-தர்மினி

shortfilms-21

கடந்த 22.02.2009 பரிசில் இரண்டு குறும்படக்காட்சிகளும் கலந்துரையாடலும் நடைபெற்றது. புதியவன்.ஆர் என்பவரால் எடுக்கப்பட்ட சன்னல் வழியாக (Through the Window) என்ற குறும்படம் மற்றும் ரவீந்திரன் பிரதீபனின் என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம் ஆகிய குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பிரதீபனின் குறும்படம் பற்றியும் அதையொட்டிய விவாதங்களையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

இக்குறும்படம் 2009 ஜனவரியில் பேர்லினில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்படவிழாவில் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட குறும்படமாகும். இதுவே முதலாவது தமிழ்க்;குறும்படமுமாகும்.வெளியீடு-எக்ஸில் இமேஜ்இதயாரிப்பு-லக்சுமி பிரதீபன்இ ஒளிப்பதிவு-சி.ஜே.ராஜ்குமார், கலை-பி.கிருஸ்ணமூர்த்தி படத்தொகுப்பு-ராகவா.எஸ்.அரஸ். இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களாவர்.

பத்தரை நிமிடங்களான இக்குறுஞ்சித்திரம் இலங்கைத்தீவின் யுத்தப்பிரதேசமொன்றில் நடைபெறும் சம்பவங்களைக் குறியீடுகளாக்கிக் கதை சொல்லி நகர்கின்றது. பனைகளும் வெளிகளும் நீர் நிறைந்த குட்டையும் பின்புலக்காட்சிகளாகவுள்ளன. இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீண்ட வீதியில் பாடசாலைச் சீருடையில் நடந்து வருகின்றனர். வெறுமையான செப்பனிட்டுப் பல வருடங்களானது போன்ற தோற்றமளிக்கும் சிதிலமடைந்த பாதையில் கதைத்தபடியே நடக்கின்றனர். பாடசாலை முடிந்து வருகின்ற இரு சிறுமிகளும் கைகளில் மாஞ்செடிகளை ஆளுக்கொன்றாய் ஏந்தியபடியே வருகின்றனர்.அவர்களது உரையாடலில் தமது நண்பி இன்று பாடசாலைக்கு வரமுடியாத காரணமாக அவளது தந்தை வெள்ளை வானில் கடத்தப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொள்வதிலிருந்து அவர்கள் வாழும் சூழல் அறிமுகப்படுத்தப்; படுகிறது. அம்மாஞ்செடிகளைத் தமது வீட்டுமுற்றத்தில் நடவேண்டுமென ஆர்வமுடன் பேசிக்கொள்கின்றனர். அவ்வுரையாடலை முறிப்பது போலப் பாதை இரு கிளைகளாகப் வேறு வேறு திசைகளாகப் பிரிந்து கொள்ள சிறுமிகளும் பிரிந்து நடக்கத் தொடங்குகின்றனர். அதிலே ஓர் சிறுமி தன் தம்பியுடனும் மற்றையவள் தனித்தும் பயணிக்கின்றனர்.

இருவரும் அவ்வேளையில் வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை. அவர்களுக்கமைந்த சூழ்நிலையே இரு வேறுபட்ட சாவுகளை வழங்குகிறது.

வீதியின் வேலியோரத்தில் சிறுநீர்கழிக்கும் இராணுவத்தினன் ஒருவனுக்காக இரண்டு ட்ரக் வண்டிகள் தரித்து நிற்கின்றன. புறப்படும் வாகனங்களில் ஒன்றின் முன்னிருக்கையிலிருந்து சிங்களமொழியில் பேசுவது காட்சிப்படுத்தப்படுகிறது. விரைந்து வருகின்ற வாகனங்கள் தனித்துச் செல்லும் சிறுமியின் பாதையில் செல்கையில் திடீரென நிற்கிறது. சிறுமி அவ்வாகனத்தின் நிழலினுள் பயந்தவாறு தயங்கி நிற்கிறாள்.

