்காகவும் வரிசையில் நின்ற மக்களைத் தெரிந்தே  ஸ்ரீலங்கா அரசின் படைகள் எறிகணைகளை ஏவிக்கொன்றதை மறுக்கமுடியாது. தற்காலிக வைத்தியசாலைகள் என அறிவித்தும் அடையாளப்படுத்தியும் மருத்துவம் செய்த இடங்களைக் குறிபார்த்து   எறிகணைகள் பொழிந்தன. இவை மகிந்தாவின் கட்டளைகளைச் சிரமேற் கொண்ட ஆயுதப்படைகளின் கொடும்போர் புரிதலினால் நடைபெற்றவைகளே.
                  சில ஆயிரம் புலிகள்அழிக்கப்படவேண்டுமென்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதும் ஊனப்படுத்தியதும் வாழ்வில் மறக்க முடியாத கொடும்நாட்க ள்.

                                     மகிந்தராஜபக்ஷவை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென்ற உங்கள் கோரிக்கையின் மூலம் நீங்கள் நிறுவுவது என்ன? அவரதுஆட்சியில் இராணுவம் படையெடுத்துக் கைப்பற்றிய பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் முகாம்களையும் காவலரண்களையும் வைத்துக் கொண்டு மக்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவையா? புலிகள் என்ற சந்தேகத்திற் கைது செய்யப்பட்டு பல வருடங்களாகச் சிறைகளில் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அந்த ஜனநாயக ஆட்சியில் விடுவிக்கப்பட்டனரா?
                     புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது தான்.ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களை விட்டு வெளியேறாமல் முகாம்களினுள் அகதிகளாகப் போரின் வடுக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்று கூட மகிந்தவுக்கு வாக்களிக்கக் கோருகிறீர்களே.
                     புலிகளாற் கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வலிந்து ஆயுதங்கள் திணிக்கப்பட்டதுமென மக்கள் கஷ்டங்களை அனுபவித்ததும், புலிகளை அழிக்கவென அரசு ஈவிரக்கமின்றி மக்களைக் கொன்றதும் எப்போதும் கண்டிக்கவும் வெறுக்கவும் வேண்டியவையே.
                  யுத்தத்தில் வென்ற, எதிரித் தலைகளைக் கொன்ற, பூரிப்பில் தண்ணீர் கொடுத்தும் சாப்பாட்டுப் பார்சல்களை வீசியெறிந்தும் கருணை காட்டியதைப் போற்றுவதென்றளவில் இருக்கிறீர்கள்.மறைமுகமாக மகிந்த அரசு இனவழிப்பை ஒடுக்குமுறைகளைச் செய்யவில்லை என்கிறீர்கள்.

                     அதற்காகச் சரத்பொன்சேகாவை ஆதரிக்கவும் முடியாது.இறுதியாக நடை பெற்ற மக்களின் அழிவுகளுக்கு அவரது பங்கு அளப்பெரிது.ஒடுக்கப்படும் மக்களுக்கான ஒரு தலைமையைக் கண்டடைவது இலங்கைத்தீவின் மக்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும் பெருந்துயராகும்.

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: கட்டுரைகள்

நம் எதிர்காலம்

December 17, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

பெரியார்

உலகத் தமிழர்கள் மாநாடாம்! வெங்காயத் தமிழர் மாநாடு கூட்டி இலட்சம் இலட்சமாகப் பணம் வசூல் செய்து பாழாக்கி,உலகில் எத்தனை காட்டுமிராண்டிகள் இருக்கிறார்கள் என்று சென்சஸ் எடுக்கும் முட்டாள் திருவிழா நடத்தப் போகிறார்களாம்!

