புத்தர்,போதிமரம்,சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி
 2009 செப்ரம்பர் மாத வல்லினத்தில் வெளியாகிய ‘புத்தரின் கையெறிகுண்டு’  என்ற இளங்கோவனின் கவிதையை முன் வைத்து………. 


 சம்பவம் 1:

                 தீவில் சற்றும் முக்கியத்துவமில்லாத எங்கள் ஊருக்கும் இராணுவம் வருமோ? என்று பயத்துடன் வீட்டில் கதைத்துக் கொள்வோம்.வேறு வேறு ஊர்களில் இராணுவத்தின் அட்டகாசங்களின் கதைகளைக் கேள்விப்பட்டு பயந்து கொண்டிருப்போம்.அம்மா உறுதியாகச் சொல்வார் “எங்கட ஊருக்கு ஆமி வராது”.இதெல்லாம் ஒரு இடமென்று இராணுவம் வரப் போவதில்லை என்பது அவர் வாதம். இல்லையென்றால் நாங்கள் பயப்படாமல் நித்திரை கொள்ள வேண்டுமென்பதற்காகச் சமாளித்திருக்க வேண்டும்.
           அந்நேரங்களில் அப்பா தொடர்ச்சியாக நடைபெறும் நாடகத்தின் வசனம் போல் மனப்பாடமாக இவ்வாறு சொல்வார்,செய்வார். வீட்டுவாசலினால் நுழைந்தவுடன் கண்ணிற் படுமாறு கொழுவியிருக்கும் புத்தர் படத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொல்வார் “வீட்டுக்குள்ள வாற ஆமிக்காரன் புத்தர் படத்தைப் பார்த்தவுடன பேசாமற் போயிருவான் எங்களை ஒண்டும் செய்யமாட்டாங்கள். “பார்த்தீங்களா? அப்பாவின்ர மூளை, எப்பவோ நடக்கப் போறதை யோசிச்சு இந்தப் படத்தைக் கொழுவியிருக்கிறன்” என்பார்.
            எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்படம் வீட்டிற் கொழுவப்பட்டிருந்தது. நீலப்பின்னணியில் கண்களை மூடி அழுந்த மூடிய உதடுகளுடன் அமர்ந்து தியானஞ் செய்யும் புத்தர். மென்சிவப்புத் தாமரை,அரசமரக்கிளைகள் மற்றும் ஒளிவட்டமும் அப்படத்தில் இருந்தன. உண்மையாகவே நானும் அப்புத்தர் படம் வீட்டிலிருக்கும் தைரியத்திலிருந்தேன்.
                                     1990 ஆவணி இறுதியில் முதன்முதலாக எம் கிராமத்துக்குள் இலங்கை இராணுவம் பெரும்படையெடுப்போடு முன்னேறியது. அவர்கள் வானிலிருந்து விசிறிய துண்டுப் பிரசுரங்களின் சாரமிது -‘மக்கள் அனைவரும் பொது இடத்தில் கூடவேண்டும். வீடுகளில் யாரும் இருக்கக் கூடாது’.- அவ்வாறே மக்கள் வீடுகளை விட்டு ஓடிப் போய் ஆலயமொன்றில் கூடினார்கள்.தொடர்ந்து அயற் கிராமமொன்றிற்கு அகதிகளாகத் துரத்தப்பட்டு ஊரே வெளியேறியது. எதிர் பாராத நிலையில் ஊரை விட்டு வந்தவர்களாதலால் உடுத்திய உடுப்புத் தவிர எதுவுமற்றிருந்தோம்.இராணுவம் நிலை கொண்ட பின்னர் முதியவர்களும் நடுவயதைத் தாண்டிய ஆண்களும் தயங்கித் தயங்கி வீடுகளை நோக்கிப் போயினர்.உடமைகளை எடுத்துக் கொண்டு விரைவில் ஓடிப்போக வேண்டுமென்ற கட்டளையுடன் இராணுவத்தினரும் அதை அனுமதித்தனர். அவர்களது நோக்கம் எம் கிராமத்தில் நிலை கொண்டு மற்றுமொரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தது. ஊருக்குள் அகப்பட்ட வண்டில்களில் மாடுகளைப் பூட்டித் தளபாடங்கள்,தையல்மெசின்கள் என்று கூட ஏற்றி வந்தனர். அப்பாவும் அதைப் பார்த்துத் துணிச்சலில் விட்டு விட்டு ஓடிவந்த வீட்டுப் பொருட்களை எடுத்துவரப் புறப்பட்டார்.
வெறுங்கையராய்த் திரும்பிய அப்பா அதிர்ச்சியடைந்திருந்தார்.”எங்கட வீட்ட எரிச்சுப் போட்டாங்கள்.வெறும் சாம்பலாயிருக்கு” எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்.பக்கத்து வீடுகளோ சுற்றியுள்ள பகுதிகளிலோ எந்தவொரு வீடும் எரிக்கப்படவில்லை. எம்மைப் போலவே ஓலையால் வேயப்பட்ட அயல் வீடுகள் தப்பியிருந்தன. எங்கள் வீடு ஏன் எரிக்கப்பட்டதென யோசித்தேன். ஆனால், அந்தப் புத்தர் படத்தால் எங்கள் வீடு ஏன் காப்பாற்றப்படவில்லை என்று அப்பாவிடம் நான் கேட்கவேயில்லை.
 
