-தர்மினிkanji-articles-photo

                    மலையாளத் திரைப்பட இயக்குனர் பிரியதர்ஸனின் வழமையான பாணியிலிருந்து தனித்து நிற்கும் படம் காஞ்சிவரம். பல வருடங்களாக இக்கதை தன் மனதில் இருந்ததாகவும் இதை இயக்கியது ஆத்மதிருப்தியைத் தந்தது எனவும் அவர் சொல்கிறார்.
                       தற்போதைய இந்தியாவில் நெசவாளிகள் தொழிலின்றித் தறிகளைத் தூசி பிடிக்க விட்டுக் கடன்பட்டுக் கஞ்சி குடிக்கிறார்கள். தீர்க்க முடியாத தொடர்கடன்களாலும் அரசின் அலட்சியத்தாலும் வேறு வழியற்றுக் குடும்பமாகத் தற்கொலை செய்யும் விவசாயிகள் போலவே குடும்பமாகத் தற்கொலையைத் தவிர வேறு முடிவு தெரியாது தடுமாறி நிற்கிறார்கள்.
காஞ்சிவரம் திரைப்படமும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து காந்தியின் மரணத்தின் பின்னான நாட்களில் முடிகிறது. 1948லிருந்து படம் ஆரம்பித்து அசைபோடும் நினைவுகளோடு நகர்ந்து ஆரம்பத் தொடர்பினூடே கதை முடிகிறது. திருவின் ஒளிப்பதிவு முக்கிய கதாபாத்திரம் போலப் பெரும் பங்களிப்பைச் செய்கிறது. துணைப்பாத்திரங்களும் இயல்பான நடிப்பைத் திறம்படச் செய்கின்றனர். பிரதான பாத்திரமேற்ற பிரகாஷ்ராஜ் அப்பாத்திரத்தில்  மிகை நடிப்பை வழங்கியதாகவே அவரது உடல்மொழி, பேச்சுத்தொனி தோன்றுகிறது.

            இங்கு கதாநாயகனென அவரைக்குறிப்பிடவில்லை. வழமையான தமிழ்ச் சினிமாக் கதாநாயகர்கள் போல பத்து இருபது பேர்களை அடிக்கவில்லை. பத்துப் பேரிடம் அடிவாங்குகிறார். நீதி நேர்மையை எச்சந்தர்ப்பத்திலும் பேணாமல் திருடனாகவும் சுயநலக்காரனாகவும் இருக்கிறார். வழமையான சினிமாவில் கதாநாயகன் இறுதியில் குடும்பத்துடன் இணைந்து விடுவான். முடிவில் மனைவியும் மகளுமின்றித் தனித்து நிற்கிறார். சிறைக்குப் போன பின்னணிக்கதையில் அவனது வளமையான வாழ்வு சொல்லப்படும். இதில் வறுமையான வாழ்க்கை மட்டுமே பின்னணிக்கதை. சிறையிலிருந்து  பெயிலில் அல்லது தப்பிவரும் கதாநாயகன் பழிவாங்குவான். காஞ்சிவரத்தில் தன் இயலாமையில் மகளைக் கொல்கிறார் வேங்கடம்.

                ஸ்ரேயாரெட்டி அன்னம் பாத்திரத்தில் வேங்கடத்தின் மனைவியாக நடிக்கிறார். சோடியாக நடிப்பிலும் விளங்குகிறார். ஆனாலும் அவருக்குப் பின்னணிக்குரல் கொடுத்த ரோகிணியே அன்னம் பாத்திரத்தில் நடித்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.

                 பட்டு என்றால் காஞ்சிபுரம் என்பர். கோயிலை அண்மித்த வீதிகளெங்கும் பட்டுசேலை விற்கும் கடைகள் காணப்படும். காஞ்சிவரத்தில் வாழ்ந்த பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையின் வறுமையும் அந்தக் காலகட்ட வாழ்வும் படத்தின் மைய இழையாகப் பின்னப்பட்டுள்ளது. ஒரு பட்டு நெசவாளியின் வீட்டுப் பெண் பட்டுச்சேலை உடுத்த ஆசைப்படுவது நிறைவேறாத பேராசையாகிப் போகின்றது. வீடு கட்டுந் தொழிலாளி வீதியோரத்தில் படுப்பதும் போர்வை நெய்பவன் குளிருக்கப் போர்வையற்றிருப்பதும் விவசாயி வெறும் வயிறாய்க் கிடப்பதும் போல பல பட்டுச் சேலைகளை நெய்பவன் அதைக் கனவு காண்பது பேராசையாகி நிராசையாகிறது. தன் திருமணத்தில் மனைவிக்கு பட்டுடுத்தி அழைத்து வருவதும் பின்னர் மகளுக்காவது பட்டுடுத்திக் கல்யாணம் செய்ய விரும்புவதும் பல வருடங்களாக முயற்சித்தும் முடியாத காரியமாகின்றது.