             உலகில்  இந்திய மக்களைப் போல் காட்டுமிராண்டி மக்கள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது என்றே சொல்லலாம்.
      இந்து மதத்தின் பேரால் இந்திய மக்கள் எளிதில் தலையெடுக்க முடியாத அளவு படுபாதாளத்தில் அழுத்தப்பட்டு,பரம காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறார்கள்!
  பொதுவாக இந்தியாவில் கிறிஸ்தவர்,முஸ்லிம்கள் அகிய இரு பெரும் சமுதாயத்தாருக்கு உள்ளது போன்ற மதம் இந்துக்களுக்கு இல்லவே இல்லை.
      இந்துக்கள் மதம் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதை எவ்வளவு சிறு அறிவுள்ளவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
     பார்ப்பனர்கள் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மாபெரும் மாநாடு-பிராமணர் மாநாடு என்னும் பெயரால்(காஞ்சிபுரத்தில் என்பதாக ஞாபகம்)கூடி அதில் சங்கராச்சரியாரே பேசும் போது ,‘இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படுவது ஆரிய மதம் தான்.அதற்கு ஆதாரம் வேதம்,சாஸ்திரம் உபநிஷதங்கள் தான்.ஆகையால் வேத மதம் என்பது தான் இந்து மதம் என்ற சொல்லாய் இருந்துவருகிறது’ என்று தெளிவாகப் பேசியதுடன் அதன்படி அம்மாநாட்டில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
      இப்படிப்பட்ட இந்து மதத்தின் தன்மை என்னவென்றால் இந்துக்கள் சமுதாயத்தில் ஜாதிப் பிரிவுகளை அனுஷ்டிப்பதும்,பாதுகாத்து வாழ்வதுமேயாகும். இந்த ஜாதிப் பிரிவுகளை அனுஷ்டிக்கவும்,பாதுகாக்கவும் என்கின்ற கருத்திலேயே ஏராளமான புராணங்களையும்,கடவுள்களையும் உண்டாக்கி அந்தப் புராணங்களும்,கடவுள்களும் புராண கதைப்படி மக்கள் நடந்து கொள்ளுவதும் தான் இந்து,அனுஷ்டானம் என்று ஏற்பாடு செய்து,அதற்கு ஏற்றபடி கோவில்கள்,விக்கிரகங்கள்,பண்டிகைகள் முதலியவற்றை அமல்படுத்தி வரப்படுகிறது.
     இந்தியப் பொதுமக்கள்(இந்துக்கள்)என்பவர்களும் மதம்-கடவுள் இவை பற்றிய ஆதாரங்கள் விஷயத்தில் சிறிதும் அறிவைச் செலுத்திச் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக ஏற்று நடந்து வருவதுடன், இவற்றால் தங்களுக்கு ஏற்பட்டு-அனுஷ்டானத்திலும் இருந்து வருகிற ஜாதி இழிவைப் பற்றிச் சிறிதம் சிந்திக்காமல் இழிமக்களாகவும், காட்டுமிராண்டி மக்களாகவும் இருந்தே வருகிறார்கள்.
       இந்த நிலை இன்று நேற்று  என்று இல்லாமல்  பல ஆயிரம் ஆண்டுகளாகவே இருந்து வருகின்றது!
        இந்த நிலையில் இழிமகனாகவும் காட்டுமிராண்டி மனிதனாகவும் இருக்கும் விஷயத்தில், இந்துக்களுக்குச் சிறிதும் கூட மானம்-வெட்கம் இல்லாமல் பணம் சம்பாதிப்பதிலும்,பதவி வேட்டை ஆடுவதிலுமே பெருங்கவலை கொண்டவர்களாகி நாளுக்கு நாள் தங்கள் இழிநிலையைப் பலப்படுத்தும் முறையில் கடவுள்,மத,வேத,சாத்திர,பராண,நம்பிக்கை உடையவர்களாகவே நடந்து கொள்கிறார்கள்.
       பொதுவில் உலகம் இன்று நாளுக்கு நாள் பகுத்தறிவிலும்-விஞ்ஞானத்திலும் முன்னேற்றமடைந்து,பல அற்புத காரியங்களைக் கண்டுபிடித்துக் கொண்டும்,செய்து கொண்டும் இருக்கிறது.இந்தக் காலத்தில்,இந்தியன் சிறப்பாகத் தமிழ்மகன் சிறிதும் கவலைப்படாமல் மான ஈனத்தைப் பற்றியும் சிந்திக்காமல் வாழ்ந்து வருகிறான்! குறிப்பாகத் தமிழ் மக்களை எடுத்துக் கொண்டோமேயானால் தமிழன் முன்னேற்றம் அடைய முடியாமல் அவனைக் கடவுள், மதம், வேத, சாஸ்திர, புராணங்கள், ஜாதிகள்,கோவில் முதலியவை தடைசெய்து நிறுத்திக் கொண்டு இருப்பதோடு,தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வதற்கு அவனுடைய தமிழ் மொழியும்,அது சம்பந்தமான இலக்கியங்கள்,நூல்கள் முதலியவையும் புதைக்கப்பட்ட புதைகுழியின் மீது பாராங்கல்லை வைத்து அழுத்தி இருப்பது பொன்று தலைதூக்க முடியாமலேயே செய்து வருகிறது.
