28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு…

ஐரோப்பா, லண்டன்  சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து  நடைபெற்று வருகின்ற  புகலிடப் பெண்கள் சந்திப்பின் 28வது தொடர் ஒக்ரோபர் 10ஆம் திகதி சுவிஸ் உஸ்ணாக்கில் நடைபெற்றது.

image2

Image1

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்கள், படைப்பாளிகள், பெண்ணியவாதிகள்,  ஓவியைகள் என  ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து பெண்கள்  பங்கு பற்றினார்கள்.  றஞ்சி, தில்லை, நளாயினி, பிரபா ஆகியோரின்  ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது. 4 வது தடவையாக சுவிஸில் நடைபெறும் பெண்கள் சந்திப்பு பற்றி குறிப்பிட்டு   றஞ்சி வரவேற்புரையை நிகழ்த்தினார். சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலண்டனிலிருந்து வருகை தந்திருந்த ஓவியை அருந்ததியின் ஓவியங்கள் சிலவும், கவிதைகள் சிலவும்  மண்டபத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன அவற்றில் நம் ஊர்த் திண்ணையின் பயன்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்த   ஓவியங்கள் அங்கு வந்திருந்த பெண்களின் கவனத்தைப் பெற்றதோடு அப் பெண்களின் பழைய நினைவுகளையும் மீட்டன.

arunthathy2010

என் மதிந்த வயிற்றின் மேல்
கை வைத்து உன்னை
உணர்ந்து பார்க்கையில் – நான்
என்னை மறப்பேன் – உன்
ஒவ்வொரு அசைவும் எனக்குப் பாடம்

காலையில் கை அசைப்பதும்
மதியம் படுத்துறங்குவதும்
மாலையில் குட்டிக்கரணம் போடுவதுமாய்- நீ
என் கருவறையில் அடிக்கும் லூட்டிகள்
ஆயிரம்… ஆயிரம் – அந்த
பத்து மாதங்கள்
எனக்கும் உனக்குமான
பிரத்தியேக கணங்கள்-
எமை
பிரிக்க முடியாப் பொழுகள்
ஒரு நாள்,
நீ ஓ என கத்திக்கொண்டு
வெளியில் வருவாய்!
அந்தப் பொழுதுக்காய்
நான் காத்திருப்பேன்.

அருந்ததி – லண்டன்

(மண்டபத்தில் தொங்கிய   கவிதை ஒன்று)

28வது தொடரின் முதலாவது நிகழ்வை உச்ணாக் மாவட்ட பிறமொழித் தாய்மாருக்கான பெண்கள் அமைப்பின் தலைவி எரிக்கா மாயர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சுவிஸிலுள்ள பிறமொழித் தாய்மார்களின் வாழ்வியல் மீதான தகவல்களை அறியத் தந்ததோடு இவ்வாறான தாய்மார்கள் எதிர்கொள்ளும் மொழிரீதியான  சிக்கல்களையும் பாலியல் ரீதியான பிரச்சினைகளையும் அதே நேரம் கலாச்சார ரீதியாக அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினார். சுவிஸ் அரசாங்கம்   வெளிநாட்டு தாய்மார்களுக்கு உதவி புரியவும் அவர்கள்  இந்நாட்டில் வாழ்வதால் டொச் மொழியை கற்றுக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும் என்றும் அதனால் அவர்களும் அவர்கள் குழந்தைகளும் பயனடைவார்கள் என்றும் அதற்காக தாங்கள்  பல உதவிகளை செய்ய காத்திருப்பதாகவும் அதற்கு   intergration    என்ற  அமைப்பின் மூலம் சுவிஸ் அரசாங்கம்  பல  செயற்திட்டங்களையும் ஆரம்பித்திருப்பதாகவும் எடுத்துச் சொன்னதோடு  அதற்கு பெண்கள் சந்திப்பு உதவ முடிந்தால் அதை தான் வரவேற்பதாகவும் கூறினார்.  அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பெண்கள்  தமது கருத்துக்களை   எரிக்கா மாயருடன் பகிர்ந்து கொண்டனர்  அவரின் உரையை யேர்மனியிலிருந்து வந்திருந்த தேவா மொழிபெயாத்திருந்தார்.

