தர்மினி

அவனது
உரையாடல் எனும் வழித்தடத்தில்,
தொலைந்து போன
என் பரவச நாட்களை
மறைத்து வைத்திருந்த
மர்ம மாளிகையொன்றினுள் கண்டுபிடித்தேன்.

ஆற்றுக் கழிமுகத்தில்  கல்லொன்று  எடுத்தேன்.

தேய்ந்து சென்ற நாட்களின் தீப்பொறியில்,
 அது
ஒரு வைரக்கல்லாக
ஒளி வீசி  வசீகரித்தது.
தன் ஒளிச்சிதறல்களை எப்பக்கமும் வாரியிறைத்தது.

அதொரு பெரு நெருப்பாய்க் கனல ஆரம்பித்த கணத்தில்…………….

தொலைந்து போன என் பரவசகால நாட்களுக்கான வழித்தடத்தைக் கண்டுபிடித்தேன்.

அக்கணத்திலிருந்து
சிறுமைகள் சிதறிப்போய்
காற்றிற்  மிதப்பதாயும்
கண்களில் மின்னல் பிறப்பதாயும்
கனவுக்குப் பல மொழிபெயர்ப்புகளுமாக
வரையறையற்ற சுதந்திரத்தோடு
என் நாட்களை வளைத்திடுகிறேன்.

Advertisements