தர்மினி
  அகழி போல் வீடு
 சுற்றி உள்வேலி, வெளி வேலி
 அப்பா, அண்ணன், தம்பி, அயற்சிறுவன்
 தெருவில் நடந்தால் உதவிக்குத் வருவர்.
 
 பவனி வருகையில்
 பரிவாரங்கள் தொடர்தலாக நெருடும்.
 
 கன்னி மாடத்தைப் போல
 நம் வீடு கட்டப்பட்டதென்பர்.
 
 மேலுமொரு காவலன் அதிகரிக்க
  பலத்த பாதுகாப்பு.
 அவனைக் கலவி செய்யவும் உத்தரவு.
 கணவனாயவன் சொல்லப்பட்டான்.

 சம்மதமில்லையெனில்
 கோட்டைக்கு நீ இளவரசி இல்லையென
 அறிவித்தலிட்டனர்.
 
 கோட்டையும் கொத்தளமும் சூழ
 அவர்கள் கொடி பறக்க
 அவளிருந்தாள்.
 
 பின்னொரு நாளில்
 காதலின் வெக்கையில்
 காமத்தின் தகிப்பில்
 கட்டிய கோட்டை  தணலாயிற்று.
 
 வீதிகளில் அவளுமொரு 
 வேசியாய்
 பாடகியாய்
 பிச்சைக்காரியாக

 இப்போது இளவரசி இல்லை
 இராணியாக.

Advertisements