-மோனிகா

உள்ளாடை அரசியலைப்பற்றி சென்ற வருடம் கனடா பெண்கள் சந்திப்பிற்குப் பிறகு நமது நண்பர்களில் சிலர் ஏற்படுத்திய அளப்பறை எல்லோருக்கும் நினைவிருக்கலாம். உள்ளாடையை வெளியே காட்சிக்குட்படுத்தியது மட்டுமல்லாமல் உள்ளாடையே ஒரு மேற்கத்திய கலாச்சாரத்தின் கண்டுபிடிப்பு என்பது எதிர்கருத்தாளர்களின் கூற்று. உண்மைதான். ஒப்புக் கொள்கிறோம். அதுமட்டுமல்ல இந்த உள்ளாடைகள் வாங்குவதற்கான வசதியே கூட இல்லாத அடித்தள வர்க்க, பாட்டாளிப் பெண்கள் குழுவுக்கும்கூட இவை எட்டாத வாதங்கள்தான். எனினும், தேசியம், நவீனத்துவம், உலகமயமாதல் போன்ற மேற்கத்திய கருத்துக்கள் பரவிப் பிரவாகம் எடுக்கையில் ஏன் இந்த உள்ளாடை அரசியலை மட்டும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான் எனது கேள்வி. காயத்ரி சக்ரவர்த்தி என்ற பெண்ணிலை வாதியின் கருத்துக்களில் ஒன்றான ஒரு “தந்திரபூர்வ சாராம்சப்படுத்தலாக” (strategic essentialism) கூட அது இருக்கலாம். தந்திரபூர்வ சாராம்சம் என்பது ஒரு பொருளை வலிந்து சாராம்சப்படுத்துவது மூலம் அதன் பாடு பொருளைச் சென்றடைவதாகும். இங்கு பாடுபொருளாக பெண் உடலும் அவ்வுடல் கோரும் சுயமும் நிற்கின்றன. பெண்ணியம் என்பது இவ்வகையில் பெண்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பாலியல் சார்ந்த ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு சாராம்ச வாதமாகவே காணப்படுமானால் அதை பிற வேறு தளங்களுக்கும் கொண்டுசெல்வது சாத்தியமாகும். ஆணாதிக்க சமூகத்தின் கருத்துக்களை உள்வாங்கி அதை அப்படியே குரல்களாக மாற்றுகின்ற பெண்களும் இருக்கையில் பெண்களுக்காக குரல் கொடுக்க கூடிய ஆண்களும் இருக்கிறார்கள். அதேபோல், “ஆம்பளைக்கு இதுதான் அழகு” என்று காலம் காலமாக உட்படுத்தப்படும் சமுக, தனிமனித நடத்தைகளுக்கு ஆண்களும் உட்படுத்தப்படுகிறார்கள்தானே. படுக்கையில், பதவியில், பணம் சம்பாதிப்பதில் ஆண் தவறினால் ஆணாதிக்கச் சமூகம் அவனை எள்ளளவும் மதிப்பதில்லை. ஏன் ஆண்களுக்கு சமையலறை வேலைகளிலும் பிள்ளை பேணுவதிலும் வேலைக்குச் செல்வதைவிட அதிக ஈடுபாடு இருப்பது தவறா? எனவே, “ஆணாதிக்கம்” என்பதும் “பெண்ணியம்” போலவே ஒரு சாராம்சமாக மட்டுமே காணப்படவேண்டும். காரணம் அதன் பிடியிலிருந்து ஆண்களும் தப்பமுடியாது.

இந்த ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட ஆண்களில் பலருக்கு உலகமயமாதலும் முதலீட்டியமும் ஊட்டிக் கொடுத்த பல் அங்காடிக் கடைகளும், அயல் நாட்டு/உள் நாட்டு நீலப் படங்களும், சிகரெட்டுகளும், சிட்டாய்பறக்கும் ஊர்திகளும் (பெண்கள் இவர்களைக் கடந்து வேகமெடுத்துவிட்டால் இவர்களின் அகந்தையால் சகித்துக் கொள்ள முடியாது) சிலாகிப்பைப் கொடுக்கையில் அதே உலகயமயமாதல் கலாச்சாரங்களுக்கு உட்பட்டு தொழில் நுட்பத்துறைகளில் முன்னனியிலுள்ள பெண்கள் மதுக் கடைகளை நாடிச் செல்வது மிகவும் நோகடிக்கச் செய்கிறதென்பது ஆச்சரியமல்ல. அதைப்போன்ற ஒன்றுதான் ஸ்ரீராம் சேனாவின் அடக்குமுறையும்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தில்லியில் எம்.எப்.ஹுஸைனின் ஓவியக் கண்காட்சிக்குள் புகுந்து பட்டை கிளப்பிய இந்த ஸ்ரீராம் சேனை பிரமோத் முதாலிக் என்ற சிவசேனை மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் முக்கிய பிரமுகரால் தோற்றுவிக்கப்பட்டது. கர்நாடகாவைச் சார்ந்த கிறித்துவ தேவாலயங்களின் மீது தொடர்ந்து தாக்குதல்களை ஏற்படுத்திவந்த இந்த அமைப்பு மும்பை மாலேகாவும் குண்டு வெடிப்புடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டிருகிறது.

