-லீனாமணிமேகலை

ரத்தம் பேசும், ரத்தம் மணக்கும், ரத்தம் பரப்பி வைத்திருக்கும் காட்சியாய் நகரம்.
ஆட்கொல்லி நோயின் ரத்தம், கருக்கலைப்பின் ரத்தம் ஓருடலிலிருந்து மற்றதற்கு பீய்ச்சப்படும் ரத்தம், பாவமன்னிப்பின் ரத்தம், கருணையின் ரத்தம், காவின் ரத்தம், காளி பருகும் ரத்தம், புராண நாயகர்களின் ரத்தம், கிறிஸ்துவின் ரத்தம், கருணைக் கொலையின் ரத்தம், தண்ணீரை விட அடர்ந்த குடும்ப ரத்தம், சொந்த ரத்தம்.

விபத்தில், காயத்தில், காமத்தில், கல்வெட்டுகளில் காய்ந்த ரத்தம்.தொலைக்காட்சியில், சினிமாவில், கொலையின், தியாகத்தின், பழிதீர்ப்பின், துரோகத்தின், பலியின்,  எச்சரிக்கையின், அச்சுறுத்தலின், அபாயத்தின் புனைவு ரத்தம்.

பெயரில் உள்ள ரத்தம், பொதுவெளிப்பாட்டின் ரத்தம், செம்மறி  ஆட்டின் ரத்தம், மூதாதையின் ரத்தம்.
சேவல் குரல் வளையின், ரத்த சகோதரர்களின், ரோஜா முட்களின், நிலவின், காட்டேறிப்பற்களின், கண்ணகியின், பேய்க்கதைகளின் உறைந்த ரத்தம்.

கண்ணீர், வியர்வை என வெளியேறும் ரத்தம். சனிக்கிழமை இரவின் ரத்தம், சுடப்பட்ட, சுட்டு மூடப்பட்ட, சிறு கோடென குரல்வளை கிழிந்த, வெட்டப்பட்ட, பிளக்கப்பட்ட, மூக்குடைந்த, வயிற்றுப் புண்களில் ஊறிய, விசக் கொடுக்குகளின் வழிந்த ரத்தம்.

புலனாய்வு நிபுணனின் கைகளில், மருத்துவனின் வெண்ணங்கியில், கசாப்புக் கடைக்காரனின்eyeofhorus-egypt போர்த்தலில், பிச்சைக்காரனின் ஏந்தலில், சாமியாடியின் சலங்கையில் தெறித்த ரத்தம்.

பெரும் யுத்தங்களில், கூட்டுக்கொலைகளில், இன அழிப்புகளில், வாய்க்கால்களில், ஆறுகளில், மணல் மேடுகளில், உயர்ந்த கட்டடங்களில், நாட்டின் எல்லைகளில் ஊறும் ரத்தம்.

குழந்தைகளின் அறைந்த காதுகளில், மனைவியின் கிழிந்த உதடுகளில், அவ்விள வயதுக்காரனின் பெயர்ந்த தாடையில், அவசர சிகிச்சைப்பிரிவுகளில், கார்களின் பின்புற இருக்கைகளில், தார்ச்சாலைகளில், காவல் நிலைய கண்காணிப்புக் கொட்டடிகளில், தெருவில் பொருதி சரியும் உடல்களில், துப்பாக்கி சல்லடையாக்கப்பட்ட மனித உடல் துவாரங்களில், செய்தித் தாள்களில், கைக் குட்டைகளில் இன்னும் உடைகளில் ஒட்டிக் கொண்டும் வீடு வந்து சேர்ந்து விடும் ரத்தம்.

விந்தை, புனிதம், மாந்திரீகம், மதம், அதிகாரம், வரலாறு கோரும் ரத்தம்.

எங்கெங்கும் ரத்தம்.

ஆனால் ரத்தத்தின் ரத்தம், கத்தி கீறாத, அழிவை நிகழ்த்தாத, வன்முறை இல்லாத மாதவிடாய் ரத்தம்.மறைவிடம் ஓடி, அறைகளை அடைத்து, பொருத்துகளை மாற்றும் வேளையிலும்,  உறிஞ்சும் துணியில் உலர்ந்து விறைத்துக் கெட்டித்த, பெண்களே தவிர யாரும் காண முடியாத, ஊற்றி அலசித் தடயங்கள் துடைத்த, அருவருக்கப்பட்ட கருவறையின் தூய ரத்தம்.

நூற்றாண்டு விம்மல், புராதன ஊற்று, நிராயுதபாணி, மெளன நீர்வீழ்ச்சி, ஒவ்வொரு பிறப்பும் அருந்தும் இரகசிய ரத்தம், ரத்தத்தின் மூலம் தூமை. ரத்தத்தின் அந்தம் தூமை.

நன்றி:  உலகின் அழகிய முதற் பெண் கவிதைத் தொகுப்பு

Advertisements