தர்மினி
மலையாள எழுத்தாளரான கமலாதாஸ் பற்றி ஜெயமோகன் எழுதிய அஞ்சலியைப் பற்றிப் பலரும் விமர்சித்து விட்டார்கள்.அதிலே அவர் குறிப்பிட்ட விடயங்களைப் பார்த்தால் அழகற்ற தோற்றமுடையவர் மனப்பிறழ்வுற்றவர் போல சம்பந்தமின்றிப் பேசினார் நடந்து கொண்டார். மற்றும் இவ்வளவு பிரபல்யத்துக்கும் அவரது குடும்பப் பின்னணி, மகன் நடத்தும் பத்திரிகையளித்த வெளிச்சமும் தான் என்பது போல எழுதினார். ஒரு பத்துச் சிறுகதைகளும் சில கவிதைகளுந் தானே எழுதினார் அதற்குத் தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம், பெண்ணியம், கலகம், பாலியலைப் பேசுதல் என்ற தொனி பட அஞ்சலி வரைந்துள்ளார் ஜெ.மோ.
     ஒரு எழுத்தாளர் தன் வாழ்வின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்துகையில் தனிப்பட்ட விடயங்களை விமர்சித்தது தன் தரப்பு நியாயம் என்கிறார் ஜெயமோகன்.
            ஓர் பெண் இலக்கியவாதியின் எழுத்துக்குப் பல்வேறு பின்புலக்காரணங்களைத் தேடித் தனிப்பட்ட ரீதியில் திறனற்றவள், எதுவும் செய்ய முடியாதவள் என நிருபிக்க ஆண்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள். ஒன்றிணைய முடியாதவர்கள் கூட அவ்விடயத்தில் ஒரு வகையில் சேர்ந்து உறுதியாயிருக்கிறார்கள்.அவளது தனிப்பட்ட ஆசைகள், காதல்கள், காமம், கட்டுமீறல், கண்ணியமற்றிருத்தல், எல்லாம் பெரும் இலக்கியக்காரர்கள் புரட்டிப் போட்டவர்கள் பிடுங்கி எறிந்தவர்கள் என்று அடைமொழி கொடுக்கப்பட்டவர்களாற் கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.பள்ளிக்கூடப்பாடம் போல இயங்கள் தத்துவங்கள் என்று சப்பித் துப்பிவிடுவார்கள்.ஆனால் அவர்களையறியாமல் இச்சமூக ஆண்களாக பகிடியாக நக்கலாக இரகசியமாக இருவராக இவற்றையெல்லாம் பேசிக்கொள்வார்கள்.
           ஜெயமோகன் கமலாதாஸை அழகற்றவரெனச் சொல்லிவிட்டாரென்று சாருநிவேதிதா தன் சார்பில் ஜெ.மோ வைக்கண்டிக்கிறார்.கமலாதாஸின் ஆளுமை, இலக்கியந்தாண்டி ‘நம்மைப் போன்ற அழகுடையவர்களெல்லாம் கமலாதாஸை அழகற்றவரெனச் சொல்லலாமா?’ என்ற ரீதியில் திருப்பிக் கேட்கிறார்.

                  இதே சாருவும் பெண் எழுத்தாளர்களைப்பற்றி நக்கலும் நையாண்டித்தனமுமாகப் எழுதுபவர்.அவருக்குக் குழந்தைகளைப் பிடிக்காது.ஆனால் நாய்கள் குழந்தைகளை விட மேலானவை எனும் அருமருந்தன்ன கருத்தைக் கொண்டிருப்பவர்.

            என் எழுத்துகளை ஏன் படிக்கிறீர்கள்?போதை போல அதைப் படிக்காமல் உங்களால் தூங்க முடியாது என்று ராங்கியாய்ச் சொல்கிறார்.அவர் மனம் போன போக்கில் எழுதி மகா இலக்கியம் என்பார்.தமிழுலகு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவில்லை என்பார்.நாம் கண்டும் காணாமலும் போகவேண்டுமாம்.