அடுத்த நிகழ்வாக  யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பெண்களும் அபிவிருத்தியும் என்ற நிறுவனத்தின் நிலையப் பொறுப்பாளர்   சரோஜா சிவச்சந்திரன்  இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகளும், விளைவுகளும், பெண்களின் எதிர்காலமும் என்ற தலைப்பிலும், வடக்கு கிழக்கு பெண்களின் இன்றைய நிலவரம் பற்றியும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த யுத்தத்தால் ஏற்பட்டுள்ள இடப்பெயர்வுகள் முழுச் சமூகத்தையுமே பாதிப்புக்குளாக்கியுள்ளது. மீண்டும் சென்று வாழ முடியாமல் நிலங்களும் தரைகளும் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளன இந்த கொடிய யுத்தத்தால்  குடும்பத்தின் பல அங்கத்தவர்களை இழந்துள்ளோம். அங்கவீனர்களாகியுள்ளோம். பல பெண்கள் கணவனையிழந்து, வாழ்வையிழந்து, குழந்தைகளையிழந்து மன நோயாளிகளாக உள்ளனர். அழிந்து செல்லும் எமது சமூகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க நாம் விரும்புகிறோம். முற்றும் முழுதாக போரினாலும், முகாம்களிலும் அதே நேரம்  பொருளாதார பலமிழந்த நிலையிலும் பிள்ளைகளின், பெண்களின் எதிர்காலம் அடைபட்டே உள்ளன.

இவ்வாறு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் இழப்பின் துயர்களை சந்தித்துள்ளனர்.  எதை நாம் கூறுவது ஆழமான எங்கள் வலிகளின் கோடுகள் இவை.  மனித உரிமைகள் மறுக்கபடாமல் எமது மொழிக்கான உரிமையும் மனித உறவுகளுக்கான மதிப்பும் பயம் இல்லாது வாழும் சூழல் போன்றவை முக்கியமானது. பெண்களின் சுயாதீனமான வாழ்க்கையை இல்லாதொழிக்கும் ஒரு கருவியாகவே இந்த யுத்தம் தொடர்ந்துள்ளது. சிறுமியர் நிலைகளை மேலும் நோக்கின் குடும்பத்தில் பெற்றோரை இழந்த சிறுமியர் குடும்பத்தின் சுமைகளை சுமக்க வேண்டியவராகின்றனர். இதனால், பெரும்பான்மையான  சிறுமியரின் கல்வி நிலை பாதிக்கப் படுகின்றது. இச்சிறுமியர் தனக்கு கீழ் உள்ள தம்பி தங்கையரை பராமரிக்க வேண்டியுள்ளதால் இடைநடுவில் கல்வியை இழக்கின்றனர். வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பிரச்சினைகள் அரசியல் நோக்கில் அணுகப்படுவதால் ஆண்களது இயல்பான சவால் அணுகுமுறை பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக வலுப்படுத்துவதாகவும், விரிவுபடுத்துவதாகவும் காணப்படுகிறது. பொருளாதார நிலையில் நின்று பார்ப்பின் யதார்த்தத்தின் பயங்கரத்தை புரிந்துகொள்ள முடியும்.

அதுவும் பெண்நிலை நோக்கிலான பொருளாதார அணுகுமுறை முக்கியம் தொடர்ச்சியான இழப்புக்களை எவராலும் எதிர் கொண்டு வாழ்வது என்பது முடியாத காரியம் வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்நிலை கணவனையிழந்த பெண்களின் வாழ்நிலை என்பன இன்று பேசப்படாத பொருளாகி விட்டன. நாம் எம்மால் இயன்ற உதவிகைள இப் பெண்களுக்கு செய்ய முன் வரவேண்டும். பொருளாதார ரீதியாக இவற்றை நாம் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். சரோஜா சிவச்சந்திரனின் நிகழ்வுக்கு தில்லை தலைமை தாங்கினார்.

இந் நிகழ்வைத் தொடர்ந்து நந்தினி தலைமையில் இடம்பெற்ற அமர்வில் பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த பெண்ணியச் செயற்பாட்டாளர் பரிமளா வாடகைக்கு விடப்படும் கருவறைகள்  என்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை முன்வைத்தார். இந்தியா உலகக் குழந்தைகளை தனது நாட்டில் உற்பத்தி செய்வதில் முன்னேறி வருகிறது. ((Baby made in india )  பெண்கள் மீதான சுரண்டலின்  இன்னொரு வடிவம் தான் பெண்களின் கருவறைகள் வாடகைக்கு விடப்படும் பிரச்சினை.  இன்று பெண்கள் மேலான சுரண்டல் அவர்களுடைய கருவறைகளை அவர்களுடைய கணவன்மார்களே வாடகைக்கு விடும் அவலம்.

