தர்மினி-

                 நான் உலக இசை பற்றிய அறிவு எதுவுமற்றவள்.தமிழ்த் திரைப்படப்பாடல்களின் எளிய இரசிகை.எனக்கு இராகங்கள்,தாளங்கள் கண்டுபிடிக்கத் தெரியாது.ஆனால் என் காதுகள் முப்பது வருடங்களாகத் திகட்டாமல் ஒரு பாடலைப் புதிதாகக் கேட்பதைப் போல இரசிப்பதைப் போல ஆகாஆகா என்று ஆனந்தித்துக் கேட்கின்றன.என் மனது உற்சாகமும் பரவசமுமடைகின்றது.இவ்வகை உணர்வுகளைப் பல பழைய புதிய பாடல்கள் தருகின்றன என்பதை மறுக்கமுடியாது.ஆனாலும் இந்தப் பாடலுக்கு ஈடிணையாக எப்பாடலையும் என்னால் சொல்லவோ அனுபவிக்கவோ இயலவில்லை.அழியாதகோலங்கள் திரைப்படத்திலிடம்பெற்ற -பூவண்ணம் போல நெஞ்சம் …….என்ற மனதை விட்டழியாத பாடல் தானது.

                          பள்ளிக்கூடக் காலத்தில் ஆசிரியர் வராத பாட நேரங்களிலெல்லாம் பாட்டுப்பாடுவது,சினிமாக்கதை சொல்வது,கதைப்புத்தகங்களை வாசித்துக் கதை சொல்வது என்று குழுக்களாகப் பிரிந்து வகுப்பிற் பரபரப்பாக இருப்போம். நான் புத்தகங்களை மௌனமாக இரசித்து வாசிக்கவே விரும்புவேன்.எங்கள் வகுப்பில் ரமணிச்சந்திரனின் கதைகள் மட்டுமே சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன.அக்காலத்தில் ஜெயகாந்தன்,ஜானகிராமன்,நா.பா,  ராஜம்கிருஷ்ணன்,பாக்கியம்ராமசாமி,காண்டேகர் போன்றவர்களின் புத்தகங்களைப் பிய்ந்து போகப் போகப் படித்து விட்டிருப்பேன்.ஆகவே ரமணிச்சந்திரனின் கதைகளைச் சொல்லும் குழுவை ஐந்து சதத்துக்குக் கூட மதித்து அந்தப் பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை. அதே போல திரைக்கதைக் குழுவும் ஒத்துவராது. நண்பர்கள்,சின்னத்தம்பி இரண்டு படங்களும் எங்கள் வகுப்பில் நூறுநாட்கள் தாண்டி ஓடிக் கொண்டிருந்தவை.ஆகவே நானும் இன்னும் இரு நண்பிகளுமான மிகச்சிறு குழுவொன்று மெதுவாகப் பாடல்களைப் பாடும். ஆனாலும் நாங்கள் ஒற்றுமையானவர்கள். சின்னத்தம்பி படம் ஓடிக் கொண்டிருக்கும் குழுவிடமிருந்து விண்ணப்பம் வரும் -தூளியிலெ ஆட வந்த வானத்து மின்மினியே- அவர்களது கதையினிடையில் பாடச் சொல்லிப் கேட்கப்படும்.கிழக்குவாசல்  படம் ஓடிக் கொண்டிருந்தால் -பச்சைமலப் பூவு நீ உச்சி மலத் தேனு -பாட வேண்டும். இப்படி எம் விருப்பங்களும் நேயர் விருப்பங்களுமாகப் பழைய புதிய, பலதும் பத்துமான பாடல்களைப் பாடும் போது கூட  பூவண்ணம் என்ற பாடலை வாயாற் பாட மாட்டேன். மற்றவர்களையும் பாடச்சொல்லிக்கேட்க மாட்டேன்.ஏன் அதன் பிறகும் ,இப்போது பிரான்சில் தோழர்களுடன் சேர்ந்து மதுவருந்தி மனமிழகி எல்லோரும் பாட்டுகளைப் பாடிக்கொண்டிருக்கும் போது  கூடக் கேட்பதில்லை.

