கண்ணுக்குத் தெரியா உடல்கள் – தேசியம், தொழில், அங்கீகாரம்

-மோனிகா

உழைப்பாளர் தினத்தை ஒட்டி மே மாதம் ஒன்றாம் நாளன்று இந்த கட்டுரையை பதிப்பித்து விட வேண்டும் என்று விடாக்கண்டன் கொடாக்கண்டனாய் எழுத உட்கார்ந்தபோது தொலைக்காட்சியில் “லா அண்டு ஆர்டர்” (சட்டமும் ஒழுங்கும்) என்ற தொடர் போய்க் கொண்டிருந்தது.(இருந்தும் ஐந்து மாதங்கள் கழித்து தொடர்ந்து பதிப்பித்துவிட்டேன்) இத் தொடரின் தனித்தன்மை பல நேரங்களில் சட்டத்தின் ஓட்டைகளின் வழியே இன/தன மேட்டுக்குடியினர் தப்பியோடிவிடும் யதார்த்தத்தையும் கொண்டு தருவது. மெக்ஸிகோவின் எல்லைகளைக் கடந்து வேலை தேடிவரும் சட்டத்தின் அங்கீகாரமற்ற தொழிலாளர்களை வேலை தருவதாகக் கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்று அவர்களின் முகத்தில் அவரது நாட்டின் முத்திரையைக் குத்தி கொன்றுவரும் மூன்று இளைஞர்களைப் பற்றியது இந்த வார கதை. இம்மூன்று இளைஞர்களும் அமெரிக்கர்களா என்றால் அதுவுமல்ல. அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே குடியுரிமை பெற்ற மெக்ஸிகன் மக்கள். பின் ஏன் அவர்களிடையே இந்த காழ்ப்பு உணர்வு? இன ரீதியில் அவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறது அச்சமூகத்தின் ஒரு பகுதி. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தொடரின் முடிவில் அவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படாமலேயே தப்பித்தும் விடுகின்றனர். காரணம் குற்றத்திற்கு தீர்ப்பளிக்கும் பொதுமக்கள் அவர்களது குடியுரிமையைக் கருதி அவர்களது கோபங்களை மன்னித்துவிடுகிறார்கள். சிக்காகோவின் தொழிலாளர் குழுமம் 1886ம் ஆண்டு எட்டுமணிநேர உழைப்புரிமையைக் கேட்டு போராடுகையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை போலீசார் கொன்று குவித்ததில் தொடங்கி அதன் ஆண்டுவிழாக்களை பிரஞ்சுப் புரட்சிக்குப் பிறகு பாரிசில் 1889ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. அதன்பிறகு 1894லிலும் 1919 இலும் மே தின போராட்டங்கள் தொடந்தன. இத் தொழிலாளர் போராட்டங்கள் வெற்றி பெற்ற போதிலும் ஒரு மணி நேரத்திற்கான குறைந்த பட்ச சம்பளமென்பது மிகவும் சொற்பம். அது ஏன்? மூன்றாமுலக நாடுகளில் அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இன்றும்  ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆந்திரா, குஜராத் மற்றும் பல இந்திய மாநிலங்களில் இருப்பது இலை மறைவுக் காய் மறைவான விஷயம்தான். பெண்ணின் திருமண செலவிற்காக பணம் வாங்கிவிட்டு அதைத் திருப்பித் தரமுடியாமல் குடும்பம் முழுவதும் கொத்தடிமைச் சாசனம் எழுதிக் கொடுப்பது இவ்வெழுதாச் சட்டங்களின் வழமை. ஒரு புறம் இந்தியா மற்றும் மூன்றாமுலக நாடுகளில் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றனவென்றால் மறுபுறம் நாடேறிகளின் உடல்கள்  வல்லரசுகளின் வக்கிரத் தந்திரங்களுக்கு வசமாக்கப்படுகின்றன . கண்டெயினர் லாரிகளின் மூச்சுத்திணறிக் கொண்டும் கள்ளத்தோணிகளிலும் இடம் பெயர்ந்தும் வரும் இம்மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு இலக்கம் என்னும் சோஷியல் செக்யூரிட்டி நம்பர் கிடையாது. ஆனாலும் இவர்களின் சேவை இந்நாடுகளுக்குத் தேவை. கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கும், உணவகங்களில் தட்டு கழுவுவதற்கும், குழந்தைகளின் மலம் அள்ளுவதற்கும், நாய்களை நடத்திச் செல்வதற்கும் மேற்கண்ட இலக்கங்களை (அரசாங்கத்தினரிடம்) பெற்றவர்கள் முன்வருவதில்லை. காரணம் இத்தகைய தொழில்களுக்கு நிர்ணயக்கப்படும் சம்பளம் அவர்களுக்கு கட்டுப்படியாகாது. தொழிலாளர் யூனியன்களுக்குள் பல சலுகைகளும் பாரபட்சங்களும் இருக்கின்ற அதே நேரம் இருப்பின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத எண்ணற்ற சனங்கள் இந்நாடுகளின் விலங்குகளைவிடக் கேவலாமாக அடைந்து கிடக்கின்றனர்.art work 2 018