      தமிழன் தலைதூக்கியே ஆகவேண்டும். 2000, 3000 ஆண்டுகளாகக்   கீழ்மகனாகவும்,காட்டுமிராண்டியாகவும் இருந்தது மிகமிகப் போதுமான காரியமேயாகும்.இனி ஒரு வினாடியும் தமிழன் இழிமகனாக இருக்கக் கூடாது.காட்டுமிராண்டித் தன்மையில் இருந்தும் மீண்டு ஆக வேண்டும்.
    அதற்குக் கடவுள் மத, வேத, சாஸ்திர  புராணங்களையும், கோவில்களையும், பண்டிகை,உற்சவங்களையும் வெறுத்தால் மாத்திரம் போதாது.புராண இதிகாச இலக்கியங்களையே பெரிதும் கொண்ட தமிழ் மொழியையும் கூட வெறுத்தாக வேண்டும்.ஏனெனில் தமிழனின் இழிநிலைக்கும் ஏற்பவே தான் தமிழ் மொழியும் அமைந்திருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் ஜனநாயக ஆட்சி என்னும் காட்டுமிராண்டி ஆட்சி,தமிழை விட எத்தனையோ மடங்கு அதிகமான காட்டுமிராண்டித் தன்மை பொருந்திய இந்தி என்னும் வடநாட்டுக் காட்டுமிராண்டி மொழியையும் சேர்த்துப் படிக்கும் படி,கட்டாயப்படுத்தப் படுகிறது.
           இந்த நிலை அமலுக்கு வருமானால்,தமிழன் மிகமிகக் காட்டுமிராண்டி ஆகிவிடுவான் என்பதில் சிறிதும் அய்யம் இல்லை. இந்தி புகுந்தால் கண்டிப்பாய் ஜாதி இழிவு ஒழியப் போவதில்லை.இது உறுதியேயாகும். தமிழனுக்கு எதற்கு ஆக இந்தி மொழி? என்று கேட்கவோ,இந்தி மொழியில் இருக்கும் விசேஷம் என்ன? அது அறிவிற்கோ,மானத்திற்கோ பயன்படும்படியாக எந்தத் தன்மையைக் கொண்டு இருக்கிறது? என்று கேட்கவோ,ஒரு தமிழனுக்குக் கூட துணிவு வரவில்லை.
  ‘இந்திய யூனியனுக்குள் தமிழ் நாடு இருப்பதால், இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டிருப்பதால் எல்லா இந்தியனும் ,தமிழனும் இந்தியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.’ என்று வட நாட்டான் சொன்னால் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானா? என்று கேட்கிறேன்.
    இந்திய யூனியன் ஆட்சி ஏற்பட்டதும் இந்திய அரசியல் சட்டம் ஏற்பட்டதும்,பெரிய மோசடியால் அல்லாமல் யோக்கியமான தன்மையில் ஏற்பட்டதாக யாராவது சொல்ல முடியுமா?
   இந்தியா என்பது அகஸ்மாத்தாக ஏற்பட்ட ஒரு சேர்க்கையே அல்லாமல் ,எத்தனை காலமாக ‘இந்திய நாடு ‘  இருந்து வருகிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
    தமிழ் நாட்டில் பார்ப்பானுக்கு ஏகபோக ஆதிக்கம் இருந்த காலத்தில்,தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்குச் சிறிது சுயமரியாதை உணர்ச்சி தூண்டப்பட்ட காலத்தில்,பார்ப்பான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ் நாட்டை வடநாட்டான் காலடியில் கிடக்கும்படிச் செய்து விட்ட மோசடித் தன்மை கொண்ட துரோக காரியமே அல்லாமல்,மற்றப்படி இந்தியாவிற்கும்,தமிழ் நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்பதோடு தமிழ் நாட்டிற்கும் , இந்திக்கும் என்ன சம்பந்தம்? என்றும் கேட்கின்றேன்.
     இன்று மானமுள்ள தமிழனுக்கு முக்கியமான வேலை என்னவென்றால், தமிழ்நாட்டை வடநாட்டான் காலடியில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டியதும்,
   தமிழர்கள் எல்லோரும் தமிழை உதறித்தள்ளி விட்டு ஆங்கிலத்தை வீட்டு மொழியாக ஆக்கிக் கொள்ள வேண்டியதுமேயாகும்.
     தமிழன் இன்று இங்கிலிஷ் எழுதப் படிக்கத் தெரிந்து-பட்டம் பெற்று,ஆங்கிலம் பேச வேண்டும் என்று காத்துக் கிடக்காமல் தமிழர்கள்,தமிழ்க் குழந்தைகள் ஒவ்வொருவரும் வீட்டிலும்,தெருவிலும்,பணிநிலையத்திலும் ஒருவருக்கொருவர் தங்களால் கூடுமானவரை ஆங்கிலமும் தமிழுமாகவே பேசிப் பழக வேண்டும்.
   தமிழ்ச் சொற்களுக்குள் வடமொழிச் சொற்கள் எப்படி வந்து கலந்து கொண்டனவோ,அது போலத் தமிழும்,ஆங்கிலமும் கலந்த முறையிலேயே கூடுமானவரை பேசவேண்டும்.