                    சலீல்சௌத்ரியின் இசையின்றி என்னால் எவ்விதம் அப்பாட்டை இரசிக்க முடியும்? அப்பாடலின் இசையமைப்பாளர் பெரும் திறமையும் புகழும் பெற்ற வங்கமொழி இசையமைப்பாளர் என்பதை நான் நீண்ட காலங்கள் அறிந்திருக்கவில்லை.செம்மீன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் என்று அப்பெயர் தெரிந்திருந்தது. சில ஆண்டுகளின் முன்னர் தான் தமிழிலும் சிறந்த பாடல்களை இசையமைத்திருக்கிறாரென அறிந்து கொண்டேன். அவரால் இசையமைக்கப் பட்ட மற்றுமொரு எனக்கு மிகப் பிடித்த பாடல் -மாடப்புறாவே வா ஒரு தூது சொல்வேன் வா-.சலீல் சௌத்ரியின் இசைக்கோலங்கள் பற்றி எழுத்துகளால் சொல்லவே முடியவில்லை.அவற்றைக் கேட்டுணரத் தான் வேண்டும்.
                                             திரைப்படங்கள் பார்ப்பதை வெறுப்பவர்கள்,பொறுமையற்றவர்கள் இரசிக்கவே முடியாதென்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் திரைப்படப்பாடல்களை இரசிக்காதவர்கள் இருப்பார்களா? இப்பாடல்கள் கதையுடன் ஒன்றிக்க முடியாமல் இடைய+று செய்கின்றன. சம்பந்தமில்லாமல் திடீரெனப் பாடல்கள் ஆரம்பிக்கத் திடுக்கிடவேண்டியிருக்கிறது என்பது உண்மை தான். ஆயினும் காட்சியாக இரசிக்காதவர்கள் கூட இசையிலும் குரல்வளத்திலும் அதன் வரிகளிலும் இரசிகர்களாகிவிடுவார்கள். புதிய பதிய பாடல்கள் வெளியாகும் போது பலராலும் முணுமுணுக்கப் படும். பாட்டுகள் சிறிது காலத்திற் தேடுவாரற்று மறந்தவைகளாகி விடுகின்றன. சில பாடல்கள் மட்டும் பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்தவையாகி நிலைத்திருக்கின்றன. அழியாத கோலங்கள் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சிறுவயதில் என் காதில் நுழைந்த அப்பாடலின் ……என்ன சொல்லை இவ்விடத்தில் எழுதுவதென யோசிக்கிறேன்.வழமையாகச் சொல்வது போல அப்பாடலின் இனிமை, இசை ,வரிகள்,குரல்கள் எனத் தான் சொல்லமுடிகிறது.ஏதோ ஒர் சுகானுபவம் அப்பாடலினூடாக நானடைந்தது. பூவண்ணம் போல நெஞ்சம் பாடலின் இசைமெட்டுகளை மனதில் வைத்து யாராலும் சிறப்பாகப் பாடமுடியாது என்பது என் அபிப்பிராயம்.அப்பாடலைக் கேட்கும் போது இலகுவாகப் பாடக்கூடியதாகத் தோன்றலாம்.ஆனால் ஒவ்வொரு வரியும் வேறுவேறு இசைக்கதவுகளைத் திறந்து செல்கின்றன.பின்னணி இசைக்கருவிகளில்லாமல் அப்பாடல் முழுமையடையாது. சலீல்சௌத்ரியின் நுட்பமான இசைப்பை அமைதியாகக் கவனித்துக் கேட்டால் எங்கெங்கோ அவை அழைத்துச் செல்கின்றன.பூவண்ணம் பாடலின் ஆரம்ப இசையே ஒரு பூந்தோட்டக் கதவைத் திறந்ததைப் போல சுகந்தமாக எழுகின்றது. கங்கைஅமரனின் பாடல் வரிகள் மிக இனிமையும் கவித்துவமுமாக இசையுடன் பின்னிப் பெருக்கெடுத்து ஒரு நதியாய் அலையாய் தென்றலாய்த் தடவிச் சலசலத்துச் செல்கின்றன.

           பி.சுசீலா,பி.ஜெயச்சந்திரனின் குரல்கள் மட்டுமே அதைப் பாட முடியுமென நினைக்கத் தோன்றுமாறு இருவரும் இழைந்து இணைந்து பாடியிருக்கிறார்கள்.ஆனால் அப்பாடலின் காட்சியைப் பார்த்தால் இவற்றை இரசிக்கமுடியாமலிருக்கும்.ஷோபாவும் பிரதாப்போத்தனும் இப்பாடலில் கடைசி இடத்தைப் பிடித்தவர்களாகவே எனக்குத் தோன்றுகின்றது. நீங்களும் இப்பாடலை மறந்திருந்தாலோ, கேட்காமல் இருந்தாலோ அல்லது பல காலங்களிற்குப் பிறகு கேட்கத் தோன்றுகிறது என்றாலோ கேட்டுப்பாருங்கள்.

 
 
 

 

Advertisements