தர்மினி

எண்ணலற்றுக்   குடித்தேன் மதுவை.
 இன்று,
 அதிகமாய் நேசிக்கத் தேடியது
 நினைக்க வைத்தது
 நம் உரையாடலின் நேரம்
 நீள விரும்பி
 நெருக்கமாய் அணைக்கத் தோன்ற
 மனிதர் மீதான காதல்
 மதுவினால் ஊறும்.
  போதை எனை வாதைகள் செய்யும்
 உடலும் மனசும்
 அதைத்துப்பிடச் சொல்ல
 மருகும்
 கண்கள் சுழல
 தழும்பும் விழிநீரை விழுங்கி
 தீர்த்திடும் போதை தந்த வாதைகளை.

 எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
 நானுணர்வேன்

நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவலும்
நானறிவேன்.

ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்.

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடித்து
வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மேசை நிறைத்து ஊற்றி மதுவை
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துகளுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

அப்பொழுது

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
 நானுணர்வேன்

நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவலும்
நானறிவேன்.

 ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்.

Advertisements