    இன்றைய தமிழ்நாட்டு ஆட்சி சுத்தத் தமிழர் ஆட்சியாய் இருந்தாலும் பயந்த ஆட்சியாகவும் இருப்பதால்,சிறிது தமிழ் பயித்தியத்தைக் காட்டிக் கொள்ள வேண்டி இருப்பது குறித்து நான் பரிதாபப்படுகிறேன்.
   ஆங்கிலத்தை ஒழித்து விட்டுத் தமிழில் எழுதுகிறார்களாம்!இதைக் கொலைபாதகம் என்றே சொல்லுவேன்.நாம் தமிழர்களாகவே உலகம் உள்ளவரை இருக்க வேண்டுமா?
   தமிழ்நாடு தானா உலகம்? அல்லது இந்தியா தான் உலகமா? நாம் உலக சம்பந்தமுடையவராக ஆக வேண்டாமா? நம் தமிழ், தமிழ்நாட்டை விட்டுத்தாண்டினால் ஒரு பழைய தம்பிடிக்கும் பயன்படுமா? இன்றைய நம்நிலை 6மணி நேரத்தில் தமிழையும்,இந்தியையும் கடந்து ஆங்கில நாடுகளை அடையும்படியான வேக உலகில் சஞ்சரிக்கிறோம்!
    10 நிமிஷத்தில் 5000 மைலுக்கு அப்பால் இருப்பவனுடன் பேசுமளவுக்குச் சமீபத்திபத்தில் நெருங்கி இருக்கிறோம். இதற்கு நம் தமிழும் இந்தியும் ‘தேவபாஷை” என்னும் சமஸ்கிருதமும் எதற்குப் பயன்படும்?
    நாம் உலக சம்பந்தமுள்ள மக்களாக வேண்டாமா?
பூரண சுதந்திரமுள்ள மக்களாக நம் பின் சந்ததிகளாவது ஆக வேண்டாமா?
  ஆகவே குழந்தைகளே!இளைஞர்களே!வாலிபர்களே!மாணாக்கர்களே!தாய்மார்களே! தப்போ,சரியோ ஆங்கில சொற்களைக் கலந்தே நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுங்கள்  உங்கள் தாயாரை மம்மி என்றும்,தகப்பனாரை பப்பா என்றும்,அண்ணன்,தங்கைகளை பிரதர்,சிஸ்டர் என்றும் முதலில் கூப்பிட்டுப் பேசிப் பழகுங்கள்.
   உலகத் தமிழர்கள் மாநாடாம்! வெங்காயத் தமிழர் மாநாடு கூட்டி இலட்சம் இலட்சமாகப் பணம் வசூல் செய்து பாழாக்கி,உலகில் எத்தனை காட்டுமிராண்டிகள் இருக்கிறார்கள் என்று சென்சஸ் எடுக்கும் முட்டாள் திருவிழா நடத்தப் போகிறார்களாம்!
    உலகத் தமிழரெல்லாம் இங்கு வந்து கூடி,உலகத் தமிழ் மாநாடு கூட்டிக் கலைந்து அவரவர்கள் அவரவர் உலகத்துக்குப் போனால் அங்கு போய் என்ன மொழியில் அவரவர்கள் பேசிக் கொள்ள முடியும்? ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ளமுடியுமா? கொடுக்கல்,வாங்கல் செய்ய முடியுமா?
    வீணாக ஒரு கண்காட்சியாக அல்லது உற்சவமாக,மாமாங்க உற்சவமாகக் கூட்டம் கூடி, இடிபட்டு அவரவர் ஊருக்குப் போவதல்லாமல்,இந்த உலகத்தமிழர் மாநாட்டால் ஒரு சின்னக் காசு பயன் யாராவது அடைய முடியுமா?
   ஓட்டல்காரனுக்கு   இலாபம், டாக்சிக்காரனுக்கு இலாபம், ரயில்காரனுக்கு இலாபம் வந்தவர்கள் திருப்பதிக்கும் , பழனிக்குமாய் மொட்டை அடித்துக் கொண்டு வீட்டுக்குப் போவது போல் பண்டிகையைக் கொண்டாடி விட்டு அவரவர்கள் ஊருக்குப் போகப் போகிறார்கள்.
  இந்தக் கூட்டத்தாரால் இன்று தமிழன் உள்ள இழிநிலையில், காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து ஒரு சிறு மாறுதல் அடைய முடியுமா?
    ஓர் ஆபாசத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறு திருத்தம்-மறுப்பு செய்யமுடியுமா?
   இராமாயணம்,பாரதம்,கந்தபுராணம்,பெரியபுராணம்,திருவிளையாடல் புராணம்,சிலப்பதிகாரம் முதலிய ஆபாசக் களஞ்சியங்கள் புது மெருகு பெறப்படப்போகின்றன!
    நாமமும்,விபூதியும் புதுத் தோற்றமளிக்கப் போகின்றன!
மாநாடு கலைந்த பின்பு சூத்திரன் ,சூத்திரன் தான்! பறையன் பறையன் தான்! சக்கிலி சக்கிலி தான்! பார்ப்பான் பிராமணன் தான்!
  ஆங்கிலம் ஒன்றைத் தவிர வேறு எந்த மொழி மாநாடுகளாலும்,தமிழனின் மேற்கண்ட இழிவுகள் மாறப் போவதில்லை.அதற்குப் பதிலாக உறுதி ஆகப் போவது உறுதி!
    காட்டுமிராண்டிகளே! சிறிது சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!சிந்தியுங்கள்!!!
14.12.1967 அன்று ‘விடுதலை’ தலையங்கம்