சாலை ஓரங்களில் அன்றாடம் படுத்துறங்கும் மக்களுக்கு வாக்காளர் அட்டை, நியாய விலைக்கடை அட்டை, பாஸ்போர்டு என்று எதுவுமில்லை. முகவரி துலைத்த அவர்கள் சென்ஸஸ் கணக்கெடுப்பில் காணாமல் போன இந்தியப் பிரஜைகள். அரசாங்கங்கள் இவர்களுக்காக செலவிடுவது இரண்டு விஷயங்களுக்காக, ஒன்று: சிறைச்சாலை இரண்டு: இவர்களின் குழந்தைகளின் பள்ளிக்கூடம். ஆனால், இவர்கள் வாங்கும் பொருட்கள் ஒவ்வொன்றிற்குமான வரி, இவர்களது வேலைகளால் மிச்சப்படுத்தப்படும் மனித சக்தி ((human energy resources) ஏராளம். காலனீய ஆதிக்கத்தில் சுரண்டப்பட்ட பணங்களைக் கொண்டு கட்டி எழுப்பிய இந்த சாம்ராஜ்ஜியங்களில் அவர்களுக்கு கை கட்டி கூலி வேலை செய்ய இம்மக்களை வைத்திருக்கும் அரசுகளின் முகமூடிதான் அங்கீகாரமும் குடியுரிமையும். மெக்ஸிகோவிலிருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு வருடம்தோறும் 2,40,000 பேர் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்கிறது தகவல்கள். சட்டவிரோதமான குடி மக்கள் ஒரு புறம் இருக்கையில் மறுபுறம் இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிகளுக்கான காரணிகள் அனைத்தும் அறத்திற்குட்பட்டவையா?

காசினோக்கள், ஆயுத வியாபாரங்கள், பாலியல் தொழில் போன்ற மறைமுகமான பல வழிகளின் மூலம் கிடைக்கும் பணங்கள் கண்ணுக்குத் தெரியாமல்தான் போகின்றன. தங்களது இச்சைக்குரிய பின் காலனீய காலனிகளாக இவர்கள் வளர்த்தெடுக்கும் நாடுகளான லத்தீன் அமெரிக்கா, பிரேஸில், தாய்லாந்து போன்ற இடங்களில் பாலியல் தொழில் அந்நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2004 ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு எண்ணிக்கைப்பட்டியல் அவ்வாண்டு தாய்லாந்தில் 2.8 மில்லியன் பாலியல் தொழிலாளிகள் இருந்ததாக குறிப்பிடுகிறது. அதில் இரண்டு மில்லியன் பெண்களும் 20 ஆயிரம் ஆண் பாலியல் தொழிலாளிகளும் 8 இலட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுமாவர். மறுபடியும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு திரும்புவோமானால், கண்ணுக்குத் தெரியாத பல உடல்கள் தேசங்களின் வரைபடங்களுள் மறைந்து போவதுடன் அத்தேசங்களின் வளர்ச்சிக்கும் வழிகோலாக இருக்கின்றன. அவர்களது இருப்பும் உழைப்பும் இருட்டடிப்பிற்கு உட்படுகிற இந்நிலையையே கடந்த மேதினத்தன்று இக்கட்டுரை நினைவு கூற விழைந்தது.

ஓவியம்  :மோனிகா

Advertisements