-தர்மினி-

என் பதின்மூன்று வயதிலிருந்துsnakewoman-copy
அடர்ந்த வனத்தில்
நடந்து திரிகின்றேன்
அங்கு பலவிதப் பாம்புகளைத் தேடியலைகின்றேன்.

சிறியது பெரியது
சுருண்டிருப்பது கயிறு போல் மெலிது
பச்சை மஞ்சள் கறுப்பு
கோடு போட்டது புள்ளிகளிட்டது
பல்வேறு வடிவங்களில்
சருகில் ஊர்ந்து செடிகளில் படர்ந்து
கொப்புகளில் சுருண்டு
இலைகளில் மறைந்து
பட்டைகளில் ஒட்டியும்
புற்றுகளில் பதுங்கியும் வாழுமவை.

சீறும் பாயும்
என் கால்களைச் சுற்றிக் கொள்ளும்
தடி கொண்டு தேடி
கழுத்தில் சுருக்கிட்டு
வால்பிடித்து சழட்டி உலுப்பி
சற்றும் தாமதியாமல்
வாயிலிட்டு மென்று விழுங்குவேன்.

எப்பாம்பும் என் கையையோ காலையோ கொத்தியதில்லை
ஆயினும் வாழ்நாளில் மலைப்பாம்பு ஒன்றைத்தானும்
நான் கொன்றதில்லை தின்றதில்லை
பாம்புகளின் வலிமை பற்றிய அலட்சியத்தில்
பெருமிதப்புடன் வெப்பக்காடுகளில் அலைந்தேன்
என் பாம்புப் பசி தீரவேயில்லை.

மழை பொழிந்த நாளொன்றில்
வீழ்ந்து கிடந்த மரக்கிளையில் பின்னிக்கொண்டு
கறுப்பும் மஞ்சளும் வெளுப்புமாக மினமினுத்தது மலைப்பாம்பு
இருகைகள் கால்களின் வலிமை
உடனிருக்கும் ஆயுதங்கள் கொண்டும்
அதை வென்றிட முடியவில்லை
அப்படியே விழுங்க
அகல வாயைக் திறந்தேன்
பாம்பின் வாயினுள்
என் இடுப்புவரை போயிருந்தது
கடைசியில்
ஒரு மலைப்பாம்பு என்னை விழுங்கியே விட்டது.

நன்றி : உயிர்நிழல்

July-December 2008

ஓவியம்: மோனிகா

Advertisements