லீனா மணிமேகலை

 என் தூமையின் வயது பதின்மூன்று

உடல் என்ற மந்திரவாதி

வேட்கையின் கணிதத்தை
மாத அட்டவணைக்குள்
கூட்டிக் கழிக்கத்
தொடங்கி
பதின்மூன்று வருடங்களாகிறது

என் பெளதீக தேசத்தில்
முலைகள் அமைச்சாகி
அல்குல் அரியணையேறுவதற்குரிய
தளவாடங்கள்
பருவ சாதகத்தின்
சட்டங்களில்
பயிற்சி பெற்றுவிட்டன

என் தாயின்
தாயின் தாயின் தாயின்
உப்பு
திரவியமாக்கி என்னை
மிதக்க வைத்ததில்
மொழியின் துடுப்புகளும்
வயதிற்கு வந்திருந்தன

பனுவல் அகப்பட்டதும்
நினைவு பதிவகப் பெட்டியென
மனதை அடைந்ததும்
வேட்டையின் சங்கேதங்கள்
புலப்பட்டதும்
தூமையை
குடித்துப் பழகிய நாட்களில் தான்

நீரகமாக
குடுவையில் நிறைவதும்
உயிரகமாக
ஆகாயத்தில் கலப்பதும்
கரிமமாக
பாறையில் உறைவதுமாய்
தூமத்தியாக்கி என்னை
வினையாற்றுகிறது வயது
– – – – – – – – – – –

உலகின் அழகிய முதல் பெண்
கவிதைத் தொகுப்பிலிருந்து

Advertisements