-லீனாமணிமேகலை

dhruvi இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு
தூம கிரகணம்
நிலவைக் கவ்விய யோனியின் வாதை
செந்நதியெனப் பாய்கிறது

வண்ணக் கிண்ணங்களில் குழிந்து
என் தேவதையை வரைகிறது

தோட்டப் பாத்திகளில் நிறைந்து
காமத்திகளை மலர்த்துகிறது

கெட்டித்துச் சிவந்து மெழுகு மிட்டாய்களாகி
குழந்தைகளோடு விளையாடுகிறது

குருதி ரசமென இனித்து திரண்டு
தாகிகளின் சாபத்தை முடிக்கிறது

நெசவு பாவுகளின் சாயமேறி
நாளைய காதலாகளின் உடையாகிறது

தாதுக்களின் அணுவில் நுழைந்து
விசையின் கணிதப் பந்துகளாகிறது

சிவப்பு வைர ஊசிகளென குத்திட்டு
மர்ம விதானங்களில் ஒளிர்கிறது

பிரபஞ்சத்தின் ஆதி உடலை உவந்து
இருப்பை உடைப்பை
பாய்ச்சலை துய்ப்பை
செங்கொடியென பறத்துகிறது
வாழ்வெனும் மாய ஒளிக்கூட்டின்
கங்குகளை ஊதிப் பெருக்குகிறது

( உலகின் அழகிய முதல் பெண் கவிதைத் தொகுப்பிலிருந்து)

ஓவியம்: துருவி ஆசார்யா

Advertisements