வெளிநாடுகளில் பரவலாகவும்  உள் நாடுகளில் ரகசியமாகவும்  செயற்கை முறையில் குழந்தை உருவாக்குவதில் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் வந்து இந்தியாவில் குவிகிறார்கள். இணையம் மூலமாகவும் வாடகை கருவறைகள் பேரம் பேசப்படுகின்றன. ஒரு குழந்தையை உருவாக்குவது பல சிக்கல் உடையது.  ஓரினச் சேர்க்கை தம்பதிகளை இப்பிரச்சினையிலிருந்து  தவிர்த்து விடுகின்றனர். வாடகைத் தாயின் கருவறையில் வளரும் அக் குழந்தையின் மரபணுக்களும் இரத்தமும் பெற்றோரை சார்ந்தது. (விந்தையும் கரு முட்டையையும் கொடுத்தவர்களின் மரபணுக்களையே குழந்தை கொண்டிருக்கும்.) இரு பெண்கள், ஒரு ஆணின் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்கின்றார்கள். எங்களுடைய சமுதாயத்தில்  ஒரு பெண் செய்யக் கூடிய மிக உயர்ந்த சேவைதான் வாடகைக்கு கருவறைகள் விடுவது என இதில் ஈடுபட்டுள்ள டாக்டர் நயனா பட்டேல் பெருமிதம் கொள்கிறார்.

ஆனால் இதில் உள்ள  அரசியல், ஆதிக்கம், பெண்களின் மன உளவியல் என்பன புதைக்கப்பட்டு விடுகின்றன. வறுமையில் உள்ள பெண்களை பலவந்தப்படுத்தும் கணவன்மார்கள் 4000 யூரோவுக்கு தமது மனைவிமாரின் கருவறைகளை வாடகைக்கு விடுகின்றனர். அப்பெண்  9 மாதம் தனது வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு ஒட்சிசன், தண்ணீர் ,சத்து என அனைத்தையும் கொடுத்து ஒரு வேலையாக நினைத்து குழந்தையை சுமக்கவில்லை என வாடகைத்தாயின் பேட்டியில் அறிய முடிகிறது. 90 வாடகைத்தாய்மாரின் மூலம் 120 குழந்தைகளை பிறப்பித்துள்ளார்கள். இதில் 50 வயதுடைய பெண்ணும் அடக்கம். வாடகைக்கு விடப்படும் கருவறைகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றன எனக் கூறும் ஊடகவியலாளர்கள் குழந்தையில்லாத வெளிநாட்டவர்கள் தங்கள் குழந்தைக்கனவை இந்தியாவில் நனவாக்கி கொண்டு இந்திய குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்கிறோம். என்ற வாசகத்தை உச்சரிக்க வாடகைக் கருவறைகளுக்கு ஒப்பந்தம் செய்யும்  வைத்தியர்களது கட்டாப்பெட்டி நிறைகிறது என்கின்றனர்.     இப்பிரச்சினையை வீடியோ  ஆவணப்படமாக காட்டியதோடு  பிரஞ்சில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து தனது கருத்துக்களை  முன் வைத்துப் பேசினார் பரிமளா.

அடுத்த நிகழ்வாக  இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்  என்ற  தலைப்பின் கீழ் தில்லை தனது கருத்தை முன்வைத்துப் பேசினார். இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.
இன்றைய அடையாள அரசியலின் பிரத்தியேகங்களை அடையாளங் காண்பதிலும், பிரக்ஞைகொள்வதிலும் எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்பதை சுயவிமர்சனம் செய்யவேண்டியிருக்கிறது. ஆணாதிக்க கட்டமைப்பு அதன் சித்தாந்தம், அதன் புனைவு அதன் அத்தனை ஆதிக்க கட்டுமானங்களையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை மேற்கொள்ளும் அதேவேளை ஆணாதிக்கத்திற்கு அடுத்ததாக பெண்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் சமகாலத்தில் நிற்கவேண்டிய தேவை உள்ளதை சுட்டிக்காட்டி  மிக அழகாக தனது கருத்தை முன்வைத்தார்.  தில்லையின் உரையாடலுக்கு தேவா தலைமை தாங்கினார். (தில்லையின் இக்கட்டுரையை ஊடறு, மற்றும் புகலியில்  முழுமையாக வாசிக்கலாம்.)

