-தர்மினி

வார்த்தைகள் வாக்கியங்கள் வரட்சியாகி(ச்)
சொற்கள் தீர்ந்ததாக
நீ சொல்லும் போதும்-அவை
முற்றுப்புள்ளியை எட்டாது
தொடரும் வார்த்தைகளுடன்lips
பேசிச் சிரித்து வாதித்து
அழுதும் அரட்டியும்
விரட்டியபடியவை பின்னே வந்து
என் கண்கள் களைத்த துயிலில்
தலையணைக்கீழ் ஒழிந்து
விழிக்கையில்
வேகமுடன் தொற்றிப் பற்றிடுகையில்
முற்றுப்புள்ளியற்ற நமதுரையாடலில்
உந்தன் குரலற்ற வெளி நீண்டு செல்ல(க்)
கோடிட்ட இடங்களை அவ்வப்போது நீ நிரவிட-அவை
முற்றுப்புள்ளியை எட்டாது
தொடர்ந்தும் நமதுரையாடலில்………………………….
அலட்சியம்

உனது வீரியமிக்க வாற்பேத்தைகளிலொன்று
அவள் வயிற்றில் நீந்திடுமென நடுங்குவாய்.

வார்த்தைகளின் மேன்மைகள் கயிறாய்ப் பிணைத்திருக்க
நாக்கு நீட்டிக் கொத்துமோவென அஞ்சுவாய்.

நட்பு வட்டத்தின் விளிம்பில் நிறுத்தி
உள்ளே வெளியே குதிக்கச் செய்வாய்.

தாளந் தப்பிடும் வேளைகளிலெல்லாம்
நெருப்பு வளையமாக வீசியெறிந்து
சுட்டு விட்டு
வேடிக்கையென்று கைதட்டிச் சிரிப்பாய்.

அலட்சியப்படுத்துவதால்
கவனங்கொள்!
நீயல்ல, இப்போது அவள்
அலட்சியப்படுத்துவதால்
சூட்டியுள்ள முடியில்
மேலுமதிகமாக ஒரு கல் மின்னுவதை உணர்கின்றாள்.

நன்றி: உயிரோசை

Advertisements