                     வேங்கடம் திருமண மாலையும் மனைவியுமாக ஊருக்கு வருகிறார். பட்டுடுத்திக் கூட்டி வருதாகச் சொன்னாயே என ஊரார் கேலி செய்கின்றனர். தனது இயலாமையைக் கைகளை விசுக்கி அலட்சியமாக நடந்து போய் மறைத்து விடுகிறார்.

                                 நெசவாளர்களுக்கு நியாயமான கூலி வழங்காமல் கலைத்திறனுக்குச் சரியான பெறுமதி கொடுக்காமல் அதிகாரியும் வியாபாரிகளும் பெரும் இலாபம் சம்பாதிக்கின்றனர். அதிகாரியின் மகளுக்கு நெய்யும் சேலை பற்றி ஆர்வமுடன் வேங்கடம் பேசுகிறார். அன்னம் பார்க்க ஆசைப்பட்டும் அச்சேலையைப் பார்க்கமுடியவில்லை. அவர்களது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுகையில் ஊரார் மத்தியில் அக்குழந்தைக்கு வாக்களிக்கிறார். திருமணத்திற்குப் பட்டுச் சேலை கட்டுவாள் என்ற வாக்குறுதி அனைவரையும் திகைக்க வைக்கின்றது. அன்றாடம் அதைத் தொட்டு நெய்யும் ஒருவனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் உடுத்த முடியாத ஏக்கத்தின் யதார்த்தமது.

                 அதிகாரியிடமிரந்து நூலை வாங்கி நெய்து கூலி வாங்கும் தொழிலாளர்கள் அளவுக்கதிகமான நூலைப் பெறுவதாகக் குற்றஞ் சுமத்தப் படுகின்றனர். பொது இடமான கோயிலில் வந்து நெய்து வீடு போக வேண்டுமென உத்தரவிடப் படுகிறது. முன்னரும் பின்னரும் பரிசோதிக்கப் படுகின்றனர். தன் வாக்குறுதியை நிறைவேற்ற வழியற்ற வேங்கடம் வாய்க்குள் பட்டு நூலை
மறைத்து எடுத்துவருகிறார். மனைவிக்கும் தெரியாமல் மாட்டுத் தொழுவத்தில் இரவு நேரங்களில் இரகசியமாகக் கொஞ்சங் கொஞ்சமாக நெசவு செய்கிறார்.
                 மனைவி நோயில் இறந்த விட மகளுடன் சிடுசிடுத்துக் கொள்ளும் தகப்பனாக அடுத்த கட்டத்துக்குக் கதை நகருகிறது.
 
