தெய்வ வரி

பாரிஸ் நகரில் 30.08.2009 அன்று நடைபெறப் போகும் மாணிக்கப்பிள்ளையார் கோயிற் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இப்பதிவு.
இக்கட்டுரை குடியரசு இதழில் 26.07.1925 பெரியார் ஈ.வே.ராவினால் எழுதப்பட்டதாகும்.

          நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமி வரி, வருமான வரி, கள்ளுவரி, துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்சவரி, மாமூல்வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது.    இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்து வரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரஜோயனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்கசம்பந்த வரிகளின் அளவை விட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது.அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதிற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதிவைத்ததையும்  சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்துவதல்லாமல, வேறு என்ன உண்மை இலாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ,  தீர்த்தத்தை உத்தேசித்தோ நமது பிரயாணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை,  பிரார்த்தனை முதலியவற்றுக்காக  ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற தெய்வத்துக்கு  மாத்திரம் வருஷம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும் மற்றும் சில தர்மத்திற்காகவும் அங்கு போகும் ரயில்சத்தம், வண்டிச்சத்தத்திற்காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இதைப் போலவே இமயம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தீர்த்தம், ஸ்தலம், கோவில் முதலியவைகளுக்கு மக்கள் போக்குவரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம,வாழ்வு, சாவு, திதி இவைகளுக்காகவும் அதை நடத்தி வைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூடநம்பிக்கையும் தானே செய்விக்கின்றது. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வ யாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலாமென்றும், தாங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினாலும் பெற்றுவிடலாமென்றும் நினைக்கின்ற பேராசை நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குணகர்ம யோக்கியதையைப் பொறுத்தல்லாமல், தாம் வைதீகச்சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இடமுண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும், தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும் மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும், செலவும் தெய்வத்தின் பெயராலும் ஏமாற்றுதலாலும் ஏற்பட்டிருக்கவே முடியாது. தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் என்னவாகின்றன? வைதிகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன? இவ்விரு கர்மங்களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதை என்ன? என்பதை மக்கள் கவனிப்பதில்லை. ‘காளை மாடு கன்று போட்டதென்றால் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு’ என்றே சொல்லி விடுகிறோம். காளை மாடு எப்படிக் கன்று போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கை போடுவதாலும் நமது குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும்? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம், காசு கொடுப்பதாலும் அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச்சுகப்படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை. இவைகளால் நமது பொருள், நேரம்,தத்துவம் வீணாகப் போவதல்லாமல,ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் பொழுது தன்னுடைய பணச் செருக்கையும், வக்கீல்களையும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையும் நினைத்துக் கொண்டு,  இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாகச் செய்கிறானோ அப்படியே இந்த ஷேத்திரங்களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக் கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்டகாரியங்களும் வளருகின்றன. நல்ல யாத்திரை ஸ்தலம் என்று சொன்னால் நல்ல வியாபார ஸ்தலம் என்பது தான் பொருளாக விளங்குகிறது. தேர்த்திருவிழா ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும் யாத்திரை போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்காதிருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை விபச்சாரத்திற்கும், சூதுக்கும், போதை வஸ்துகளுக்குமே பெரும்பான்மையாக உபயோகித்து வருகின்றனர். வைதீகச் சடங்கைப் பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

    ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீகக் கர்மம் செய்து கொண்டிருக்கும் பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார்.அதைக் கண்டு ஒரு பெரியார்,தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.

புரோகிதர்: ஐயா,என்ன மேற்கு முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்தக் கொண்டிருக்கிறீர்?

பெரியார்: நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?

புரோகிதர்: இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.

பெரியார்: நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.

புரோகிதர்: இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச் சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே!

பெரியார்: நீர்! இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப்        போய்ச் சேரும்?

புரோகிதர்: (வெட்கத்துடன்)இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.

 

          இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

குடியரசு 26.07.1925

One thought on “தெய்வ வரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s