மோனிகா

ramayi

“கரிகொண்டு வருகிறாள் ராமாயி”

கடைப்பையன் கூச்சலில் பாட்டி எழுந்தாள்.

கைநிறைக்க ஒரு செம்பு மஞ்சள் தண்ணீர்

காக்கா தோப்பு ராமாயியின் கரிமேல்.

ராமாயி வெளியே.

கரி சென்றது உள்ளே.

ஆசாரச் சமையல் அவித்துச் சாப்பிட.

தண்ணீரில் மஞ்சள். மனதிற் சாக்கடை.

காக்கா தோப்பும், கக்கூசு வாளியும்,

தொம்பர் குடிசையும் தோல் தைப்பவரும்

மதிலின் மறுபுறம் வசித்தது அன்று.

முப்பது வருடம் முடிந்தது இன்று.

பாட்டி, கரி, கக்கூசு வாளி

பலதும் மறைந்து பளபளக்கும் இவ்வூர்.

பங்களாக்கள் பளிச்சென்று பால்பல்லைப்போல்

கரும்பலகைப் புடவையாய் கனத்த ரோடுகள்.

ஆங்கிலப் பெயர்கொண்ட அழகுப்பாதணியில்

அங்குமிங்கும் ஓடினர், அண்மைக்குடியேறிகள்.

மொட்டை மாடியில் உட்கார்ந்து பார்க்கையில்

மலைத்தே போனேன் மாறிற்று ஊரென்று.

மறுநொடி அங்கே…

அதோ மண்ரோட்டில் ராமாயி.

காலனியற்று கால்கள் சுட்டிட..

காக்கா தோப்பு கட்டிடமாகவே

ஊரின் வெளியே அரிசனக் காலனி.

மஞ்சள் தண்ணீர் மறைந்து போயிங்கு

ஊரே மஞ்சளாய்..

உண்மையே கருப்பாய்.

Advertisements