Naan Viddiya_Book Cover BackNaan Viddiya_Book Cover Front

 தர்மினி    

பலருக்கும் திருநங்கைகள் பற்றிய பிரமைகள் தமிழ்த் திரைப்படங்களில் அவர்களைப் பற்றிக் கட்டமைப்பதில் தோன்றுகிறது. ஒரு காட்சியிலோ பாடலின் இடையிலோ தோன்றுதல் என்பதாக அமைகிறது. அவற்றின் தொனி எதுவென்பதும் அக்காட்சிகளில் தெளிவாகத் தென்படும். பொதுவெளிச்சமூகம் திரு நங்கைகள் பற்றிய எதுவிதமான புரிதல்களும் அற்றதாகவே உள்ளது. அவர்களுடைய பிரச்சனைகளை உணர்வுகளை உடலின் மாற்றங்களை விளங்கிக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

அவர்களும் சாதாரணமாக எல்லாக் குழந்தைகளையும் போலவே ஒரு குடும்பத்தில் பிறக்கிறார்கள். பதின் பருவமானதும் தன்னுடலின் அடையாளம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எண்ணங்களுடன் போராட்டம் ஆரம்பமாகிறது. தமது பாலினத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களாகிறார்கள். உடலுக்குப் பொருத்தமற்ற உடையை அணிந்தது போல அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். அவர்களது வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனை தமது அடையாளத்தை நிலைநாட்டுதல் என்பதாகிறது.

ஒரு ஆண் தனது ஆர்வங்களும் செயற்பாடுகளும் பெண்ணுடையதாகவும் தன்னுடலைப் பெண்ணாகவே மற்றவர் முன்னிலையில் அடையாளப்படுத்தவும் விரும்புகிறார். அவரால் ஆண் என்ற அடையாளம் வெறுக்கப்படுகிறது. இந்த வேதனையைப் பொறுக்க முடியாதவர்கள் குடும்பம், சமூகம் தரும் எல்லா விதமான இழிவுகளையும் தாங்குகின்றனர். அவற்றை எதிர்கொண்டு போராடத் தயங்குவதில்லை.

செப்ரம்பர் 2008 புதிய கோடாங்கியில் வெ. முனிஷ் என்பவரால் ஆண்மை + பெண்மை = அரவாணியம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதிலே பின்வருமாறு எழுதியுள்ளார். ‘ஆண்மை மிகுந்தவர்கள் ஆண்கள். பெண்மை மிகுந்தவர்கள் பெண்கள். ஆண்மையும் பெண்மையும் கலந்தவர்கள் ………………..? இவர்கள் உடலளவில் ஆணாக இருப்பார்கள். உள்ளத்தளவில் பெண்ணாக இருப்பார்கள். இன்னும் சிலர் உடலளவில் பெண்ணாக இருப்பார்கள். உள்ளத்தளவில் ஆணாக இருப்பார்கள். எங்கே இருக்கிறார்கள் இவர்கள்? உலகத்தில் மனிதன் வாழக்கூடிய அனைத்து இடங்களிலும்’ என்று குறிப்பிட்டு தொடர்ந்து ஆண்மையும் பெண்மையும் திரிந்தவர்களைக் குறிக்கும் பெயர்களைப் பட்டியலிடுகிறார். தொல்காப்பியம் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள பெயர்கள் பின்வருமாறு:      ஆண்மை திரிந்தவர்கள், பெண்மை திரிந்தவர்கள், பேடி, அலி மருள், எச்சம், அண்ணகள், அண்ணாவுன், அல்லி, அழிதூஉ, ஆணலி, இடடி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டகம், சண்டன், தூதுபரன், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகன், பெண்ணைவாயன், பேடர், பேடு, பேதை, மகண்மா, வசங்கெட்டவன், வண்டரவன், வருடவரன், வறடன், அஜக்கு, ஒம்பது, கீரைவடை, பொட்டை, பொண்டுகன், மூன்றாவது பாலினம், பாலினமாறிகள், பெண்கள், அரவாணிகன், திருநங்கைகள் என்பதாகப் பெயர்ப்பட்டியல் முடிகிறது.

