கீழைத் தேய பெண்ணியம் – ஒரு பார்வை

wmen

-மோனிகா

பெண்ணியம் பேசுவது என்றால் என்ன? ஆணாதிக்கச் (patriarchal) சமூகத்தினால் ஆக்குதலுக்கும் அமர்த்துதலுக்குமான நடைமுறைகளைச் சாராத எந்த ஒரு கருத்தையும் முன்வைக்க ஒரு பெண் முனைவாளாயின் அப்பெண் “பெண்ணியம்” பேசுகின்ற ஊருக்கு அடங்காத, கலாச்சாரத்திற்கு புறம்பான ஒரு எதிரியாகிப் போகிறாள். உணவு முறை, உடை, உறக்கம், பிள்ளைப்பேறு, பூப்படைதல், பாலுறவு போன்ற சராசரி நிகழ்வுகளுக்குக் கூட ஆணாதிக்க சமூகத்தினால் நிறுவனப்படுத்தப்பட்ட குடும்பம், கலாச்சாரம், சாதீயக் கட்டுப்பாடுகள், பாலியல் அமைப்புமுறைகள் போன்றவற்றிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது ஊரறிந்த ஓர் உண்மை. அத்தகைய சமூகத்தினரால் சம உரிமைக்குப் புறம்பாக தெய்வமாகவோ, பூதமாகவோ மட்டுமே பெண்களைப் பார்ப்பது மரபு வழிப் பழக்கமாயிருக்கிறது.

இப்பெண்கள் எல்லோருமே என்ன ஒரே வழி வகையினரா எனப்பார்த்தால் இவர்களுள் உயர்சாதியினராகவும் தாழ்த்தப்பட்ட சாதியினராகவும் கருதப்படுபவர்கள், பொருளாதார ஏற்ற தாழ்வுக்குரியவர்கள், கருப்பு/வெள்ளை/பழுப்பு நிறத்தினர், ஒருபால்சேர்க்கையாளர்கள், இருபாலினர், இருபால்சேர்க்கையாளர்கள் என எல்லாப் பிரிவினருமே இத்தந்தைவழி/ ஆணாதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு வருபவர்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து கிடையாது.

கீழைத் தேயப் பெண்களால் எழுப்படும் கேள்விகளுக்கான முக்கியக் கூறுகளாக கருதப்படுவன அவர்களது அரசியல் உணர்வையும், சுய அடையாளத்தையும் முன்னெடுத்து கேட்கப்படுபவையாகும். எல்லா பெண்ணிய இயக்கங்களுமே செயல்பாட்டு ரீதியில் மிகவும் ஒழுங்கு செய்யப்பட்டவையாக (அமைப்பு ரீதியில் வலுவானதாக) அமைந்துவிடுவதில்லை. அவை ஒவ்வொன்றுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட காலபிராந்தியத்தின், குறிப்பிட்ட சமூகச் சூழலின் பின்புலத்திலிருந்து எழுப்பப்பட்டவையாகவே ஒலித்திருக்கின்றன. ஒலிக்கின்றன. ஒலிக்கவும் கூடும். மார்க்ரெட் வோன் டிராட்டா படத்தில் காட்டப்பெறும் ரோஸென்ட்ரெசின் ஜெர்மானியப் பெண்கள் தங்களது யூதக்கணவர்களைவிடுவிக்கச் செய்யும் போராட்டமாகட்டும், அல்ஜீரிய விடுதலைக்கான பெண்களின் போராட்டமாகட்டும், மாந்தோப்பு தேயிலைத் தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டதற்காக போலீசாரால் இழித்து பேசப்பட்டு நதியில் மாண்ட பெண்களாகட்டும் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவ மிக்க போராட்டமாகவே இருந்திருக்கின்றன. இவர்களது கோட்பாடுகளும் குரல்களும் தேவைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்றவாறு மாறுபட்டவை. அதே நேரம் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைப்போலவே ஒற்றுமைகளும் அதிகம். பாலியல் வன்முறைக்கெதிரான போராட்டங்கள், குடும்பம்/மதம் சார்ந்த அடக்குமுறைகள், வாக்குரிமைப் போராட்டங்கள் போன்றவற்றில் இவர்களுக்கிடையே மிகவும் ஒற்றுமை உண்டு.