மற்றைய பாதையில் சென்ற சகோதரர்களைச் செடிகளின் மறைவிலிருந்து குரலொன்று மறித்து நிறுத்துகின்றது. இன்று தம்முடன் வருவதாகச் சொன்னதை அக்குரல் ஞாபகப்படுத்துகிறது. அக்குரல் பல நாட்களின் பேச்சுப்பரிவர்த்தனைகளின் முடிவாகத் தொனிக்கிறது. அது போராட்டக்குழுவொன்று இரகசியமாக ஆட்களைச்சேகரிக்கும் சூழ்நிலையையும் இராணுவ நிர்வாகப் பிரதேசமென்றும் பார்வையாளர்களால் ஊகிக்க முடிகிறது. சிறுமி செடிகளின் மறைவில் போக அவள் தம்பி தனித்து வீடு செல்கிறான்.

இருளில் வெளிச்சம் பாய்ச்சிய ட்ரக்கிலிருந்து இரு கைகளிலும் மனிதவுருவமொன்றை தூக்கி வந்து புதைக்கப்படுகிறது. அது ட்ரக்கின் நிழலில் தயங்கி நின்ற சிறுமியென உணர முடிகிறது.

அடுத்த காட்சியில் ஒட்டவெட்டப்பட்ட தலைமுடி விரக்தியை வெளிப்படுத்தும் கண்களும் ஆயுதமுhக மற்றைய சிறுமி காட்டப்படுகிறாள். பாழடைந்த சிறியதொரு கட்டிடத்திலிருந்து இராணுவத்தை எதிர்நோக்கிக் காவலிருந்து கண்காணிப்பவளாய் தோன்றுகிறது. அவளது துப்பாக்கி குறிபார்த்து நிறுத்தி வைக்கப்பட்டள்ளது. அவளோ சிந்தனைவயப்பட்டவளாக குச்சியின் நுனியால் சின்னதாக வீடொன்று வரைந்து அதன் முன்னே மரமொன்றும் வரைகின்றாள். படபடத்துக் கேட்கும் வெடிச்சத்தங்களால் திடுக்குற்றவளாகிறாள். இறுதியில் அவளது மரணமும் நமக்கு உணர்த்தப்படுகிறது. இருவேறு நிலத்திலும் காய்ந்து கருகிய மாஞ்செடிகள் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால் அவை ஒன்று போல தோன்றுகின்றது.

இயக்குனர் சொல்ல வந்ததைச் செப்பமாகவும் நறுக்குத்தெறித்தாற் போலவும் காட்சிப்படுத்தியுள்ளார். தமிழ் நாட்டுத் திரைப்பட தொடர்நாடகங்களின் தாக்கங்களால் தவிர்க்கமுடியாமல் ஈழத்தவர்களும் அம்மொழி நடையைப் பின்பற்றித் தொடர்நாடகம் சில குறும்படங்கள் என எடுத்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் மிக அவதானத்துடன் பேச்சு மொழியைக் கையாண்டுள்ளது. வெளிப்புறக்காட்சிகளும் லாவகமாகக் கையாளப்பட்டுள்ளது. சிறுமிகள் வளர்த்த மாஞ்செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்ப்பது பற்றிப் பேசிக் கொள்வதைப் பார்த்த பின்னர் இன்று வருவதாகச் சொன்னாயே என்ற குரலைக் கேட்கும் போது அவ்வாறான வாக்குறுதியைத் தவிர்க்கமுடியாமலே கொடுத்திருப்பதாக நினைக்கத் தோன்றுகின்றது அல்லது அது நிச்சயமற்ற ஒன்றாக நினைத்திருப்பதாகவும் பார்க்கலாம்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காவலரண்களைத் தாண்டிச் செல்லும் பெண்களின் அவலநிலையை அறிவோம். பாலியற் சீண்டல்களும் பாலியல் வன்முறைகளும் தம்மீது என்று நிகழுமோ என்ற அச்சத்துடனே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும். நாமறிந்த பல இராணுவத்தின் இதையொத்த பல உண்மைச்சம்பவங்கள் அவ்விடத்தில் ஞாபகம் வருவதை யாராலும் தவிhக்க முடியாது. இராணுவ வாகனத்தைப் பார்த்து மிரளும் சிறுமிக்கு நேருவதை வன்முறையற்றுப் பாத்திரங்களாலும் காட்சிகளாலும் இயக்குனர் காண்பித்துள்ளது திறமையே.