உயர்வு, தாழ்வு என்ற இரு வகையினுள் இப்பெயர்களை வகுக்கலாம். இருவிதமாகவும் குறிப்பிடப்படுவது புலனாகிறது. நாம் மனித இனத்தின் இரு பாலின வகைப்படுத்தலை கேள்விக்குட்படுத்த வேண்டியதாகிறது. இனப்பெருக்கத் தொடர்ச்சியற்ற இச்சமூகம் தனக்கென குடும்ப அமைப்புகளையும் தனக்கேயுரிய சடங்குகளையும் மரபுகளையும் கொண்டுள்ளது. இவர்கள் பற்றிய வாய்மொழிக் கதைகள் அதிகமாகவும் எழுத்து வழிச் செய்திகள் மிகமிகக் குறைவாகவும் காணப்படுகின்றன.

தற்போது பரவலாக அழைக்கப்படும் அரவானி என்னும் பெயர் உருவான சம்பவம் ஒன்று உண்டு.

விழுப்புரத்தின் கூவாகம் கிராமத்தில் ஆண்டு தோறும் கூத்தாண்டவர் ஆலயத் திருவிழா நடைபெறும். 1994ம் வருடம் அத்திருவிழாவில் அந்த மாவட்ட பொலிஸ் அதிகாரி ஆர்.ரவி கலந்துகொண்டு அரவானி என்னும் பெயரைச் சூட்டினார்.

மகாபாரதக் கதையில் அர்ச்சுனனின் மகனான அரவான் போரின் வெற்றிக்காகப் பலி கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவன் திருமணமாகாதவன். போருக்கு முதல் நாள் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்கிறான். கிருஷ்ணன் பெண் வேடத்தில் (மோகினி அவதாரம்) சென்று திருமணம் செய்கிறார். அடுத்த நாளே அரவான் பலிக்களம் செல்கிறான். இதனை அடியொற்றியே அரவானைத் தம் கணவனாக ஏற்று வருடத்தில் ஒரு முறை தாலி கட்டுகின்றனர். மறுநாள் தாலியைக் கழற்றி ஒப்பாரி வைக்கின்றனர். அவர்களது வாழ்வின் துயரங்கள், சமூகச் சங்கடங்கள், தமது பிறந்த வீட்டாரின் புறக்கணிப்பு, இவைகள் ஒப்பாரியில் அடிப்படையாக அமைகின்றன. அரவானின் மனைவி அரவானி என்பது காரணப் பெயராகவும் சமயம் சம்பந்தப்பட்ட மரியாதைக்குரியதாகவும் இருப்பதால் ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் திருநங்கை என்பதில் ஆண்பால், பெண்பால் சேர்ந்திருப்பதும் மகிழ்வுடன் ஏற்கப்படுகிறது.

ஆனால் திருநங்கைகள் மீதான அலட்சியத்துடனும் கிண்டல் செய்யும் மனோபாவத்துடனுமே பொதுவெளிச் சமூகம் இருக்கிறது. இவர்களைச் சக மனிதர்களாகப் பார்ப்பதற்கு அது இன்னும் தயாராகவில்லை என்றே சொல்லலாம். குற்றவுணர்வு அற்றவர்களாகவே பொதுவெளிச்சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திருநங்கைகளுக்கான உதவும் அமைப்புகளோ பெரும்பாலும் இந்தியாவில் HIV தடுப்புப்பணிகள், அறிவுறுத்தல்கள் என்ற ரீதியிலேயே செயற்படுகின்றன. இயற்கையினால் வஞ்சிக்கப்பட்ட இம்மனிதர்கள் தம் வேதனைகளையும் போராட்டங்களையும் இப்போது சொல்லத் தொடங்கிவிட்டனர்.