              கம்யூனிச இயக்கத்தின் கூட்டங்களில் இரகசியமாகப் பங்கெடுத்துக் கொண்டு நாடகங்கள், புத்தகங்கள், பிரசுரங்களென ஈடுபாடு ஏற்படுகிறது. சட்டப்படி அவ்வியக்கம் அங்கீகரிக்கப் பட சுத்தியலும் அரிவாளுமாகச் சிவப்புக் கொடி பறக்க அவர்களது கோரிக்கைகள், வேலை நிறுத்தங்களை வேங்கடம் முன்னெடுக்கிறார். மூன்று மாத வேலை நிறுத்தத்தால் பட்டினி கிடந்தாலும் நெசவாளிகள் உறுதியாக நிற்கின்றனர். இருபது வீத சம்பள உயர்வு போதாது மற்றைய கோரிக்கைகளும் நிறைவேற வேண்டுமென உறதியாக நின்ற வேங்கடம் ஒரு சந்தர்ப்பத்தில் மாறிப் போக நேரிடுகிறது.மகள் விரும்பிய கல்யாணத்தை விரைவில் செய்து வைக்க வேண்டிய கட்டாயமேற்படுகிறது. பதினாறு வருடங்களாக நெய்தும் குறையாகத் தறியிலிருக்கும் சேலையை நெய்திட வேண்டும். இது வேங்கடத்தின் கொள்கையை உறுதியைக் குலைத்து விடுகிறது. பட்டுச் சேலை வாக்குறுதியை கைவிடாமல் தம் கட்சியின் போராட்டத்தைக் கைவிடுகின்றார்.அதற்காகத் தோழர்களுக்குச் சாதுரியமான சாட்டுகளைச் சொல்லி வேலைக்குப் போகிறார். இதனால் கோபப்பட்ட சில தோழர்கள் ஏற்கமறுத்து வேங்கடத்தின் மேல் கோபப்படுகின்றனர்.  மீண்டும் மிகுதிச் சேலையை நெய்திட வாய்க்குள் பட்டு நூலை மறைத்தெடுத்துச் செல்கையில் பிடிபட்டு அடித்து உதைக்கப்படுகிறார். அவர் மீது வெறுப்புற்றிருந்த தோழர்களும் நூலுக்காகத் தான் போராட்டத்தைக் கைவிட்டதாக அகன்று செல்கின்றனர்.
                               ஒரு பட்டுச் சேலையின் கனவுக்காகக் கட்சிக்கு விசுவாசமில்லாத ஏழைத் தொழிலாளி தான் வேங்கடம். படம் பார்க்கும் போது பட்டுச் சேலை தான் முக்கியமா? என்ற கேள்வி ஏற்படுகிறது.அது அக்காலம், சூழல், அவர்களது மனநிலைகளின் பிரதிபலிப்பை உணர முடியாததாகவும் இருக்கலாம். வறுமையும் பிழியப்படும் உழைப்பின் கனத்தையும் உணர்ந்திடப் படைக்கப்பட்ட பாத்திரம்.
                          திருடனென்று கைது செய்யப்பட்டு சிறை சென்ற வேங்கடம் படுத்த படுக்கையாகக் கைகால் வழங்காமல் கிடக்கும் மகளைப் பார்க்க இரண்டு நாட்கள் அனுமதி பெற்று இரு பொலிசாருடன் ஊருக்கு வருகிறார். பராமரிக்க ஆளின்றியிருக்கிறாள் மகள். நஞ்சு கலந்த சோறையூட்டி மகளைக் கொல்கையில் அச்சமூகத்தின் கையறு நிலை தான் மனதில் தோன்றுகிறது. சமூகப் பாதுகாப்பற்ற நாடுகளில் அரசின் பராமரிப்பு ஏழைகள்,அனாதைகள்,விதவைகள்,நோயாளிகளுக்கு இருப்பதில்லை.
பதினாறு வருடங்களாக நெய்தும் பாதி கூட முடிக்காத சேலையை அரிவாளால் வெட்டிக்கொண்டு வந்து பார்க்கையில் தலை மூடப்பட்டால் கால் மூடவில்லை. கால் மூடினால் முகம் தெரிகிறது. திரும்பத் திரும்ப ஓடியோடி அதைச் செய்கிறார் வேங்கடம்.
                 எந்த விதமான வணிகச் சமரசங்களுமற்ற திரைப்படம் காஞ்சிவரமெனலாம்.பதினாறு வயதினிலே பூச்சுகளற்ற கிராமத்தைக் காட்டியதைப் போல காஞ்சிவரத்தில் நெசவாளரின் வறுமையும் வாழ்வும் மட்டுமே முன் வைக்கப்பட்டுள்ளது.இடையிடையே சம்பந்தமற்று வந்து போகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமில்லை.கனவுப் பாடலும் இல்லை. கசங்கிய ஆடைகளுடன் தான் அனைவரும் தோன்றுகின்றனர். ஒரு சமூகத்தின் பாசாங்கற்ற வாழ்வு திரையில் தெரிகையில் இது வழமையான தமிழ்ச் சினிமா அல்ல என்ற உணர்வேற்படுகிறது. சேரனின் பொற்காலத்தில் மீனா நெசவடித்த படியே முரளியுடன் பாட்டுப்பாடுவது தான்  நினைவுக்கு வருகிறது. ஏதோ சமூகப் பிரச்சனையைத் தொட்டு  அதை இடையிடையே தூவி மசாலா மணக்கக் கொடுக்கும் படங்கள் பாட்டினாலும் பளபளப்பாலும் புரட்சிப் படங்களெனப் புழுகப்படுவதைத் தான் பார்க்கிறோம். சங்கர் இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குனர் எனத் தலையில் வைத்துக் கூத்தாடுகிறார்கள். இந்தியன் படத்தில் இலஞ்சத்தை ஒழிக்க ஊர்மிளாவின் கவர்ச்சி,செந்தில்,கவுண்டமணி இன்னும் பல துணைகளைத்தேடினார்.                                                                                                         பருத்திவீரன்,வெய்யில்,காதல்,சுப்பிரமணியபுரம் யதார்த்த சினிமாக்கள் என்பவர்கள் காஞ்சிவரம் திரைப்படம் பார்த்தால் சமூகப்பிரச்சினை,யதார்த்தம் சொல்லும் படம் இதுவே என்பதை ஒத்துக்கொள்வார்கள்.
Advertisements