இலங்கையில் நடைபெறும் போர் சிறுவர்களைப் பல வகைகளிலும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. அவற்றில் நேரடியான சில விடயங்கள் இக்குறும்படத்தில் சொல்லப்படுகிறது. போராடப் போன சிறுமியின் ஏக்கத்துடனான இறப்பும் இராணுவத்தினிடையே தனித்துப் போய்க் காப்பாற்ற யாருமற்ற சிறுமியின் அந்தரிப்பும் தந்தை வெள்ளைவானில் கடத்தவதால் கலங்கிப் போகும் வாழ்வும் வாய் பேச வழியற்ற சிறுவனுமாக போர்க்காலச் சிறார்களின் வாழ்க்கை குலைந்து கிடப்பதையும் படம் சொல்கின்றது. இறுதியில் சிறுவன் தனித்துப் பாடசாலை சென்று வருகிறான. தம் இயக்கத்துக்கு பற்றைகள் மரங்களிடையே மறைந்திருந்து ஆட்சேர்ப்பதையும் வெள்ளை வான் கடத்தலையும் வைத்துப் பார்க்கையில் அதொரு இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசமென உணரமுடிகிறது.

இக்குறும்படக்காட்சி முடிவுற்ற பின்னர் அதைப்பற்றிய உரையாடல் நடைபெற்றது.அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

குறும்படத்துக்கான நேரவரையறை எவ்வளவு? எனக் கேட்ட போது அது அவ்விழாக்களை நடாத்துபவர்கள் நிர்ணயிப்பது. பொதுவாகப் பதினைந்து நிமிடங்கள் என பிரதீபனால் பதிலளிக்கப்பட்டது.

இது புலிகள் சார்பானதாக எடுக்கப்பட்டதாக ஒருவரால் கூறப்பட்டது.அங்குள்ள யதார்த்தமும் சிறுவர்களின் மீதான தாக்கங்களுமே தன்னால் பதியப்பட்டதாக பிரதீபன் பதிலளித்தார். எல்லாமே குறியீடுகளே எனவும் கூறினார்.

சகோதரி பிரிந்து செல்கையில் தம்பிக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை

எனவும் கருத்து வைக்கப்பட்டது.அது பல நாட்களாக தெரிந்த விடயம் போல் தோன்றுவதால் அதிர்ச்சியற்ற மௌனமான தொனி வெளிப்படுத்தப்பட்டதாகப் பாவையாளர் தரப்பிலிருந்து பதிலுமளிக்கப்பட்டது.

முகம் திரைப்பட இயக்குனர் அருந்ததி கச்சிதமாகவும் செப்பமாகவும் விடயம் குறும்படத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றார். மேலும் தேவையற்ற வெளிப்புறக்காட்சிகளை ஒரு குறும்படம் தவிர்க்க வேண்டுமெனவும் கருத்துச் சொன்னார்.

மனோ இது ;நம் பிரதீபனது குறும்படம் எனப் பெருமைப்படுவதாகவும் ஆனால் இதைப் பார்க்க முன்னரே அதிகமாகக் கேள்விப்பட்டதால் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதா

கவும் தற்போதைய நாட்டுவிடயங்களைக் கேள்விப்படும் போது இக்குறும்படம் பெரும் அதிர்ச்சி எதையும் தனக்கு ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்;. தயாரிப்புச் செலவு எவ்வளவு? எனவும் கேள்வி கேட்டார்.

தயாரிப்புச் செலவு 7000 ஈரோ எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்கள் எவரும் ஊதியம் பெறவில்லை என நன்றியுடன் நினைவிருத்தப்பட்டனர்.

மற்றொருவரினால்; இன்னுமோர் கருத்தும் சொல்லப்பட்டது. ஒரு

காலத்தில் மருத்துவபீட மாணவர்களே தமது படிப்பை விட்டு போராடப்போனதும் நிகழ்ந்தது” என்பதாக அது இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுகன் இதிலே சிங்கள மொழி இல்லையென்றால் அது பல்வேறு பரிமாணங்களைக் கொடுத்திருக்கக்கூடுமென்றார். மொழி இனம் என்ற வட்டங்களைத்;தாண்டிய பொதுவான யுத்தகால பிரச்சனைகளை அது புலப்படுத்தியிருக்கக்கூடுமென அவரது கருத்து அமைந்தது.

பின் குறிப்பு:

இன்னும் பல கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றன. அனைத்தையும் என்னால் எழுத முடியவில்லை காரணம் இக்குறும்படத்திரையிடல் நிகழ்வில் நான் ஞாபகத்தில் வைத்திருந்தவைகளையும் நினைவிலிருந்த பெயர்களையும் எழுதியுள்ளேன்.

Advertisements