கிறுக்கற் பக்கம் – கறுப்பி

                     பனிக்குள் புதையுண்டிருக்கும் ரொறொன்டோவில், அனைத்தும் உறைந்து போய்விட்டிருந்தாலும், எந்தப் படைப்பையும் உடனேயே விவாதித்துக் கொள்ள எனக்கொரு சகோதரி கிடைத்திருப்பது என்னை உருகவைத்துக் கொண்டிருக்கின்றது.

               ‘நான் கடவுள்’ திரைப்படத்தை ‘பேசும்படம்’  எனும் நிகழ்ச்சியில் சுகாசினி விமர்சனம் செய்த போது இயக்குனர் பாலாவும் தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தார். சகோதரி கோவித்துக் கொண்டாள், ஒரு இடத்தில் கூட ஜெயமோகனை பாலா குறிப்பிடவில்லை என்று. ‘நான்கடவுள்’ திரைப்படம் கணிசமான அளவிற்கு ‘ஏழாம் உலகை’ சார்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றது இதன் கிரடிட்டில் ஜெயமோகனுக்கும் முக்கியத்துவம் உண்டு என்பது அவள் வாதம்.

                      ‘சிலம்டோக் மில்லியனர்’ திரைப்படம் பார்த்த பின்னரே ‘கியூ அண்ட்ஏ’   நாவல் படிக்கக் கிடைத்தது. கதை கொண்டு செல்லும் யுக்தியைத் தவிர நாவலுக்கும் திரைப்படத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாவலை அப்படியே மாற்றங்கள் இன்றி திரைப்படமாக்கியிருந்தால் சனரஞ்சகமாக இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். நான் சிலம்டோக் மில்லியனரை ரொறொன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவின் போது பார்த்தேன். மக்கள்தெரிவின் சிறந்த திரைப்படமாக சிலம்டோக் மில்லியனர் தெரிவு செய்யப்பட்டது. மிகவும் இரசித்துப் பார்த்தேன். அதன்பின்னர் பலவிருதுகளை அத்திரைப்படம் வென்று விட்டது. அண்மையில் ஐரோப்பாவிற்குச் சென்றிருக்கும் போது பல இலக்கியவாதிகளைச் சந்திக்க நேர்ந்தது. அதில் ஒருவர் சிலம்டோக்கை வெறும் குப்பை என்றும் மற்றொருவர் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

                      இந்த வகையிற் பார்க்கையில் நாவல் என்ற வடிவத்தை திரைக்குக் கொண்டு வரும் இயக்குனர் எந்த அளவிற்கு முக்கியம் பெறுகின்றார் என்பது புரிகின்றது. ஏழாம் உலகம் நாவலையும், சித்தர் வாழ்வையும் இணைத்து பாலா எனும் இயக்குனர் திரைக்குக் கொண்டு வந்திருப்பதுதான் இங்கே சிறப்பு.

                             எங்கும், எப்போதுமே இரண்டாம் பிரஜையாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பெண் என்பவளின் வாழ்தலின் நகர்வில், அவளின் அறிவுக்கு எட்டா அடக்குமுறைகள், அவள் உணர விரும்பாத, அலச விரும்பாத வடிவில் அவளை நகர்த்திச் செல்லும். தன் உலகை முற்று முழுதாகக் கணவனிற்கு குடும்பத்திற்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் சமூக அமைப்பில் அடைபட்டிருக்கும் ஒருத்திக்குக் கிடைக்கும் ஒரே ஆறுதல் அவள் கணவனிடமிருந்து அவளுக்குக் கிடைக்கும் அன்பும், காதலும் மட்டுமே. இவைகளுக்காக அவள் எதையும் தாங்கிக் கொள்ளத் தனைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றாள்.

             நாகேஷ் கூகுனூரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான ‘டோர்’ உண்மைச் சம்பவம் ஒன்றைத் தளமாக வைத்து திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதே திரைக்கதையை மலையாளத்தில் இயக்குனர் கமல் ‘பெருமழைக்காலம்’ எனும் பெயரில் திரைப்படமாக்கியிருக்கின்றார்.

                               பெண்கள் மீதான அடக்குமுறை பல வடிவங்களில் காணப்பட்டாலும் மதங்கள்  முன்நிலை வகிக்கின்றன. ஆனால் இஸ்லாமிய மதம் ஏனைய மதங்களை விடவும் அடக்குமுறை கூடியதாகவே அடையாளப்படுத்தப் படுகின்றது. பெண்களின் உடையில் தொடங்கி அவர்களின் கல்வி வரை இஸ்லாமிய மதம்  அடக்கு முறையைத் தவிர வேறு எதையுமே பெண்களிற்கு வழங்கியதில்லை    என்று உலக ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன.