தமிழில் 1994ல் சு.சமுத்திரம் அவர்களால் ‘வாடாமல்லி’ என்ற நாவல் எழுதப்பட்டது. அதன் பின் 2005ல் திருநங்கை ரேவதி என்பவரால் ‘உணர்வும் உருவமும்’ என்ற தலைப்பில் வாழ்க்கைக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முதலாக திருநங்கை ஒருவரால் தன் சமூகம் பற்றித் தொகுக்கப்பட்ட  நூலாகும். 2007ம் ஆண்டு ஒக்ரோபர் திருநங்கை பிரியாபாபுவால் ‘அரவானிகளின் சமூகவரைவியல்’ என்ற நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 2007 டிசம்பரில் ‘நான் வித்யா’ என்ற புத்தகம் வாழ்க்கை அனுபவங்களாக லிவிங்ஸ்மைல் வித்யா என்ற திருநங்கையால் எழுதப்பட்டது. 2008 யூலையில் ‘அவன் – அது = அவள்’ என்ற தலைப்பிடப்பட்டு யெஸ் பாலபாரதியால் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நெடுங்கதை வெளியிடப்பட்டது. இவை நான் படித்த தமிழில் வெளியாகிய திருநங்கைகள் பற்றிய நூல்கள் ஆகும்.

இப்போது நான் எழுதப் போவது ‘நான் வித்யா’ என்ற புத்தகம் பற்றியாகும். ஆணாகப் பிறந்து அது அவரைக் குழப்பத்துக்கு உள்ளாக்கி அதனினின்றும் விடுதலையடைந்த ஒருவரின் உண்மைக்கதை இது. அவரே தன் அனுபவங்களை சற்றும் சோர்வேற்படாதவாறு எழுதிச் செல்கிறார்.

முன் அட்டையில் கறுப்பு வெள்ளைப் படமாக அவரது முகமும் கண்களும் ஏதோ பேசுவதாகவே தோன்றுகிறது. மேலே ‘ஒரு திருநங்கையின் உலுக்கி எடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள்’ என எழுதப்பட்டுள்ளது. நான் சரவணன் என்பதில் சரவணன் மேலே சிவப்பு மையினால் வெட்டப்பட்டு வித்யா என்று எழுதப்பட்டிருக்கிறது. பின்னட்டையில் கீழுள்ளவாறு, ‘பெண்மைக்குரிய உணர்வுகள், பெண்மைக்குரிய நளினம், ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால் சுமந்து கொண்டிருப்பதோ ஒரு ஆணின் உடல்’ லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கையால் எழுதப்பட்ட புத்தகம் இதுவாகும்.

இந்தியாவின் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சரவணன் பெற்றோர் இட்ட பெயர். பிறந்தது 1982. எம். ஏ மொழியியல் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். நாடகங்களில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.

நான் இப்புத்தகத்தை மிகக் குறைந்த நேர இடைவெளிகளை விட்டு வாசித்து முடித்தேன். கையில் எடுத்துப் படித்தால் இடையில் நிறுத்துவது சிரமம். புதியதொரு அனுபவத்தை இந்நூல் கட்டாயம் கொடுக்கும். என் மூளையைப் பிராண்டியது அல்லது வழமை போல் சொல்வதென்றால் இதயத்தைப் பிசைந்தது எனலாம். வாசித்து முடித்த பின்னும் அந்த வசனங்கள் வீட்டினுள் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதை உணர முடிந்தது.

இப்புத்தகம் 15 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ளது. முதலாவது அத்தியாயத்தில் நிர்வாணம் எனத் தலைப்பிட்டு அதிர்ந்து போகும் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பத்திலேயே எழுதிவிடுகிறார். ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் தான் எதற்காக ஏன் பயணிக்கிறேன் என்பதைச் சொல்கிறார். “நிர்வாணத்துக்கு அனுப்பலாம்னு நானி சொன்ன மறுநாளே லோனாவாலா ஸ்ரேஷனில் ஏப்ரல் 25ம் தேதிக்கு புனே ரு கடப்பா டிக்கெட் புக் பண்ணியாச்சு. அன்று தந்தா (பிச்சை)வுக்குப் போகவில்லை.’’