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கட்டுரைகள்

நான்கு வேதங்களில் சமுதாயமுன்னேற்ற வழி உண்டா?

December 14, 2009 · 2 மறுமொழிகள்

     பெரியார்

சாதி ஒழிய வேண்டுமென்று வாயால் மட்டும் சொன்னால் சாதி எப்படி ஒழியும்? கடவுள்-மதம்-புராணம் இவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்தால் தான் சாதியை ஒழிக்க முடியும்.

           பார்ப்பான் நான்கு வேதங்கள் என்கிறான். அதன்படி மனிதன் நடக்கவேண்டும் என்கிறான்.மதவாதிகள் தங்களுக்கு வேதம் நான்மறை அல்ல தேவாரம்-திருவாசகம் என்கிறார்கள்.அந்த நான்மறையை கடைந்தெடுத்த சாறு தானே திருவாசகமும்,தேவாரமும்.அதில் இருக்கிற கடவுள் தான் இதிலும்.அதிலிருக்கிற சாதி தான் இதிலும்.அதில் இருக்கிற அற்புதங்கள்,அதிசயங்கள் தான் இதிலும் இருக்கின்றதே தவிர,அதை விட மனித சமுதாய வாழ்விற்கான முன்னேற்றத்திற்கான,அறிவு ஆராய்ச்சிக்கான எந்தக் கருத்து இதில் இருக்கிறது?எதற்காக என்ன காரியத்திற்காக மனிதன் இதைப் படிக்க வேண்டும்?இதன் படி நடக்க வேண்டும்? என்று எவனும் சிந்திப்பதே கிடையாது.
       மணமக்கள் கோயிலுக்குக் கண்டிப்பாய்ப் போகக் கூடாது. இந்துமதப் பண்டிகைகள் எதையும் கொண்டாடக்கூடாது.ஜோசியம்,ஜாதகம்,நாள்,நட்சத்திரம் என்கிற மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்.
      சீதைக்கு ஜாதகம்-பொருத்தம்- நேரம் காலம் பார்த்துத் தான் திருமணம் நடந்தது.அத போலத் தான் திரவுபதை-கண்ணகி-சந்திரமதி எல்லோருக்கும் திருமணம் நடந்ததாக எழுதி வைத்திருக்கின்றான்.இவர்கள் என்ன வாழ்ந்து விட்டார்கள்?
                           பெண்களுக்குத் திருவள்ளுவர் சொன்ன கருத்தை ,ஆண்களுக்குச் சொல்லவில்லையே.பெண்கள் என்றாலே மிக இழிவானவர்கள் என்று தான் எல்லாப் புலவர்களும் ,அறிவாளிகளும் எழுதியிருக்கிறார்கள்.பெண்களுக்கு நீதி சொன்ன அத்தனை பேர்களுமே பெண் அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.எதற்காகப் பெண் பயமுள்ளவளாக,அறிவற்றவளாக,வெட்கப்படக்கூடியவளாக,அருவருக்கத் தக்கவளாக இருக்கவேண்டும்?ஆணை விட அவள் எதில் தாழ்ந்தவள்?அவளுக்கு மட்டும் எதற்காக இத்தனை கட்டுப்பாடுகள்? உலகம் சமனாக வேண்டும்.இரண்டு பேர்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும். அன்போடு ஒன்றாக இருப்பது வேறு! அடிமையாக்கிக் கொண்டிருப்பது வேறு.அன்போடு இருப்பதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.அடிமைப்படுத்தி நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு செய்வதைத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறோம்.
     நம் சமுதாயமானது நம் தொண்டின் பயனாக சாண் வளர்ந்தால்,பிறகு முழம் வழுக்குகிறது.நம் பொதுநலத் தொண்டர்கள் இருக்கிறார்கள் பேருக்குத் தான் பொது நலத் தொண்டர்களாக இருக்கிறார்கள். அதன் மூலம் பொறுக்கித் தின்னுவதில் தான் அதைப்பயன்படுத்துகிறார்கள்.தன் குடும்பம் வளர்ந்தால்-வாழ்ந்தால் போதுமென்று கருதுகிறார்கள்.நாம் ரொம்பத் திருத்த மடையனும்,உண்மையான தொண்டு நம் இழிவு-மானமற்ற தன்மையை ஒழிப்பது என்பதை உணர வேண்டும். சாதியை ஒழிக்கிறவன் காரியத்தில் என்ன செய்திருக்கிறான்?மேடையிலே பேசுகிறான்.சாம்பலை அடித்துக் கொள்கிறான்.கோயிலுக்குப் போகிறான்.இவற்றையெல்லாம் நம்பிக் கொண்டு – கடைப்பிடித்துக் கொண்டு சாதி ஒழிய வேண்டுமென்று வாயால் மட்டும் சொன்னால் சாதி எப்படி ஒழியும்? கடவுள்-மதம்-புராணம் இவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்தால் தான் சாதியை ஒழிக்க முடியும்.

05.07.1968 அன்று சேலத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு 
விடுதலை,08.09.1968

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: கட்டுரைகள்

சமாந்தரத் தொடுகைகள்

December 13, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

 

நிலத்தில் விலகிக்கிடக்கின்றோம்.
நமக்கிடையேயுள்ள தூரம்
பிரிப்பதற்கும் இணைப்பதற்கும்.

