யாஸ்மின்

 

நழுவி விழுந்தான்.

 கைகளை மீசைக் குண்டனும்
 கால்களை தாடித் தடியனும் பிடித்துக்கொண்டு
 விசுக்கி விசுக்கி விளையாடினார்கள்.

 ஊஞ்சல் மாதிரி ஊண்டி ஊண்டி அலைத்து

மேகங்களுக்கிடையில் எக்காளிப்புடன் விசுக்கினர்.

 இதோ நரகங்களுக்கு அப்பாலான நரகத்துக்கு போகிறது பார் என்று நரகங்களுக்குள் கதைத்துக்கொண்டனர்.

 தொங்கிக் கொண்டிருந்த தருணம் பார்த்து யாரோ ஆட்டி விட்டார்கள்.

” அழிவுக்கும் துலைப்புக்கும் பேர்போன ராசாவே இந்த ஆக்கினைக்கும் அர்ச்சனைக்குமான அறுவானைத் தாங்கள் தொங்க விட்டுச் சுகம் கொடுக்கலாமா ”

ராசா திரும்பி நேரம் பார்த்துத் தட்டுத்தடுமாற மீண்டும் ஊசலாடிக் கொண்டானவன்.

 கீழே பலகாரங்கள் ஏந்திப்பிடித்தனர்

கண் திறந்த அவன்; இது என்ன கேவலமாப்போச்சென்று கலங்கிப்போனான்.

என்னை மீண்டும் பூலோகம் துரத்தி சுகவாழ்வு வாழென்று பணித்தனரோ என்று பயந்துபோனான்.

 இது அடிமைகளின் இல்லாத உலகம் –  தாசன்

 இராசா திருவுளம் கொள்ளும் தருணம் இல்லாதொழிதல் இருக்கும் -அடிமடையன்

 காடையன் முதுகைத் தடவிவிட்டுக்கொண்டு ‘ தங்களை நான் சபைக்கு அழைத்துச் சென்றேயாகவேண்டும்”  எண்றான்.

 இதைக்கேட்ட மடையன் ஓடிவந்து குனிந்து முதுகு கொடுத்து நின்றான்.கைகளைப்பிடித்து ஏற்றிவிட முயற்சித்தான் முழுமுட்டாள்.

 எல்லாரும் எல்லாருக்கும் அடிமைகள்.

 மிதிபட்டு வாழ்வதுதான் வாழ்க்கை

உதைப்புக்காய் தவித்துத் திரிவதால்

உதைவில் சிதைய ஒரு ‘உதைக்கும் சபை”  உருவாக்கியிருக்கிறார்கள்.

செருப்பன் புதினத்தை விளக்கினான்.

 தரித்திரன் என்று தன்னை அழைத்துக்கொண்டவன் சபையின் நடுவே தண்டனையைத் தொடங்கினான்.

 வருடல் நெருடல் வாட்டல் வதக்கல் எல்லாம் முடிந்தபின் சுகத்துக்கு வசை பாடினர்.

 ஆவுக்கும் மூன்றாம் கழுதைக்கும் பிறந்த பூதம் விழித்துக்கொண்டதும் ‘தொடரட்டும் சபை”  என்றது.

 அவன் சபையை விளித்தான்.

 ” எனக்குச் சாவு வேண்டாம் சரித்திரத்தில் இடம் வேண்டாம். நான் நிற்கும் நிலத்தின் கீழ் எனக்கு நிஜம் வேண்டும்” 

மூலையில் இருந்து இன்னுமொன்று மேடைக்குத் தள்ளிவிடப்பட்டது.

 “அடேய் சம்பளம் கட்டிக்கொண்டிருந்து நீ சங்கீதமா படிக்கிறாய். நீ சாத்திவைத்த அலவாங்கு துலைத்த துப்பாக்கி எல்லாம் சமாதானத்தில் கரைத்துத் துப்பலோடு துப்பலாய்ப்போன உயிர்களோடு துப்பிவிட்டுச் சம்பளம் கட்டிக்கொண்டிருந்து சங்கீதமா படிக்கிறாய் ”

ஓ! (ஓங்காளித்து)

 “அட மூதேவி முற்றத்தில் போகும் காற்றை சுவாசிக்கக்கூட உனக்கு உரிமையில்லை  ” அவளும் கத்தினாள்.

 ” வெறும் பேச்சுக்கா சொன்னாய் நான் முல்லை மல்லிகை அமுதமென்று உன் வெறி முறிக்க மட்டுமே என்னில் விழுந்து முறிந்தவன் நீ ”

“இங்கே திரும்பிப்பார் பிசாசே இது (தன்னைக்காட்டி) வெற்றிடமில்லை.வெறும் தோலும் தசையுமில்லை. ”

(அவனும்)

” சிந்தித்துப் பாருங்கள் சற்றே சிந்தித்துப் பாருங்கள் எப்படி நான் முற்றும் தொலைக்க முடியும்? இதோ இதோ (மண்பார்த்து) நானும்தான் வெற்றிடமில்லை. அதற்கு நானா காரணம்? கணங்கள் பிசகாமல் உங்கள் மூளைகளில் முட்டி ஊறிக்கிடப்பதற்கு நானா காரணம்? ”

 இடைமறிப்பு

 ” வேணாம் அன்பே நீ எதிர்காலத்தில் வாழாதே அது……………”

” என்னைக் கட்டிப்பிடித்து காதல் மயக்கத்தில் கிறங்கிக் கிடந்த நீ எப்படி எதிர்காலத்தில் வாழ முடியும்? ”

” நான் பாதிகுடித்துவிட்ட உயிரைக் காறித்துப்பிவிட முடியாத கேவலத்தில் நீ. நாற்றங்கள் எனை நார் நாராய் வார விடுகிறேன். இதோ வருகிறேன்”

 இடை மறிப்பு

 ” பராக்! மேதைகள் கவனத்திற்கு மௌனவி வருகிறார்! இதோ மௌனவி வருகிறார்”

 ” அண்ணன் உங்கள் அடியாள் ஒருவனின் தட்டொன்று உருண்டு விழுகிறது கவனித்தீரோ?”

 தட்டொன்று உருண்டு விழுகிறது.

” யாரிந்தப் புண்ணாக்கு? யார் செய்த பாவம் இது? ”

 ” இதுவா? இது கழிவுக்குப் பிறந்த கும்மாளம் ”

” நானிங்கு வாதாட வரவில்லை. போராட வரவில்லை. இவங்களுக்கு வியாக்கியானம் செய்ய வரவில்லை. நானுண்டு எனக்கு இரண்டு காலுண்டு அதன் கீழ் இருக்கும் நிலத்துக்கு நிஜமுண்டு என்று நிறுவ வந்தவன் நான் ”

சரிந்து விழுகிறான் மற்றவன்.

” அடேயப்பா எனக்கு கீழும் நிலமுண்டு பார். நானதை வானமென்று நினைத்தேன”

” அட பொடியா நின் வற்றிய மூளை கொண்டு மௌனவி உணவுமேசை வருவாயாயின் அங்கிருக்கும் பானத்தில் நிலமும் வானும் இரண்டறக் கலக்கும்.” 

 போத்தலை எடுத்தல்

 ” பானம் குடித்துப் பானம் குடித்து பகலை இழந்த பரதேசிகளே நான் வானம் குடிக்க நினைக்கிறவனடா” 

குடிக்கிறான்.

 தொண்டைக்குள் இருந்த காற்று வலித்தது.

வாடிய மூஞ்சிக்குள் ஒரு மென்மையுமில்லை.

 
 

——————————————————————————–

Advertisements