ஜனவரி 24 2009 அன்று, 27 பேர் கொண்ட ஸ்ரீராம் சேனையின் குழுவினர் மாங்களூரின் ஒரு மதுக்கடையில் நுழைந்து அங்குள்ள ஆண்களையும் பெண்களையும் அடித்துத் துன்புறுத்தியதுடன் ஐந்து பெண்களை மானபங்கப்படுத்தவும் செய்தனர். இதற்கு, விளக்கமளிக்கக் கோரி பிரமோத் முதாலிக்கிடம் கேட்டபோது “எங்கள் தாய்மார்களையும் குழந்தைகளையும்” காப்பதற்கான முயற்சியே இது என்று கூறியுள்ளார். என்ன கொடுமை சார் இது?

இது நடந்து பதினைந்தே நாட்களில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி சி-பி.எம் எம்.எல்.ஏ ஒருவரின் பெண் ஒரு முஸ்லீம் இளைஞனுடன் பரீட்சைக்குப் பஸ்ஸில் சென்றதைக் கண்டித்து அவர்களை 12 மணி நேரச் சித்திரவதைக்குட்படுத்தியது ஸ்ரீராம் சேனை.

இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே தில்லி மற்றும் இந்தியாவின் மற்ற பெரு நகரங்களைச் சார்ந்த பெண்கள் பெரும்பாலோர் கூடி “இளஞ்சிவப்பு நிற உள்ளாடை இயக்கத்தை” பிப்ரவரி 4ம் தேதி உருவாக்கியது. இந்த குழுவிpink-chaddi-1னரின் எண்ணிக்கை இப்போது 34 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. காதலர்கள் தினக் கொண்டாட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்ரீராம் சேனாவின் முகவரிக்கு இளஞ்சிவப்பு உள்ளாடைகளை (அவை பயன்படுத்தியதாகவும், மிகவும் மலிவானதாகவும் கூட இருக்கலாம்) அனுப்புவதும் குடிப்பழக்கம் இல்லாதவராயினும்கூட ஒரு குறியீட்டு ரீதியில் பக்கத்திலுள்ள மதுக்கடையில் சிறுது நேரம் இளைப்பாறிவிட்டு வரவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது இந்த இயக்கம்.

இளஞ்சிவப்பிற்கான எதிர்ப்புக் குரலாகப் பல குரல்கள் எழுகையில் மக்களின் மனத்திலுள்ள பல கருத்துக்களை அது இப்போது வெளிக் கொண்டு வந்திருக்கிறது. தில்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பிரமோத் குப்தா என்ற பி.ஜே.பி ஆசாமி ஸ்ரீராம் சேனாவிடம் அனுப்பிய அதே உள்ளாடைகளை காஷ்மீரைச் சார்ந்த துக்தரன் – ஏ-மில்லத் என்னும் பெண்கள் அமைப்பிடமும் லஷ்கர்-ஏ-தோய்பாவுக்கும் அனுப்ப முடியுமா என்று கேட்டுள்ளார்.

பிளான்க்னாய்ஸ் என்ற பதிவுத் தளத்தில் எழந்துள்ள ஒரு குரல் அத்து மீறிப் போன இந்த ஆணாதிக்கத்துக்கு எதிரான குரல் இளஞ்சிவப்பு உள்ளாடைகளுள் முடங்கிக்கிடக்க வேண்டுமா? தோலாடைகளையும் நவநாகரிக உடைamul1ளையும் போட்டுக்கொண்டு மதுக்கடைகளுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமே சுதந்திரத்தின் குறியீடுகளா? இந்துத்துவ பாசிஸ உடைக் கட்டுப்பாடுகளை விக்டோரியா சீக்ரெட் (ஒரு வியாபாரப் பிரசித்தி பெற்ற உள்ளாடை நிறுவனம்) உடைகளை வைத்து மாற்றுக் கொடுக்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளது.

