-தர்மினி

சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. தவறான எண்ணத்துடனான தொடுகை நேரடியான பாலியல் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியிலான கி;ண்டல் கதைகள் என்பனவாகவும் இன்னும் விரிவாகவும் சொல்லிச் செல்லலாம். மேலும் அவர்களின் வறுமையைப் பயன்படுத்திச் சமூகத்தால் பாலியற் தொழிலாளர்களாக்கப்படுவதும் கூட ஒரு வகையில் வன்முறைதான்.

பாலியல் ரீதியான பேச்சுக்கள் அச்சிறார்களின் மனதில் என்றும் நிலைக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அவை மனதைத் துன்புறுத்தி வெறுப்புணர்வுடன் தங்கிவிடுகின்றன. அவர்களைச் சுற்றியுள்ள உறவு நட்பு அயல் பாடசாலை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிலிருந்து இவை நிகழ்த்தப்படுகின்றன. பாதுகாக்க வேண்டியவர்களும்  அரவணைப்புக்கும் ஆறுதலுக்குமானவர்களே அவற்றைச் செய்வது துயரமானது கொடுமையானது. வழிபாட்டுத் தலங்களெனும் போது சாமியார் மடங்களின் கதைகள் அறிவோம். சாய்பாபாவின்  பக்தர்களான பதின் பருவச் சிறுவர்களின் குற்றச்சாட்டுகள்  ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

இங்கு எழுதப்போவது பன்னிருவயதில் மைனா என்ற சிறுமிக்குத் தேவாலயமொன்றில் நடைபெற்ற சம்பவத்தைத் தான்.

பாவமன்னிப்பு

மைனா சூசையப்பர் கோயிலுக்குத் தான் நினைவறிந்த நாளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப்

mina

போய்க் கொண்டிருந்தாள். அவரது கையிலிருக்கும் காய்ந்த தடியில் எப்படி இரண்டு வெள்ளைப் பூக்கள் மட்டுமிருக்கின்றன? என்ற கேள்வியோடு சூசையப்பர் சொரூபத்தைப் பார்த்தவாறேயிருப்பாள். மைனா பிறந்த நாற்பதாவது நாளில் அவளொரு கத்தோலிக்க திருச்சபை உறுப்பினாராக்கப்பட்டாள். அச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட கடவுளையும் புனிதர்களையும் வணங்க வேண்டுமென அவள் குடும்பத்தார் இந்த முடிவையெடுத்திருந்தனர். ஞானஸ்நானம் பெறப்பட்ட பின் வயதிற்கேற்றவாறு அச்சபையின் சட்டத்தின் படி ஒவ்வொரு அருட்சாதனங்களாகப் பெறவேண்டும்;. அச்சிறுவயதில் பாவம் நரகம் பற்றிய பயமுறுத்தல்கள் அவளைச் சுற்றியிருந்தன. இதிலே பெரும் பங்காற்றியவர்கள் பெற்றோரும் சமயபாட ஆசிரியர்களுமே. அவற்றில்  உதாரணமாக ஒன்றைப் பாருங்கள். கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிறுவட்டமான மெல்லியதாகக் கடதாசி போன்ற அப்பத்தை(நற்கருணை) நாக்கை நீட்டிப் பெற வேண்டும். அதைக்கடித்தால் இரத்தம் வரும் அப்படியே மென்று விழுங்க வேண்டும். இந்த மிரட்டற் கதையால் தப்பித் தவறிக் கடிபடுமோ என்ற பயப்பிராந்தியுடன் தான் அதை விழுங்குவாள்.

பத்து வயதில் முதல்நன்மை பெற்றதிலிருந்து ஒரு ஞாயிறு கூடத் தவறாமல் பூசைக்குப் போய்விடுவாள். ஞாயிறுக்கிழமை கடன் திருநாள் போகாவிட்டால் பாவங் கிடைக்கும் என்று சொல்லித்தரப்பட்டிருந்தது. மோயீசனால் இறைவனிடமிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்ட பத்துக்கட்டளைகளும் திருச்சபையின் ஆறு கட்டளைகளும் நித்திரையிலிருந்து தட்டி எழுப்பிக் கேட்டாலும் சொல்லுமளவுக்குப் பாடமாக்கியிருந்தாள். இவற்றில் ஏதாவது ஒன்றை மீறினாலும் பூசைக்கு முன் பாவமன்னிப்பைப் பெறவேண்டும் என்று படிப்பித்திருந்தார்கள். ஆனாலும் தங்கைச்சிக்கு அடிப்பது பாவம் என அம்மா வெருட்டுவாள். சரி பாவமன்னிப்பைக் கேட்டு விடுவோம் என்ற நினைப்புடன் பாவசங்கீர்த்தனம் செய்வாள். பாவசங்கீர்த்தனத் தொட்டி எனச் சொல்லப்படும் கதிரையின் இடது வலது பக்கங்களில் திரைச்சீலை போட்டு முகம் தெரியாது மறைக்கப்பட்டிருந்தாலும் நன்றாகப் பழகுபவர்களின் குரலை வைத்து பாதர் கண்டுபிடிக்கலாம்.இதனால் பாட்டுக்காரர்களான இளம்பெண்கள் போகவிரும்புவதில்லை.

