-ஒரு அந்தரங்கக் குறிப்பு-மோனிகா


          முடிவாக இன்று நான் நீண்ட நாட்களாக எழுத இருந்த ஒரு விடயத்தை எழுதத் தொடங்கிவிட்டேன். ஆமாம், நிசமாகவே. நிசம் என்று ஒன்று இருப்பின் அவ்வாறும் கூட எடுத்துக் கொள்ளலாம். பல சமயம் யோசித்திருக்கிறேன். என் ஓவியங்கள் பூக்களையும் மேகங்களையும் கொண்ட புனைவாக இருக்க வேண்டுமா? இல்லை, பீறிட்டெழும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு அரசியற் பொறியாக அமைதல் வேண்டுமா? யதார்த்தத்தில் ஒரு படைப்பு நிகழ்வுக்கு முன் இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் படைப்பே சாத்தியப்படாமல் போய்விடுகிறது. மனதிற்கும் படைப்பிற்கும் உள்ள உறவின் நடுவே ஒரு வாசகனையோ பார்வையாளனையோ பார்ப்பதை தவிர்த்து நிகழ்வை உள் வாங்கும் தருணம் பின்னர் அப்படைப்பினை பார்க்கும்போது ஒரு தாய் தான் பிரசவித்த குழந்தையைப் பார்ப்பதுபோல் பெரும் பரவசத்தையும் ஆச்சரியங்களையும் வழங்குகிறது. இத்தகைய மனம் ஒரு நினைவிலி மனம் என்று சொன்னால் என்னால் அதை ஏற்கவும் என்னால் முடியாது (எனது சில படைப்புகளைப் பார்த்து நண்பர் ஒருவர் மிகவும் “மிடில் கிளாஸ்” தனமாக இருக்கிறது என்று சொன்ன அனுபவமும் உண்டு).print இன்று பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த இருநூறு ஓவியங்களையும் அவ்வப்போது எடுத்துப் பார்ப்பேனானால் ஒரு காலைப் பொழுது கண் விழித்தவுடன் என்கனவை நினைவு கூர்வது போன்றதொரு பிரம்மையை அவை ஏற்படுத்துகின்றன. என் மனதிற்குப் பிடித்ததொரு தோழி, அவளைச்சுற்றி பலூன்களும் கோமாளிகளும், நீலமும் பச்சையுமாக வரைந்த என் மற்றொரு தோழியின் உருவப்படம், மீன்கள், குளக்கரையின் நீரில் கால் வைக்கப்போய் தனது தொடைகளே மீனாகிப் போன ஒரு பெண், வானளாவிய வார்னர் சகோதரர்களின் படப் பின்னணியைப் போன்றதொரு நியூயார்க் நகரத்தின் தீயணைப்பு ஊர்த்தி சத்தங்களிடையே சிங்கமாக அமர்ந்திருக்கும் ஒரு தனிமை, குதிரையுடன் மன்றாடும் ஒரு நிர்வாணப் பெண் (நண்பர்கள் சிலர் குதிரை ஒரு பாலியற்குறியீடு என்று கூறியதும் உண்டு. எனினும் இன்றுவரை எனக்கு அப்படி ஒன்றும் புலப்படவில்லை), என் சன்னலின் மேல் காலியான சில வைன் தம்ளர்களும், தரையில் உதிரம் போன்ற ஒரு துளி சிவப்பு வைனும்.

கடந்த இருபது வருடங்களின் ஓவியப் பயணத்தில் உருவான இவற்றை பார்க்கும் பொழுது வாழ்க்கையுடன் இணையான என்னை அறியாமல் தொடர்ந்து வந்த இந்த பயணம் வாழ்க்கையை ஒரு நிறைவை நோக்கிக் கொண்டு தள்ளியாதாக ஒரு மெல்லிய உணர்வு. கரிக்கட்டை, தென்னம்பாளை, கன்னியாகுமரியிwomen in manhattanலும், கோவளத்திலும் எடுத்த மணல், தேரியில் கண்ட செம்மண், சணல் கயிறு, சாக்குப்பை என்று கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு தீட்டிய எனது முதல் மீன்கள் கண்காட்சி, ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பித் தீர்க்கும் வெறியோடு ஆறு அல்லது ஏழு மீட்டர் கித்தான்களை நியூயார்க் நடைப்பாதை மரங்களின் நிழலில் சரித்து நிழல் விழும் இடங்களில் அள்ளித்தெரித்த வண்ணங்களுடன் அரூபம் தரித்து உறங்கும் சுருள்கள், பதினைந்து வயதில் வரைந்த முதல் தைல வண்ண ஓவியத்தில் கண்ணாடியில் முகம் இழக்கும் (ழாக் லக்கானின்) முக்காடிட்ட பெண்.

நானே எல்லாமென்று நகரெங்கும் ஓடித்திரியும் யானைகள், “ஆஹா யானை” பாரென்று அவற்றை துரத்திச் செல்லும் சிறுவர்கள், ஒரு ஈராக்கின் மளிகைக் கடைக்குள் நிற்கத்தேவையில்லை ஓடலாமென்று கூறும் அமெரிக்கக் காலணி விளம்பரமும் அதை அடுத்து போர்விமானங்களாகத் திரிபு கொள்ளும் மீன் வடிவங்களும். இரவு நேரம் வேலை முடித்து நேரம் கழித்து வீடு செல்லும் சமயங்களில் ரயிலூர்தியில் வரைந்த எண்ணற்ற கோட்டோவியங்களில் உறங்கிக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருக்கும் சக உழைப்பாளிகள்(art work 2 012அவரவர்க்குக் கிழித்துக் கொடுத்தது போக மிச்சம் ஒரு சில மட்டுமே). ஓவியனின் உலகம்தான் எத்தனை பெரியது! பக்கத்திலிருக்கும் நபரின் மூக்குக்கண்ணாடி அமைப்பு முதல் மூக்கினடியில் உள்ள மச்சம் வரை எல்லாவற்றையும் கண்களால் தீண்டிப்பார்க்கவல்லவா பேராசை கொள்கிறான். ஓவியன் உயிருள்ளவரை சகவாழ்வை காதலிக்கின்றவன் என்றே தோன்றுகிறது.!
யார் இவற்றின் பார்வையாளன்? மாயா பஜார் படத்தில் அவரவர் மனதில் உள்ளவற்றைக் காட்டும் இக்கண்ணாடிகள் கடந்து உறங்கும் இந்த பரண்தான் எவ்வளவு அழகு. இது அழகிகள் உறங்கும் நகரமல்லவா? ஓவியங்கள் எதற்காகப் படைக்கப்படுகின்றன? என்ன உரக்கக் கூறுங்கள்… சரியாக கேட்கவில்லை…விற்பனைக்காக என்கிறீர்களா… ஹ… ஹஹ்.. ஹா…!

Advertisements