மேற்கண்ட கேள்விகள் குறித்து இரண்டு பதில்களை உடனே வைக்கத் தோன்றுகிறது. ஒன்று இசுலாமிய மதம், தத்துவம், வழிபாடு என்பவையும் இசுலாமிய அடிப்படைவாதம் என்பதும் வேறு வேறு. அடிப்படைவாத அமைப்புகள் எந்த மதமாயினும் காதடைத்த வாச்சாம்பிள்ளையாகவே இருந்து வந்துள்ளன அவர்களிடன் நமக்கு எந்த பேச்சுவார்த்தையும் உடன்பாடும் கிடையாது. இது இந்து பாஸிஸ அமைப்புகளுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் நான் படித்த இரண்டு புத்தகங்கள் இதை விளங்கிக் கொள்வதற்கு மிகவும் வழித்துணையாய் இருந்தன. சபா முகமதின் பக்தி அரசியல் (Politics of Piety: Islamic revival and the Feminist Subject) மற்றும் லீலா அபுலுகாட்டின் முக்காட்டு உணர்வுகள் (Veiled Sentiments: Honour and Poetry in a Bedouin Society). லீலா தனது புத்தகத்தில் சமூகத்தின் தினசரி கலகக்குரல்களை புரிந்து கொள்ள முயற்சிக்கையில் அதன் நாயகர்களின் கவுரவம், நாயகத்துவம் என்பதைப் பற்றி மற்றும் யோசிக்காமல் காலப்போகில் அக்கலகத்தின் மாறுபட்டுவரும் அமைப்புகளை உற்று நோக்குதல் வேண்டுமென்கிறார். எடுத்துக்கட்டாக பவுடயின் என்ற சமூகத்தில் பெண்கள் கவர்ச்சியாக உள்ளாடைகள் அணிவது ஆணாதிக்க எதிர்ப்பாகவும் குடும்ப ரீதியான கட்டுப்பாடுகளை உடைத்தெரிவதாக இருந்தாலும் மேட்டுக்குடி நகரவாழ் இளைஞர்களிடன் உலகமயமாதல் கலாச்சாரம் வழங்கிய ஒரு எதிர்ப்புக் கருவியாகக் காண்கிறார். எகிப்தில் தோன்றிய “பெண்கள் மசூதி இயக்கம்” பற்றி விரிவாகப் பேசும் சபா முகமது, சுதந்திரம் என்பதன் விளக்கம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் குணாதிசயங்காளையும் ஒருவரின் தன்னிலையின் தேவைகளையும் பொருத்து அமையுமே தவிர உலகளாவியதொரு இச்சை/சுதந்திரம் (universal desire) போன்றவற்றுக்கான வரைமுறைகளை தருவிக்க முடியாதென்கிறார். சபாவின் மற்றொரு கோரிக்கை இந்த எதிர்ப்பு முறைகளுள் ஊடுருவி இருக்கும் காரணிகளை (agency) கண்டறிந்து அதன் மேல் நம் கருத்துக்களை வைப்பதன் மூலமே அதன் தன்மையை மாற்றி அதன் மூலம் எதிர்ப்பின் வரலாற்றுத் தன்மையையும் மாற்றமுடியுமென்பamul2து.

கல்லூரிகளில் ஜீன்ஸ் அணியக்கூடாது,  பூங்காக்களில் ஆண்கள் பெண்கள் பெண்கள் கலந்து பேசக்கூடாது (ஆண்களை அரை நிர்வாணமாக்கி திரும்பி நிற்கச்சொல்லியும் பெண்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரச்சொல்லியும் கண்டித்தது காவல் துறை ) போன்ற பல அடக்குமுறைகளுக்கும் குஷ்பு வழக்கிற்கும் இல்லாத அக்கரை இந்த விஷயத்தில் ஏற்பட அதிகரித்துவரும் இந்திய தொழில் நுட்பத்துறையைச் சார்ந்த மத்திய வர்க்கப் பிரஜைகளும் ஒரு காரணம். இவர்களின் கிருபையால் இன்று ஸ்பென்சர் பிளாசாவின் உள்ளேயும் வெளியேயும் இரு வேறு சமூகங்கள் ஏற்பட்டுள்ளன.

மெக்டொனால்டு, சப்வே போன்ற அமெரிக்க நிறுவனக்களில் ரொட்டிகளைத் திண்ணும் நாம் ஏன் உள்ளாடைக் கலகத்தில் ஈடுபடக்கூடாது என்ற கேள்விக்கு திரும்ப வருவோம். பல்வேறு வடிவமுள்ள கலகங்களில் இந்த உள்ளாடைக் கலகமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் உள்ளாடை மட்டுமே கலகக் குறியீடாகிவிடமுடியாது. தற்போதைய தகவல்: ஸ்ரீராம் சேனை பதிலுக்கு உள்ளாடை அனுப்பிய எல்லோருக்கும் இளஞ்சிவப்பு புடவைகளை அனுப்ப உள்ளது. இனி எல்லோரும் புடவைகள் அணிந்து கொண்டு மதுக்கடைகளுக்கு போகலாம். குடிப்பதும் குடிக்காததும் நமது விருப்பம்.

Advertisements