வளைவுகளும் நேர்களுமாகப் பாதைகளைக் கொண்டிருப்போம்.
பல்லாயிரங் கைகளைப் பற்றிப்பிடித்தவர்களாகப் பயணிக்கின்றோம்.
குறுக்கே இணைப்புகள்
விலகலின் தொடுகைகள்.

கைகளைப் பிணைத்தவர்களாக
எப்போதும் சமாந்தரங்களில் நீளச்சென்று
பயணங்களின் இலக்குகளைச் சுமத்தலும்
விலகிச் சிறு தூரத்திற் கிடத்தலும்
நெருப்பில் உருகி வளைந்து                                                                               இரும்புத் தண்டவாளங்களாயிருக்கும்
எம் இயல்பே.

தீர்ந்திடாத போதினிலே

கடலாயிருந்தால்
சிப்பிக்குள் ஒழித்து வைத்த மழைத்துளியாய்
நேசத்தை மறைப்பேன்.

இலையுதிர்கால மரமாயிருப்பின்
காற்றில் உதிர்த்து
மக்கிடச் செய்வேன்.

இல்லையொரு சூனியக்காரியாயிருப்பின்
ஒற்றைப்பெரு விரலிலோ
உச்சி மயிர்க் கற்றையிலோ
சேமித்து காவலிருப்பேன்.

காற்றாய் மரமாய் மலராய் நானில்லை
காதலும் காமமுமாகக் கனவுகளைப் புனைந்து
பிதற்றும்
தந்திரமறியாத் தாகியிவள்.

தர்மினி

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கவிதைகள்

வீடு

December 11, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

தர்மினி

ர் நத்தையின் கூடு போன்ற
நகர்ந்து செல்லும்
வீடொன்றை
முதுகிற் சுமப்பது எளிதானது.

மண்,மரங்கள்,கற்கள்,கம்பிகள்,சீமெந்து கலந்த வீடொன்று
சிதைந்து போவதை
எரிந்து அழிவதை
யுத்தங்களாற் தின்னப்படுபவர்கள்
அனுபவித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

அங்கிருந்து ஓடுவதும்
வேடரிடமிருந்து தப்பிக்கும்
மிருகங்களையொத்த வேகத்தோடு தான்.

குண்டுகள்,துப்பாக்கிகள்,வேவுக்கண்கள் சொல்லுகின்றன,
‘வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்’

யுத்தகாலங்களில்
கட்டித்தொங்கும் வாசலோரப்பயணப்பொதிகள்
வறுத்து வைத்த தானியங்களுடன்
இரவுகளைக் காவல் காத்திருந்து
உயிர்களைத் தின்னத்தொடங்கும் சத்தங்களில்
வீடுகள் விட்டுக்கலைந்து    
ஓடத்தொடங்குவார்கள்.

நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைந்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொணடிருப்பார்கள்.

ர் நத்தையின் கூடு போன்ற
நகர்ந்து செல்லும்
வீடொன்றை
முதுகிற் சுமப்பது எளிதானது.

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கவிதைகள்

இரக்கவாளர்களின் உடைகள்

December 1, 2009 · 3 மறுமொழிகள்

 

அகதிகளுக்குக் குடிசைகள் கட்டினர்.
அழுக்கேறிய ஒற்றை ஆடைக்குப் பதிலாக
இரக்கவாளர்களின்
உடைகளைத் துவைத்து
அணிவித்தனர்.
அரிசி,பருப்பு,சீனி மற்றும் மாவும்
மூடைகளாக முதுகுகளில்
ஏற்றித்
தணலாய் கிடக்கும்
வயிறுகளைக் கஞ்சியால்
கழுவ
நிவாரணந் தந்தனர்.

மேலுஞ் சில
ரூபாய்களைப் பொத்திக் கொடுத்துப்
புகைப்படங்களும் பிடித்தனர்.
உழுத நிலத்தைக் கறவை மாடுகளை
குளத்து மீன்களை
குடியிருந்த துண்டு நிலத்தைக்
குண்டுகள் கொட்டிக் குலைத்து
தின்ற சோற்றைத் தட்டிக் கொட்டி
வரிசையாக நிறுத்தி
வள்ளல்களாய்
நிவாரணங்கள்
வழங்குதலில்
தீர்ந்தது தீர்வு.

மனிதர்களை
விலங்குகளை
முக்கால் உயிருடன்
மணலள்ளி மூடி
தப்பியோடுகையில்
முதுகிற் சுடுபட்டு
தண்ணீரிற் செத்துக்
குவிந்த சாம்பலில் கொட்டுகின்றனர்
தங்கள் இரக்கங்களை.

பிணக்காட்டிற் செத்துக்கிடந்த
பிள்ளைகளை
பெற்றவரை
துணையை
அயலவரை
நீள் வரிசைகளில்
நின்று கேட்கின்றனர்.
எந்த நிவாரணத்தில்
வழங்குவீர்?

