மோனிகா

                        காஞ்சிவரம் படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கியபோது அது பற்பல சர்ச்சைகளை உண்டாக்கிற்று. இந்தி மொழிப்படமான “தாரே ஜமீன் பே”விற்கு கொடுத்திருக்கலாம் என்று பத்திரிக்கையாளர் ஞாநி கருத்து தெரிவித்தார். நடுவர்களில் மூன்று மலையாளிகளும் ஒரு தமிழரும் இருந்ததே இதற்கு காரணம் என்று சிலரும் எழுதினர்.

                 ஆனால், தற்போது வெளியான சிறந்த தமிழ் படங்களுக்கான மாநில விருதுகளை பார்த்தால் இவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று தெரியவில்லை. 2007ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்படம் “சிவாஜி” சிறந்த நடிகர் ரஜினிகாந்த், 2008ன் சிறந்த படம் “தசாவதாரம்”-சிறந்த நடிகர் கமலஹாசன் என்கிற வகையில் பட்டியல் நீள்கிறது. என்ன கொடுமை இது? இன்னும் எத்தனை காலம்தான் திரும்ப திரும்ப இவர்களே போட்டியில் பரிசு வாங்கிக் கொண்டிருப்பார்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் எத்தனை மணிமணியான தமிழ் படங்கள் புது முகங்களுடனும், புதிய இளம் இயக்குனர்களாலும் இயக்கப்பட்டு வெளியாகியுள்ளன. பூ, சுப்பிரமணியபுரம் போன்றவை சிறு உதாரணங்கள். திரையுலக ஜாம்பவான்களாக வலம் வரும் ரஜினியும், கமலும் தங்களது வயதுக்கும், அனுபவத்திற்கும் அவர்களது பெயரில் பல பரிசுகளை நியமனம் செய்து மற்றவர்களை ஊக்குவித்தல்தானே அறம். இளம் தலைமுறையினருக்கு ஊக்கமும், உற்சாகமும் தேவை என்றுணராத கலைஞர்களாகிவிட்டார்களல்லவா அவர்கள்.

சிவாஜிகணேசனின் பெயரிலோ, எம்.ஜி.ஆர்பெயரிலோ மற்றும் சிலபல கலைஞர்களின் பெயரிலோ பரிசளிப்பது சிலை திறப்பதைக் காட்டிலும் பயனுள்ளதன்றோ?

Advertisements