                        ‘டோர்’, ‘பெருமழைக்காலம்’ போன்ற திரைப்படங்களைப் பார்த்த போது எனக்குள் கேள்வி எழுந்தது. சல்மாவின் ‘இரண்டாம் ஜாமம்’ நாவல் அதனை உறுதிப்படுத்தியது.         ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து அடக்குமுறைகளையும் இஸ்லாமியப் பெண்களும் எதிர்கொள்கின்றார்கள். மதுரை மாவட்டத்தின் சில இஸ்லாமியக் குடிகளின் வாழ்நிலையையும் அவர்களின் அலுமாரிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த எலும்புக் கூடுகளையும் எழுத்தாளர் சல்மா வாசகர்களுக்காகத் திறந்து வைத்திருக்கின்றார். இவ்வாழ்வு முறை முஸ்லீம் மக்களுக்கான பிரத்தியேகமானதொன்றல்ல. உலகப்பார்வையில் இந்துமதத்தைவிட இஸ்லாமியமதம் பெண்களின் மீதான வன்முறையில் மேலோங்கி நிற்கின்றது, ஒரு நாட்டின் அரசியல் கட்டமைப்பே அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கின்றது. தலிபான்களால் அடக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லீம் பெண்களின் நிலையை வைத்துக்கொண்டு, ஏனைய முஸ்லீம் பெண்களின் நிலையை நாம் கணித்துவிட முடியாது. இந்துமதத்தைத் சேர்ந்த எனது நண்பியொருத்தி முஸ்லீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்வதற்காக மதம் மாறியிருக்கின்றாள்.  என் நண்பியின் பார்வையின் படி, பெண்கள் மீது இந்துமதம் சுமத்தும் அனைத்து அடக்கு  முறைகளோடும் வளர்க்கப்பட்டவள் தான் என்றும். தனது தாய் இந்துமதத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அவள் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டாள், விவாகரத்து மறுமணம் என்பது அவள் வாழ்வில் மறுக்கப்பட்டது  என்றாள்.

                                   இஸ்லாமியமதத்தின் கொள்கைப்படி கல்வி என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஒன்றாகும். இஸ்லாமிய மதம் மிகவும் இறுக்கமாக இயங்கிக்கொண்டிருக்கும் மதம். அனைத்துச் சுதந்திரத்தையும் தனக்குள்ளேயே கொண்டு இயங்கிவருவதனால் இம்மதத்தை வெளியில் நின்று அவதானிக்கும் போது மிகவும் கடுமையான தோற்றத்தைக் கொடுக்கின்றது. மதத்தின் பேரால் இந்துமதப்பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதை விட ஒன்றும் மோசமான அடக்கு முறைக்கு இஸ்லாமியப் பெண்கள் உள்ளாகவில்லை என்பதை சல்மாவின் இரண்டாம் ஜாமம் சுட்டிக்காட்டுகின்றது.  கணவனை இழந்த பெண்களுக்கும், விவாகரத்து செய்த பெண்களுக்கும் இஸ்லாமிய மதம் கொடுக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் எந்த ஒரு இந்துமதப்பெண்ணும் நினைத்துக் கூடப்பார்க்க முடியாது. பெண்கள் மீதான அதிஉச்ச அடக்குமுறை என்பது கணவனை இழந்த பெண்ணைத் தீண்டத்தகாதவளாகவும், அதிஷ்டமற்றவளாகவும்   சமூகமும் , உறவுகளும் கணிப்பதே. இந்துமதத்தின் இந்த வழக்கமுறையின் எந்தச் சாயலையும் கொண்டிராத மதம் இஸ்லாம். விவாகரத்து, மறுமணம் என்பன எப்போதுமே அதன் வழக்கத்தில் சகஜமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ‘டோர்’, ‘பெருமழைக்காலம்’ போன்ற திரைப்படங்கள் முஸ்லீம் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரமும், இந்துமதப்பெண்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளையும் வெளிப்படையாகவே காட்டிநிற்கின்றன.

“Hinduism does not support using occultism for selfish motives and dissuades every one from medding with occultism”(E.D.Viswanathan, Am I a Hindu)

Advertisements