தர்மினி

www.vallinam.com.my

→ 3 மறுமொழிகள்பகுப்புகள்: கவிதைகள்

ஒடுக்கப்படுவோருக்கான குரல்

நவம்பர் 29, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

                                      ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல நடைபெறுகின்றன.அவற்றில் மையமாக இருப்பது  அனைவருக்குமான உரிமைகளுக்கும் அதாவது மனிதர்கள் சரிசமனற்ற முறையில் நடாத்தப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்புவது. முதலாளித்துவ அரசுகளின் தந்திரங்களும் சுயஇலாபங்களும் அறிந்து கொள்ளாத மக்களால் சனநாயக உரிமைகள் சலுகைகள் உணர்ந்து கொள்ளப் படாமல்,அதுவே இயல்பான வாழ்வென ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அவ்வாறான மாயைகளில் அவர்கள் வாழுமாறும் வலிந்து திணிக்கப்படுகின்றனர். சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் வேறு வழியற்றுச் சுமக்க வேண்டியவர்களே தாம் என்று வாய்மூடியிருப்பர்.
                       இவ்வாறான மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் போராட்டங்களை மேற்கொள்ளவும் சுயநலமற்ற கட்சிகளும் அமைப்புகளும்  தம் பணியெனத் தோள் கொடுக்கின்றன. ஒரு அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தும் போது அதனுடன் இணைந்து பொதுசனங்களும் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர்.இவைகள் கருத்தரங்குகளை நடாத்தி மற்றவர்களுக்குத் தெளிவு படுத்துகின்றன.அடுத்த செயற்பாடுகளை ஆலோசிக்கின்றன. சிறு தொகையினாரல் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களினால் கிடைக்கும் பலன்களை அதனை வேடிக்கை பார்த்துக் கேலி செய்வோரும் பெற்றுக் கொள்கின்றனர் என்பதே உண்மை. மக்களுக்காக மக்கள் ஒன்றிணைந்து உரத்துக் குரல் கொடுப்பது வெகுசனப்போராட்டத்தின் சிறப்பாகும்.ஆயினும் காத்திரமான கோசங்களோ வாசகங்களோ இல்லாத ஒரு ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ தம் இலக்கையடையத் தவறிவிடுகின்றன. வேண்டிய வேலைத் திட்டங்களுக்கான ஆயத்தமோ தீர்மானங்களோ இல்லாத அமைப்புகளும் எவ்விதமான பயனையும் அளிக்காமற் போய்விடுகின்றன.முறையான திட்டமிடல்களும் நியாயமான கோரிக்கைகளுமாக நின்று போராடும் அமைப்புகள் தம் இலக்கை அடைவதில் தோற்பதில்லை,சோர்வடைவதில்லை.
     அது மட்டுமன்று சிலர் மக்களுக்காகப் பேசுகின்றோம் குரல் கொடுக்கின்றோம் எனச் சொல்லியவாறு குழுவாகச் சேர்ந்து தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இலாபங்கள் என்பவற்றைச் சார்ந்து செயற்படுவார்கள்.சாதாரண சனங்களுடன் இறங்கி வேலை செய்யாமல் தனிப்பட்ட நபர்களாகி அந்த மக்கள் சார்பில் தாமே கூடிப் பேசித் தங்கள் திருப்திகளுக்கேற்ற தீர்மானங்களை எடுக்கின்றனர்.இரகசியக் கூட்டங்கள் இரகசிய அறிவிப்புகளென எந்த மக்களுக்காகப் பேசுவதாகச் சொல்கிறார்களோ,அவர்களால் அவை பற்றி அறியக்கூட முடியாமற் போய்விடுகிறது.அம்மக்களால் உடன்பட முடியாத விடயங்கள் முடிவுகளாகத் திணிக்கப்படுகின்றன.
      இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்து கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்படும் தமிழ் ஒருங்கமைப்புப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. தமது முகப்பு வாக்கியத்தை -‘இலங்கையில் ஒடுக்கப்படும் அனைவரது உரிமைகளுக்கும் போராடும் தமிழ் ஒருங்கமைப்பு’- என்பதாகப் பொறித்து தங்கள் பணியைச் சுருங்கச் சொல்கின்றனர்.
           இலங்கையின் வன்னி முகாம்களிற் கட்டாயமாக வைத்துள்ள மக்கள் அனைவரையும் விடுவித்து ‘முகாம்களை மூடு ” எனத் தொடர்ந்து போராட்டங்களைப் பல வடிவங்களிலும் மேற்கொள்கின்றது இவ்வமைப்பு.