சம்பவம் 2:
         இதே நாட்களில் காணாமற் போன தன் உறவினரைத் தேடி கடற்கரையோரம்,பற்றைகள் என இராணுவம் நிலை கொண்டுள்ள எம் ஊருக்குள், மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளிலெல்லாம் ஒருவர் அலைந்து திரிந்தார்.அவர் தன் கையில் ஒரு புத்தர் சிலையைத் தூக்கி வைத்திருந்தார் எனக் கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள்.இன்று வரை அவரைப் பற்றிய தகவலில்லை. இராணுவத்திடம் அகப்பட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென குடும்பத்தவர்கள் முடிவெடுத்தனர்.
 
         இளங்கோவன் எழுதிய ‘புத்தரின் கையெறிகுண்டு’ கவிதையைப் போல் பல கவிஞர்கள் புத்தரையும் போதிமரத்தையும் இராணுவத்தின் வன்முறைகளையிட்டுக் குறியீடாக்கிச் சொல்ல வருவது பௌத்தத்தைப் பழித்தலே.இராணுவ ஆயுதங்களைச் சீருடையை அணிந்தவனைப் பௌத்தனாக என்ற சொல்லுக்குள் அடக்கலாமா? எந்நாடாயினும் எவ்வினமாயினும் எம்மதமாயினும் இராணுவம் இராணுவமே.இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது நாம் அனுபவித்து உணர்ந்த வாசகமிது.
பௌத்த நாடான இலங்கை என்று வரைவிலக்கணம் சொல்வது தான் புத்தரைச் சாடுவதன் காரணமாயிருப்பின் பௌத்த நெறியை உள் வாங்காத ஆட்சியும் பிக்குகளின் இனவாதமும் தான் பௌத்தமும் புத்தரும் பழிக்கப்படவும் பழிபோடவும் காரணமா?
                         திரிபடைந்த விகார இந்துமனம் அல்லது மத அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட மனத்திலிருந்து பௌத்த நெறிகளை புத்தரை வெறுக்கும் அவசரப்போக்கிது.போரிற்கெதிராகவும் சமாதான நிலைக்காகவும் குரல் கொடுத்து வரும் பௌத்தர்களான பத்திரிகையாளர்கள்,இலக்கியம், திரைப்படங்களென யுத்தத்திற்கெதிரான கருத்துகளை எடுத்துச் செல்பவர்கள் மற்றும் மனிதவுரிமையாளர்களை இந்தப் போக்கு மூடிமறைத்து விடும்.அல்லது கண்டு கொள்ளாது இவ்வாறான கருத்துகளைப் பேசி,எழுதி பதிலுக்குப் பதிலான இனத்துவேஷம் காட்டப்படும்.இவை  மொழி,இனம்,மதம் என்ற வெறிகளின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன.தலதா மாளிகையிற் குண்டை வெடிக்க வைத்தல்,பள்ளிவாசலிற் கொலைகளைச் செய்தல் எனத் தொழிற்பட்ட இந்துமனோபாவத்தையும் கேள்விக்குள்ளாக்கி இவர்கள் எழுத முனைவார்களா?
                       பெரியார் இந்து சமயத்தையும் பார்ப்பனியத்தையும் தூக்கி எறியச் சொன்னார்.அதன் புராணங்கள்,பூசைகள்,சடங்குகள் எவ்விதத்திலும் மானிட மேன்மைக்கு வழிகாட்டுவதில்லை.பிற்போக்குத்தனமும் அறிவை மழுங்கடித்தலுமான இந்து சமயத்தையோ கடவுளர்களையோ விமர்சிப்பதும் விலக்குதலும் அவசியம். ஆனால் அன்பு,அமைதி,கருணை வடிவான புத்தரை, போதனைகளை, வன்மத்தோடு பௌத்த அரசு ஒன்றினால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்பதற்காகவும் பெரும்பான்மைச் சிங்களவர்கள் பௌத்தர்களாயிருப்பதாலும் ,போதிமரம், புத்தர்,பௌர்ணமி எல்லாவற்றையும் குறியீடுகளாக்கி புத்தரைக் காலால் எட்டியுதைத்திடுகின்றார்கள்.போருக்கும் வல்லுறவுக்கும் வலிய இழுத்து பௌத்தமே வன்முறையானதெனப் பொதுப்புத்தி மட்டத்தில் எழுதுவதும் பேசுவதும் சரியான போக்காகுமா?
                         குறிப்பிட்ட விடயமொன்றில் எதிர்த்தோ ஆதரித்தோ நிற்பவர்களைப் பற்றி ஆராயாது இனமாகவும் மதமாகவும் பிரித்துப்பேதம் பார்த்து பழி போடல் தொடர்ந்து வருகின்றது. அவற்றின் அரசியலை விடுத்து மனிதர்களைப் பிரித்தல் வருந்தத்தக்கதல்லவா? இவ்வாறே சிறிலங்கா அரசும் ஒட்டு மொத்தத் தமிழர்களும் பயங்கரவாதிகள் எனக் கூட்டுக்கொலைகளைச் செய்கிறது.தடுப்புமுகாம்களிலிருந்து மக்களை வெளியேற விடாது சாட்டுப்போக்குகளைச் சொல்லிக் காலங்கடத்துகிறது.
                   அயோத்திதாசரால் அம்பேத்காரால் தலித்துகளுக்கான மாற்றீடாகப் பௌத்தமே சொல்லப்பட்டது. இப்போது அது கொலைஞர்களின் மதமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.கவின்மலர், ‘எனக்கு நிறையக் கண்கள்’ என்ற தலைப்பில் வல்லினம் இணைய இதழ் அறிமுகத்திலும் இக்கவிதையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.”இன்றைய சூழலில் இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்து மதத்தை ஒழிக்கப் பௌத்தமே முன் வைக்கப்படுகிறது.ஆக திரும்பத் திரும்ப புத்தரைப் போருக்குள் இழுப்பது சரியா? என்று தோன்றுகிறது”.
குறிப்பிட்ட சில சொற்களை புத்தரை வலிந்து இழுத்துத் திணித்ததாகத் தோன்றும் வண்ணமே இக்கவிதை வாசிப்பு எனக்கிருந்தது.
ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் பௌத்த நெறி பின்பற்றப்படும் நிலையில், ஒரு நாடொன்றின் இராணுவம் பெரும்பான்மை இனமென்ற சட்டாம்பிள்ளைத்தனத்தால் செய்பவற்றை, ஆயுதபலத்தை அப்பாவிகளில் பிரயோகிப்பதை பௌத்தத்தைச் சொல்லிக் குறுக்கிவிடுதலும் மதவாதத்தின் ஒரு பகுதியெனச் சொல்லலாம்.சுருக்கமாகச் சொல்வதென்றால் பௌத்தம் ஒரு வாழ்க்கை நெறி.அதைப் பின்பற்றாதவர் பௌத்தரல்ல.