                    இந்நேரத்தில் ஆதவன்தீட்சண்யாவை எலி என்றும் தன்னை டைனோசரென்றும் சொல்லிப் பலங்காட்டலாமா? என மல்லுக்கட்டத் தயாராக நின்றது என் ஞாபகத்திற்கு வருகிறது.வழக்கொழிந்த பிரமாண்டத்தை உருவகப்படுத்தி என் மீது வாய்வைத்து விட்டாய் விடமாட்டேன் என்று மிரட்டியது என் மூளையின் மூலையிலிருந்து இப்போது ஏன் வருகிறது?
      ராஸ லீலா என்ற நாவலை அவரின் டயறிக் குறிப்புகளின் தொகுப்பெனலாம்.சுருக்கமாகப் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான நாவல் என்று அட்டையில் குறிப்பிட்டிருப்பின் பொருந்தியிருக்கும். அது பெருங்காவியம் யாரும் பேசவேயில்லை என்று தமிழ் வாசகர்களைக் குற்றஞ் சொல்வார். சினிமாக் கிசுகிசு போல இரண்டெழுத்து நடிகை முதலெழுத்து இது கடைசி எழுத்து அது என்ற ரீதியில் எழுதியவை தான் ஆண்களால் இரசித்துப் படிக்கப்பட்ட பக்கங்கள். இரயிலில் பயணித்த பெருமாளின் கழிவகற்றும்பிரச்சனை எவராலும் கண்டு கொள்ளப்படவேயில்லை.அதைப் பற்றி எவன் கவலைப்பட்டான்?
        பெண்களைக்கீழ்த்தரமாகவும் அறிவற்றவர்களாகவும் பேய்க்காட்டக்கூடிய மடைச்சிகள் என்றவாறும் எழுதியிருப்பார்.அதிலே ஒரு உதாரணஞ் சொல்லலாம். மிகப்பிரபலமான பெண்கவிஞரைப் பற்றி எழுதியதன் சுருக்கம் இவ்வாறிருக்கிறது.தெரியாத்தனமாக அவருடன் அமர்ந்து பேசிவிட்டேன்.முகத்தைப்பார்க்கச் சகிக்கவில்லை.நிறம், தோலின் பளபளப்பின்மை பற்றிய விபரங்களை எழுதி ஏளனஞ் செய்திருந்தார்.பல பெண்களையும் புறத் தோற்றத்தை வைத்தே கும்பிடுவார், கூப்பிடுவார், நம்பிடுவார்.
      பெண்களின் திறமைகளை மதிக்கத் தெரியாத இவர் கமலாதாஸ் பற்றிய தன் கரிசனையைக் காட்டுகிறாராம். அவர் மலையாள இலக்கியவாதி என்பதனால் தான் சாட்டுக்கு இதை எழுதி கேரளாவின் அபிமானத்தைப் பெற்ற நன்றியுடையவனாகக் காட்ட முயற்சித்திருப்பாரோ?
    சாருநிவேதிதாவின் சில மாதங்களுக்கு முன்னான பதிவொன்றில் பாரதியின் பக்கத்து வீட்டுக்காரர் என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.குஸ்வந்சிங்கின் வேலைக்காரர் எழுத்தாளரானது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.அவ்வீட்டுக்கு வரும் பிரபலங்களுக்குச் சமைத்துப் பரிமாறுவது அவர்கள் கதைப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பது என்று இருந்தவர் பின்னர் எழுத்தாளராகி விடுகிறார். சம்பந்தமின்றிக் கட்டுரையை முடிக்கும் போது இப்பொருள் பட எழுதுகிறார்  ‘அரசியலிற் கூட பெண்கள் தங்கள் உடல் பொருள் அனைத்தும் இழந்து செயற்பட வேண்டியிருக்கும்.ஆனால் இலக்கியவாதியாவதற்கு அவள் எதையும் இழக்கவேண்டியதில்லை’ என்று முடிக்கிறார்.
    ஏன் ஆண்களாகிய உங்களுக்குத் தான் நேரத்தைப்பற்றிக் கவலையா? வேலைக்குப் போகாமல் காசு உழைக்காமல் அரசியலும் இலக்கியமும் படைப்பதற்காகப் பறந்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் தான் சமைக்க நேரமின்றி சாப்பாடின்றி நடக்க நேரமின்றி படுக்க நேரமின்றி நிமிடங்களைக் கையிற் பொத்தி வைத்து எழுதுவீர்களா?

               நினைத்தவுடன் நான்கு ஆண்கள் சேர்ந்து கூடிப் பேசி சரிந்து நிற்கும் பூமியை நிமிர வைக்க நிரம்பத்தான் சிரமப்படுவீர்கள்.ஆனால் புருசன் பிள்ளைகளுக்கு வேலை செய்து, சம்பளத்துக்கு இன்னொரு வேலை செய்து கிடைக்கும் நேரத்தில் எழுதி வாசித்து தூக்கத்தைத் தியாகஞ் செய்து தான்,  சாதிக்க வேண்டும்.

              திருமணமாகாத பெண்களுக்கும் இதைப் போல பலவுண்டு.எழுதுவதும் வாசித்தலும் மற்றும் புகைப்படம், சினிமா, நாடகம் என்ற கலைகளில் ஈடுபடுதலைக் குற்றச் செயலாய்ப் பார்க்கும் வீடுகளிலிருக்கும் பெண்கள் அவற்றை அலட்சியப்படுத்தி வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு உங்களைப் போன்ற இலக்கியம் படைப்பவர்கள் மத்தியில் பெண் வந்தாளென்றால் உடலைப் பற்றிக் கிண்டலடிப்பீர்கள்.ஊரிலுள்ளவனுடன் எல்லாம் உரசுவதாகக் கதைப்பார்கள்.ஆம்பிளை போல என்று உங்களையறியாமல் உள்ளிருந்து வருவதையும் சொல்லிவிடுவீர்கள்.அதிரடிக் கதைகளை எழுதித் திட்டு வாங்கி இலக்கியம் செய்யும் ஆண்கள்; பெண்கள் பிரயோகிக்கும் பாலியல் ரீதியான சொற்களை மற்றவர் கவனத்தைக் கவர வலிந்து புனைபவை என்பர்.இவ்வளவு மற்றும் இதையும் தாண்டிப்பல அவள் இழப்பவையும் எதிர் கொள்பவையுமாக  இருக்கும் போது .அவள் இழப்பதற்கு எதுவுமில்லை எனக் காலால் எத்தி விட்டுப் போகிறீர்கள்.

Advertisements