e0aeaae0ae9fe0aeaee0af8d3

–  தர்மினி

வரைந்தளித்த ஓவியத்தைப் படுக்கையறையிற் பொருத்தியிருந்தாய்
தூங்கத்தொடங்கும் நேரம்-அதில்
குறுக்குமறுக்காகக் கோடுகள் நெளியுதென்றாய்
வியர்வையிற் திடுக்கிட்டால்
வெளிச்சங்கள் மின்னுதென்றாய்
விடியற்காலையில்
கோணலாகத் தொங்குதென்றாய்
இன்னுமதிகமாய்
நேரத்தையும் தூக்கத்தையும் குறுக்கீடு செய்யும் கிறுக்கலென்றாய்
உனது முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு –
அதைக்கிழித்துவிடு என்றேன்

எனது ஒவியத்தைக் கிழிக்கவோ அழிக்கவோ முடியாதென
நேசமும் திமிருமாக நீ சொன்ன வேகத்தில்
உனதுயிரின் ஒரு துளி
சிதறித்தெறித்து
என் மீது சிந்தியது
சிலிர்த்தவுடலுடன்
துடைத்துவிட மனசின்றி
வெற்றுத்தரையில் வீழ்ந்து கிடந்து
நிறுத்த மறுத்த என்னுதடுகளின் புன்னகையால்
நெஞ்சினறைகளை நிறைத்து நனைத்துக் கொண்டேன்

Advertisements