பண்ணைகளாதிக்கத்தை எதிர்த்துத் தெரித்த விவசாயக் கூலிகளின் போராட்டங்கள், முதலீட்டிய முதலைகளுக்கெதிரான பாட்டாளி வர்க்க தொழிற்சங்கக் குரல்கள், சட்டம்/அரசுக்கெதிரான குரல்கள், பொருளாதார முன்னேற்றம் கோருபவை, குடும்ப வன்முறைக்கெதிரானவை என கருத்து ரீதியில் இவை பன்முகப்பட்டவை. இப்போராட்டங்களின் நிதர்சனத்துடன் ஒப்பிடுகையில் “எழுத்து” என்பதே ஒரு வெற்றிடத்தை நோக்கிய நிகழ்வாகவும் ‘எழுதுவது” அன்பதே ஒரு வர்க்கமும் கலாச்சாரமும் சார்ந்த ஒரு நிகழ்வாகவும் தோன்றுவது முற்றிலும் உண்மை. ஒவ்வொருவரும் தனக்காக பேசுவது என்பது போய் மற்றவர் “அவர்களுக்காக” பேசுவது என்பது இயல்பை ஓரளவிற்கு நிலைகுலையச் செய்கிறது. கல்வித்துறையும், அரசும் எடுத்துக் கையாளும்போது பிரச்சினைகளின் குரல்கள் வடிவமாற்றம் அடைகின்றன. இதை கல்வித்துறையைச் சார்ந்தவர்களே ஒப்புக் கொள்ளவும் செய்கின்றனர். பிந்காலனீய/காலனீய கட்டமைப்பான “சதி” (உடன்கட்டையேறுதல்) குறித்த லதாமணியின் கட்டுரையும், காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பீவாக்கின் “விளிம்பு நிலையினர் பேசமுடியுமா?” (Can subaltern speak?) என்ற கட்டுரையும் இதற்கு சாட்சி. இத்தகைய சூழலில்தான் கதையாடல்கள், வாழ்க்கைக் குறிப்புகள், பெண்களின் அனுபவம் சார்ந்த பிரதிகள், போராட்ட வாக்குறுதிகள் போன்றவற்றை நமது வரலாற்று சான்றுகளாக மாற்றுவதற்கான தேவை எழுகிறது. ஸூசி தாரு மற்றும் கே.லலிதாவால் தொகுக்கப் பெற்ற “இந்திய பெண் எழுத்துக்கள்” (Women’s writings in India) இவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐரோப்பிய, அமெரிக்க, மேலைய பெண்ணிய இயக்கக் கோட்பாடுகள் முன்னேற்றம் அடைந்துவிட்டவையாக நாம் கருதும் அதே நேரம் இந்நாடுகளின் கறுப்பினப் பெண்களின் போராட்டங்களும், மூன்றாம் உலகப் பெண்களின் வரலாறும் (இது வெறும் நிலப்பரப்பு சார்ந்த அடையாளம் அல்ல, முதலுலகிற்குள்ளும் அடிநிலைத் தொழில் செய்கிற மூன்றாம் உலகம் இருக்கின்றதென்பதை நாம் இங்கு மறந்துவிடக்கூடாது), கீழைத்தேயப் பெண்களின் கதையாடல்களும் போராட்ட வரலாறுகளும் இவர்களால் படிக்கப்பட்டு இவர்களின் வழிநடத்துதலுக்கு உதவுகின்றன என்பது முக்கியமான உண்மை. ‘வரலாறு” என்ற ஒருமுகப்பார்வையை உடைத்து “வரலாறுகள்’ என்று பிரித்துப் பார்ப்போமானால் பெண்ணியத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளல் சாத்தியப்படலாம்.

3 thoughts on “கீழைத் தேய பெண்ணியம் – ஒரு பார்வை

  1. கீழைத்தேய பெண்ணியம் குறித்து மோனிகா அவர்களின் விளக்கம் மிகவும் அருமை! பாராட்டுக்கள்! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  2. இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள லதாமணியின் உடன்கட்டை ஏறுதல் பற்றிய கட்டுரையை பெறக்கூடிய வலைத்தளம் அல்லது புத்தகம் ஏதாவதொன்றை குறிப்பிட முடியுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s