-மோனிகா

சோளக்காட்டினடியில் ஒரு பானை

சொக்கத்தங்கம் என் முப்பாட்டன் வைத்துள்ளான்.flower4

இரவிரவாய் காயும் நிலவு

இன்றிலிருந்து இருநூறாம் ஆண்டில் காணாமற்போகும்.

மூக்கினிடத்தில் கொம்புள்ள மனிதனொருவன்

மூன்றாம் கிருகத்திலிருந்து இறங்கிவருவான்.

இடுகாட்டினிடையே ஒரு தேவதை தோன்றி

இழந்துபோன ஒரு இன்னுயிரை

என் இல்லத்திற்கு அழைத்துவருவாள்.

கண்கொண்டு பார்க்க, கை கொண்டு தீண்ட வேண்டாம் நாம் இனி,

உணர்வுகளுள் உதித்தெழும் உன் ஸ்பரிசமும் தோற்றமும்.

ஏழைத்தச்சன் கனவில் நீலத்தேவதை எழுந்து

எழில்மிகு சிற்பம் உயிர்க்கச் செய்வாள்.

வெள்ளையானை கனவில் புகுந்து கருவில்

முனிவன் தோன்றச் செய்யும்.

வெற்றிலைக் கிழவி நிலவில் அமர்ந்து

காறித்துப்ப நிலங்கள் சிவக்கும்.

அதிசயங்கள் கேட்டு வளர்ந்தோம் நாம்.

அறிவியல் படைத்திடும் உலகங்கள்

அழிவின் விளிம்பில் ஆகச்சலிக்க

பொய்யெனத் தெரிந்தும் புகலிடமாய் சில

அதிசயம் வேண்டும் அடியவள் விடுதலைக்கு.

Advertisements