                 தமிழ்மக்கள் வாழும் இடங்களிலிருந்து உடனடியாக இராணுவத்தைத் திரும்பப் பெறுவது,தடுப்பு முகாம்களை மூடுதல், இலங்கை அரசுக்கு இதர நாடுகள் உதவி வழங்குவதை நிறுத்தும்படி அந்நாடுகளின் தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிப்பது,ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவது,சுயநிர்ணயஉரிமையை உத்தரவாதப்படுத்துவது ஆகிய அணிதிரட்டலுக்கான கோரிக்கைகள் உருவாக்க முனைப்பாகச் செயற்படுகிறது. 
             மாதக்கணக்காக வன்னியில் நடை பெற்ற போருக்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்தவர்கள் பலர் இன்று அமைதியாக இருக்கின்றனர்.கவனயீர்ப்புகளினால் அரசின் மீதான அழுத்தத்தைப் பிரயோகித்து இம்மக்களுக்காகப் பேச முன்வருகிறார்களில்லை.புலிகளும் தலைமையும் அழிக்கப்பட்ட பின் யாருக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய தேவையிருக்கவில்லையா?இராணுவத்திடம் சரணடைந்த புலிஉறுப்பினர்களின் நிலைமையென்ன? முகாம்அகதிகளின் கதியென்ன ? என்று வீதிகளிலிறங்கிச் சர்வதேசமே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எனக்கூக்குரலிடவில்லையே.
                    முகாம்களைப் பார்வையிட அரசினால் அழைத்துச் செல்லப்படுபவர்கள் காட்சிப்படுத்துவதெற்கென இருக்கும் சில முகாம்களைப் பார்வையிட்டுவிட்டுச் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர் எனச் சான்றளிக்கின்றனர்.அவர்களை அங்கு முகாமில் மக்களோடு ஒருவராகத் தங்கியிருந்து வாழ்ந்து ஊழியஞ் செய்யச் சொன்னால் அச்சீர்கேடை உணர்ந்திருப்பார்கள்.அவர்கள் நட்சத்திர விடுதிகளிற் தங்கியிருந்து முகாம் மக்களின் வாழ்க்கையைப் பார்வையிட்டுப் பேசுபவர்கள்.ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியும் அரைவாசி மக்கள் விடுவிக்கப்பட்டதாகச் சான்று பகர்கின்றார்.அது எவ்வாறான பின்னணியில்? வன்னியை நிரந்தர முகவரியாகக் கொண்டவர்கள் மாரிகாலங் காரணமாக வேறு முகாம்களுக்கு இடமாற்றப்படுகின்றனர்.ஏற்றிச் சென்று இடைவழிகளிலுள்ள பாடசாலைகளில் இராணுவப் பாதுகாப்புடன் தங்க வைக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம் போன்ற ஏற்கனவே அரசின் இராணுவத்தின் கண்காணிப்பிலுள்ள பிரதேச மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.அச்செயற்பாடு அவர்களை மீண்டும் இராணுவக்கண்காணிப்பில் கையளித்திடுதலே.குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் இராணுவ முகாம் சென்று பதிய வேண்டும்.தொடர்ந்து இராணுவம் வீடுகளுக்கு வந்து உறுதிப்படுத்தும்,அடையாள இராணுவ அடையாளஅட்டையும் வழங்கப்படும்.  அகதி முகாம்களை மூடிட வேண்டும். அம்மக்களைச் சுதந்திரமாக வெளியே விட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தமிழ் ஒருங்கமைப்பு.” தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து” என வன்னிப் போர்க்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு 2009 மார்ச் ஆரம்பிக்கப்பட்டது.இது பல நாடுகளிலும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்திட்டங்களை மேற்கொள்கின்றது.தற்போது தமிழ் ஒருங்கமைப்பாக வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்றது.தனியே தமிழர் மட்டுமல்லாது   பல  நாட்டவர்களும்  உறுப்பினர்களாகியுள்ளனர். இந்தோனேஷியா,மலேசியா,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அகதித் தஞ்சம்கோரி இடைவழியிற் துன்புறும் மக்களுக்காகவும் கூட்டங்களையும் தூதுவரகத்தின் முன் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துகின்றது.அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றது.இணையத்தளத்தையும் நடாத்தி கோரிக்கை மனுவில் கையெழுத்துகளைச் சேகரிக்கின்றது.  

                  இலங்கைத் தமிழர்களின் ஆரம்ப காலப் பிரச்சனைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளையோரை அணுகுகின்றனர்.உத்வேகத்துடன் தம் பங்களிப்பையாற்றத் துடிக்கும் இளையோர்களுடன் இணைந்து செயலாற்றக் கருத்தரங்குகளை நடாத்துகின்றனர்.

              மே 18 இல் நாடு அமைதியானதைச் சொல்பவர்கள் மத்தியில், அதன் பின் ஆபத்தான பயணங்களை மேற் கொண்டு அகதித் தஞ்சம் கோருபவர்களின் சார்பில் தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி யதார்த்தத்தைத் தயக்கமின்றி உரைக்கின்றனர்.
         லண்டன், சென்னை,நியூயோர்க்,சுவீடன்,அயர்லாந்து,ஒஸ்லோ,மலேசியா,பரீஸ் என ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த நாடுகளில் ஆர்ப்பாட்டங்களைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்துகின்றனர்.லண்டனில் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி இந்தோனேஷிய, அவுஸ்திரேலிய தூதரகங்களின் முன்னால் ஆர்ப்பாட்டங்களையும் மேற் கொள்ளவுள்ளனர்.
இணையத்தளத்தைக் காண்பதற்கு,
 www.stoptheslaughteroftamils.org

தர்மினி

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கட்டுரைகள்