தர்மினி

கனவுகளுடன் கடப்பவள் அல்லது அலைபவள்

தொங்கு பாலமொன்று
தூரத்தில் தெரிகிறது-அதிலே
நடந்து கொண்டே
நான் கண்ட கனவுகளிவை.
 
தாகத்திற் தவித்த வரிக்குதிரை நீரருந்தப் போக
காத்திருந்த முதலையொன்று
கழுத்தைக் கவ்விப்பிடித்தது.
 
பசும்புல் மேய்ச்சல் தேடியலைந்த புள்ளிமானை(ப்)
பாய்ந்து வந்த சிறுத்தை பசியாறியது…
 
பனிபெய்யும் இரவைப் பார்த்திருந்த புல்லிதழ்களை
எருதின் குழம்புகள் கிளறிக் குதறின.
 
படபடத்த இறகைப் பிய்த்தெறிந்து கூடடைக்க
சிறகடித்துத் தவிக்கும் சிறு குருவி.
 
வண்ணங்களால் அலங்கரித்த வானமாக(ச்)
சில நொடிகள் கண்சிமிட்டி(ச்)
சிதறிப் பெருமுகிலிற் கரைந்திட்ட எண்ணங்களானேன்.
 
நடந்து கொண்டே கண்ட கனவுகளுடன்
பாலத்தின் கீழுள்ள ஆழத்தைக் கடந்து போனேன்.
 
————————————————————————-

வெற்றுச்சதுரம்
 
எண்ணக்கோடுகளினை வண்ணக்கலவை ஊடுற
மொடமொடத்த துணிகள்  தூரிகைகளெடுத்து
ஆணியறைந்த சட்டகத்துக்குள்
உலகின் அதிசிறந்த ஓவியம் பதிய நினைத்தேன்.
 
பெயரற்ற ஒன்றின் பிறப்பை(த்)
துள்ளித்துள்ளி
கை கால் உடல் தூவி
உருவாக்கலில் துடித்தேன்.
 
வெறிகொண்டவளாக
விரிந்த கைகளில் அள்ளி
வரைந்து முடிக்கிறேன்.
 
விரல்களிலும் நகங்களிலும்
விலகாத வர்ணங்களை உரசிக்கழுவி
ஆற்றாமையுடன்
களைத்த முகத்தைக் கண்ணாடியிற் பார்த்தேன்.
 
அத்தனை வர்ணங்களும்
என் முகத்தில் அப்பியிருந்தன.
முகம் உருவிய வண்ணங்களால்
உலர்ந்திருந்தது
ஆணியறைந்த சட்டகச்சதுரம்.
 
நன்றி  : வல்லினம்
 

 

 

Advertisements