-மோனிகா

poo

தமிழ் சினிமாவின் வரலாற்றில் அவ்வப்போது தலை நிமிர்த்திப் பார்க்கும் யதார்த்தவாத படங்களின் காலம் கடந்த ஆறேழு ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையை அடைந்துள்ளது. இத்தாலியின் நியோ ரியலிஸப் படங்களுக்கு இணையாகவும் அதே நேரம் நமது கிராமங்களின், சிற்றூர்களின் கலாச்சாரத்தை சரியாக வெளிக்கொணர்ந்த இப்படங்களில் வெள்ளை உடையணிந்து சூரியகாந்திப் பூக்களிடையே ஓடிக் கொண்டிருக்கும் கிராமத்துக் கதாநாயகிகளோ நொடிக்கு நூறு முறை ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும் நடுத்தரவர்க்கமோ இல்லை. காதல், பருத்திவீரன், வெய்யில், கல்லூரி, பள்ளிக்கூடம், சுப்பிரமணியபுரம், காஞ்சிபுரம், வெண்ணிலா கபடிக்குழு என்று நீண்டு கொண்டே செல்லும் இந்தப்படங்களின் வரிசையில் இன்னொன்றுபூ”.

மேற்கொண்ட படங்களில் பெரும்பானவற்றின் யதார்த்தவாத்தின் இரண்டு முக்கிய கூறுகள்: 1. பெண்கள் கற்பழிக்கப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டு சமூகத்தினரால் இழித்து நடத்தப்படுவார்கள். 2. விளிம்பு நிலை சமூகத்தினை சேர்ந்த ஆணாக இருந்தால் காதல் கை கூடும் முன் படத்தின் நாயகன் மரணமடைவது அல்லது பைத்தியம் பிடித்து ஓடுவது. யதார்தத்தை வெளிக்கொண்டுவரும் அதே நேரம் அதன் நெடியை ஒரு மடங்கு அதிகரிக்க எண்ணி சமூகத்தில் பெண்களுக்கும் விளிம்பு நிலையினருக்கும் ஏற்படும் அநீதிகளையும் அவர்களின் ஆசாபாசங்களையும் சித்தரிக்க எத்தனிக்கும் இப்படங்களில் பெரும் மறதிக்கு உள்ளாவது ஒரு விடயம். அது என்னவென்றால் ஏற்கனவே கற்பிதமாக்கப்பட்ட சமூக உறவுகளைத் தட்டிக் கேட்பது. யதார்த்தத்திலிருந்து கற்பிதங்கள் வேறுபட்டவை என்று உணரச் செய்வது.

அவ்விதமான யதார்த்த பாணி படங்களிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டுப் போகிறது “பூ”. விளைச்சலில் பெரிதும் விந்தைகள் நிகழ்த்தாத ஒரு பிரதேசம், கள்ளிப் பழம், பட்டாசு பேக்டரி என்று விரிந்து செல்லும்பூவின் நிலப்பரப்பில் பெண்களை மோகிக்கும் ஒரு தொழில்சாலை மேலதிகாரி பெரிய வில்லனாக விஸ்வரூபம் எடுப்பதில்லை. சராசரி மாமன் மகன், அத்தை மகள் காதல் கதையாக இருந்தபோதும் காதலைப் பற்றி ஒரு வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுத்துள்ள படம் இது. மனதால் கெட்டுவிட்டவள் உடலாலும் களங்கப்பட்டதற்கு சமானம் என்னும் தமிழ் சினிமாவின் இலக்கணத்திற்கு மாறுபட்டு இருபாலார்க்கும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறையும் அன்னையைப் போன்றதொரு உணர்வுமே கடைசிவரை காதலாக நிலைத்துவிடுவது இக்கதை. குடும்பம், திருமணம் போன்ற அமைப்புகளுக்கு வெளியேயும் நீட்சி பெரும் ஒரு அன்பின் கதையை காதல் கதை என்றும் வைத்துக் கொள்ளலாம். தமிழ்ச்செல்வனின் இந்தக்கதை எண்பதுகளில் எடுக்கப்பட்டிருந்தால் எப்படிப்போயிருக்கும் என்று நம்மால் கணிக்க முடிகிறது. அன்னக்கிளி, அழகி வரிசையில் வரும் மாரியின் கதை கிராமத்தைப் பற்றியும் பட்டாசுத் தொழிற்சாலையில் (ஆபீஸ்!) கூலி வேலை செய்யும் பெண்ணின் மனநிலையையும் மிகைப்படுத்தாமல் காட்டி மனதைத் திருடிவிட்டது. உறவில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்றதொரு விடயம் மட்டும் மனதை நெடுகுகிறது. அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் பாதிப்பேர் ஊனமுற்றோர்களாகவும், மனநோயாளிகளாகவுமல்லவா ஆகியிருக்கவேண்டும்.

ஆஊவென்று ஒவ்வொரு பாடல் காட்சிக்கும் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்வதில் விதிவிலக்கு வாங்கிய படங்களில் ஒன்றான இப்படத்தில் மாரியின் வெகுளித்தனமும், இயற்கையான நடை, உடை பாவனைகளும் படத்தின் நாயகி பார்வதி மேனனிடம் நன்றாகவே பொருந்தியுள்ளன.

சசியைப் பாராட்டச்செய்வது மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட கதைகளை இனியும் தமிழ் சினிமா காணக் கூடும் என்ற நம்பிக்கையளித்துள்ளது “பூ”.

Advertisements