மல்லிகா தலைமையில் நடைபெற்ற அமர்வில் பிரபா   கணவனை இழந்த பெண்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்கால வாழ்வு குறித்த தனது கருத்துக்களை முன்வைத்தார்

விதவை என்ற சொல்லில் தனக்கு உடன்பாடு இருப்பதால் தான் விதவைகள் என்ற சொல்லையே பாவிப்பதாகவும் கூறிய பிரபா தனது கருத்துக்களை முன்வைத்தார். தொடரும் யுத்த அவலம் கணவனையிழந்த பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தே செல்கின்றது. வலிகாமத்தின் ஆனைக்கோட்டை, சாவற்காடு கிராமத்தில் மட்டும் ஒட்டு மொத்தப் பெண்களில் 30 சதவீதமானவர்கள் கணவனையிழந்த பெண்கள். அவர்களுக்கு எந்தவொரு தரப்புமே உதவுவதுமில்லை. அதே போல் கிழக்கில் 45,000க்குத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கான உதவிகளுக்கென பல அமைப்புக்கள் செயற்படுகின்ற போதும் அவர்கள் கணவனையிழந்த பெண்கள் தொடர்பில் கூடிய கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. இடையிடையே கணவனையிழந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களையோ 100 ரூபா பிச்சைக்காசு வழங்குவதோடு மட்டும் தமது பணியை நிறுத்திக் கொள்கிறார்கள். கணவனையிழந்த பெண்களுக்கு  நீண்ட காலத்தில் உதவக் கூடியவாறான எந்தவொரு உதவியும் இப் பெண்கள் அமைப்புகளிடமிருந்து கிடைப்பதாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கணவனையிழந்த பெண்கள். மோசமான உளவியல் நோய்களிற்கு உள்ளாகியுள்ளனர். என்றும்  எடுத்துக் கூறினார் அவரின் கருத்துக்களை தொடர்ந்து கலந்து கொண்ட பெண்கள் கணவனையிழந்த  பெண்களுக்கு  புலம்பெயர் நாடுகளில் இருந்து எந்த வகையில் நலன்புரி உதவிகளை வழங்குவது எனவும்  அவ்வாறான உதவிகளை வழங்குவதிலுள்ள நன்மை தீமைகளும் ஆராயப்பட்டதுடன் சில  நடைமுறைக்குச் சாத்தியமான சில விடயங்களையும்  சில பெண்கள் முன்வைத்திருந்தனர். உண்மையில் இது வரவேற்கப்பட வேண்டியதொன்று என்றும் தனிப்பட்டரீதியாகவோ அல்லது குழுரீதியாகவோ இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காலம் என்றும் அவற்றிற்கான செயற்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

19 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற பெண்கள் சந்திப்பானது புகலிடச்சூழலில் ஓரளவுக்கேனும் பெண்கள் ஒன்றிணையும் ஒரு மாற்றுக்கருத்திற்கான தளமாக உள்ளது. வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளையும், தனித்துவமான பிரத்தியேகங்களையும்  கொண்ட பல பெண்கள் இச்சந்திப்பில் பங்கு பற்றி தமது கருத்துக்களை முன்வைத்தமை வரவேற்கத் தக்கது. பெண்கள் சந்திப்பு ஒரு சில பயிற்சிப்பட்டறைகளையும்  அதாவது ஓவியம்,  நாடகம் போன்றவற்றையும்  நடத்தலாம் என்ற கருத்துக்களையும் கலந்து கொண்ட பெண்கள் முன்வைத்ததோடு  பெண்கள் சந்திப்பு அதை பாசீலிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  இறுதியாக விஜி நன்றியுரை கூறினார்.

அடுத்த 29வது பெண்கள்  சந்திப்பு யேர்மனியில் நடைபெற உள்ளது.

தொகுப்பு: றஞ்சி, தில்லை (சுவிஸ்)

2 thoughts on “28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s