 www.vallinam.com.my 

அக்டோபர் 2009


3 thoughts on “புத்தர்,போதிமரம்,சரணம் மற்றும் மரணங்கள்

  1. /இளங்கோவன் எழுதிய ‘புத்தரின் கையெறிகுண்டு’ கவிதையைப் போல் பல கவிஞர்கள் புத்தரையும் போதிமரத்தையும் இராணுவத்தின் வன்முறைகளையிட்டு குறியீடாக்கிச் சொல்ல வருவது பௌத்தத்தை பழித்தலே//
    // திரிபடைந்த விகார இந்துமனம் அல்லது மத அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட மனத்திலிருந்து பௌத்த நெறிகளை புத்தரை வெறுக்கும் அவசரப்போக்கிது.//
    முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. புத்தரையும்,பௌத்த சாரத்தையும் குறை சொல்பவன் முட்டாள்.ஆனால் பௌத்த மதத்தின் பெயரால் இலங்கையில் நடக்கும் அரசபயங்கர வாதத்தைத்தான் கவிதையாய் காட்டுகிறோம்.இலங்கையில் புத்தர் பல்,தமிழனின் சதையை கடித்து கிழிக்கும்,கோரப்பல்லாய் மாறிப்போய் அறுபது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியவில்லையா?இல்லை சூத்தையாகிபோன,அந்த புத்தர் பல்லை தங்க முலாம் பூசி,உங்கள் வசதிக்கேற்ற,வசிகரமாக,மாற்ற முயற்சி பண்ணுகிறீர்களா?ஒதுக்கி தள்ளும் குப்பைகளென,சிதறிக்கிடக்கும் அகதிகளைப்போல, இலங்க்கையை விட்டு புத்தர் தப்பியோடி பல தசாப்தங்கலாயிவிட்டது தோழி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s