தங்கைச்சிக்கு இனிமேல் அடிக்கக் கூடாது என்று விட்டு ஒரு பரலோகமந்திரம் இரண்டு அருள்நிறை மரியே செபங்கள் தண்டனையாகச் சொல்லவேண்டும். விசுவாசப்பிரமாணம் அவ்விடத்தில் சொல்லச் சொல்வார்.அதைச் சொல்லும் போது எப்போதுமே குழம்பி வேறு செபங்களின் வாசங்கள் புகுந்து விட முணுமுணுத்து எழும்பிவிடுவாள்.

வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இல்லாத காலமது. வெள்ளி அல்லது சனி இரவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சாதனங்களில் ஊரின் பொது மைதானத்தில் திரைப்படக்காட்சி நடைபெறும். வேறு பொழுது போக்குகளற்ற அவளது ஊரில் சனங்கள் அதற்காகக் காத்துக் கிடப்பார்கள். ஒரு சனிக்கிழமை இரவு மைனாவும் போனாள். அன்று திரையிடப்பட்ட ஐந்து படங்களும் அவளை நித்திரையாக விடவில்லை.வழமையாக மூன்றாவது படத்தில் மணலில் படுத்துக் கொண்டேயிருந்து பார்த்துக் கண்ணயர்ந்து விடுவாள். அனேகமாகச் சூரிய உதயத்தின் போது மணலில் புரண்டு தூங்குபவர்கள் தவிர சினிமாவில் சலிக்காத ரசிகர்கள் ஐந்தாறு பேருக்காகப் படம் ஓடிக்கொண்டிருக்கும். விடிந்ததும் வீடு போன மைனாவால் பூசைக்குப் போக முடியாதளவு நித்திரை வந்தது. அவள் எதையும் யோசிக்காமல் மயக்கமானவள் போல நித்திரையானாள். எழும்பிய பின்னர் அன்று முழுவதும் பயப்பிராந்தியுடன் கழிந்தது.

அடுத்த ஞாயிறு எப்ப வரும்? பாதரிடம் பாவமன்னிப்புக் கேட்காமலிருப்பது அச்சத்துடனான வாழ்வாகவிருந்தது. இனிமேல் இப்படிப் படம் பார்க்கப் போவதில்லை என்ற முடிவோடிருந்தாள் மைனா.

அடுத்த ஞாயிறு பூசைக்கு முதல் மணி அடித்ததும் வறுவிறுவெனத் தனியாகக் கோயிலுக்குப் போய்விட்டாள். அங்கே ஒரு ஓரமாக இருந்த பாவசங்கீர்த்தனத் தொட்டியருகில் போய்க் காவலிருந்தாள். பாதர் வந்து அதிலிருந்ததும் போய் முழந்தாளிட்டுச்; சிலுவையிட்டாள்.

‘சுவாமி பாவியாயிருக்கிற என்னை ஆசீர்வதியும்” என்ற மைனாவின் வாக்கியத்தோடு பாவமன்னிப்புச் சடங்கு ஆரம்பித்தது.

‘என்ன பாவம் செய்தனீங்க?”-பாதர்.

அவரது குரல் மெதுவாக ஆதரவாக ஒலித்தது.

‘நான் போன ஞாயிற்றுக்கழமை பூசைக்கு வரயில்லை” -மைனா.

‘இனிமேல் வராமலிருக்கக் கூடாது. எமக்காக மரித்தெழுந்த இயேசுவுக்காக கடன்திருநாளில் பங்கு பற்ற வேணும.; ஏன் வரயில்லை?”

அவளுக்கோ உண்மை சொல்லத் தயக்கம். பாதரிடம் படம் பார்க்கப் போனதை எப்படிச் சொல்வது? பதில் சொல்லத் தயங்கிச் சிறு மௌனமானாள். இதை இப்படியே சொல்வதா? அல்லது இதற்காக ஒரு பொய்யைச் சொல்வதா? அடுத்த தடவை பொய் சொன்ன பாவத்துக்காக மன்னிப்புக் கேட்பதா? மைனா யோசித்தாள்.

பாதரோ ‘மாதவிடாயா? என்னிடம் சொல்ல என்ன வெட்கம்?” இவ்வாறு தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.

முடிவில் அவராற் தரப்படும் தண்டனைச் செபங்களின் பட்டியலைக் கேட்க அவள் அவ்விடத்திலில்லை.

இதுவே கர்த்தரிடமும் பாதரிடமும் கேட்ட கடைசிப் பாவமன்னிப்பாக இருந்தது. பின்னர் பல பாவங்களைச் செய்தாள். சினேகிதர்களுடன் சத்தியம் செய்ய வேண்டிய போது சற்றுந் தயங்காமல் மனதுக்குள்  ‘அ” என்று சொல்லிக் கொண்டு சத்தமாகச் ‘சத்தியம்” எனத் தலையிலடிப்பாள். தொடர்ந்த ஞாயிறுகளில் நிம்மதியாக நித்திரை செய்தாள்.

ஓவியம்: மோனிகா

Advertisements