-லீனா மணிமேகலைbirds

என் கால்களுக்கிடையில்
ஒழுகும்
ஒரு குவளைக் கள்
பரவசத்தின் துடி

தொடைச்சூட்டில் கனன்று
புளித்த
இளந்தேறல்
தீவிரம் அடைகிறது

நான் பார்த்திருக்கிறேன்

அகவைகளை
ஆடியின் குறுக்கொடித்து
அது கடந்து செல்கிறது
உற்று நோக்கும்
காலக் கணிகனால்
ஏதோன்றும்
சொல்லிவிட முடியாத
அடர்த்தியின் நகர்வில்

இடுப்பின் கீழ் இறுக்கிக் கட்டப்பட்ட
என்
கன்னிமையின் வெற்றிடம்
யாரும் அறிய முடியாதது
ஒரு புதியவனுக்கானது
என் கற்பின் கட்டியங்காரி
நான்
விகசிப்பில்
குவளையின் நாடி
துள்ளுகிறது
கள்ளின் பதத்தில்
இளவரசி என்
இரகசியங்களுக்கு
விடைகளில்லை

பித்தம் பின்ன
தொடைகள் பொங்கி
குவளையை நசுக்குகின்றேன்
கொதிக்கும் கள்ளைப் பிழிந்து
நீண்ட யுகத்தின் ரசமாக
இதழ்களுக்கு பருகத் தருகின்றேன்

(உலகின் அழகிய முதற் பெண் தொகுப்பிலிருந்து)

ஓவியம்: மோனிகா

Advertisements