‘’நிர்வாணம் இதற்காக எத்தனை நாள் காத்திருந்தேன். எத்தனை அவமானங்களைச் சுமந்திருந்தேன். என் கோபம், என் சுயம், என் தன்மானம் எல்லாவற்றையும் அடகு வைத்து வெறி கொண்டு பிச்சை எடுத்துச் சேர்த்தது எல்லாமே நிர்வாணத்துக்காகத்தானே’’ என்றவாறாக அவரது பயணத்தின் நோக்கம் எழுதப்பட்டுள்ளது. அவ்வெழுத்துக்களில் தன் உயிர் காக்கும் போராட்டம் போலவே தன் சுயத்திற்காகப் போராடும் ஒரு மனிதனின் வேட்கை தெரிகிறது.

உடையைப் பெண் போல் உடுத்துகிறார்கள். அலங்காரங்கள் செய்து தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களது ஆண்குறியை சங்கடப்படுத்தும் பொருளாகவே உணர்கின்றனர். அதனை அறுத்தெறிய ஆவேசத்துடன் காத்திருக்கின்றனர். ஆணுறுப்பை மருத்துவர் மூலம் சத்திரசிகிச்சை செய்து அகற்றுதல், அல்லது தாயம்மா முறையில் அகற்றப்படுகிறது. திருநங்கைகளின் சமூக உறுப்பினராகிய தாயம்மா மரபு முறையில் வீட்டில் வைத்து பல்வேறு சடங்குகளுடன் போத்திராஜ மாதாவை வழிபட்டு ஆணுறுப்பை அகற்றுவார். இப்படி இரு வழிகளில் இவ்வுறுப்பு அகற்றப்படும்.

திருநங்கைகளின் சமூகத்தில் இணைந்தவர்கள் அவர்களின் சட்டங்கள், கட்டுப்பாடுகள், வாழ்க்கை, வருமானம் ஈட்டும் முறைகள் என நன்கு கற்ற பின் நிர்வாணத்துக்கு ஆயத்தமாகின்றனர்.

மருத்துவமனையில் இடுப்புக்குக் கீழே மரத்துப் போக ஊசி போடப்பட்டு சத்திரசிகிச்சை நடைபெறும். ஆனால் மருத்துவமனைகளும் பணம் வசூலிப்பதை நோக்காகக் கொண்டுள்ளனவேயன்றி இம்மனிதர்களுக்கு சுகாதாரமற்ற அறைகளும் படுக்கை வசதியற்றும் சத்திரசிகிச்சைக்கு பின் புண் ஆறுவதற்கான மருந்துகள் இன்றியும் வெகு அலட்சியமாகவே செயற்படுகின்றன. காரணம் சட்டத்துக்குப் புறம்பான செயல் எனப் படுவதாகவே தோன்றும்.

வித்யாவுக்குப் போடப்பட்ட ஊசி சரியாக வேலை செய்யாத நிலையில் மிகவும் வேதனையும் வலிகளும் சூழ்ந்தவராக இவ்வாறு அந்நிலையைச் சொல்கிறார். ‘‘ஆம் அந்த நொடியில் நான் கண்டதன் பெயர் தான் மரணம். எது வேண்டாம், என்னுடையதில்லை என்று நினைவு தெரிந்த நாள் முதல் மனதுக்குள் அழுது புலம்பிக் கொண்டிருந்தேனோ அதனை நீக்கிவிட்டிருந்தார்கள். என் பிறப்புறுப்பு தனியே பிரித்தெடுக்கப்பட்டதை நான் உணர்ந்தேன். ஆ! நிர்வாணம் இதுவல்லவா நிம்மதியின் எல்லை’’

இரண்டாவது அத்தியாயத்திலிருந்து பிறந்த குடும்பத்துடனான தன் சம்பந்தத்தை எழுதுகிறார். ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றோருக்கு மூன்றாவது மகன். தாயும் சகோதரிகளும் ஒரே ஆண்பிள்ளை என அன்புடன் வளர்க்கின்றனர்.  அவரது தந்தை பாசத்தை கண்டிப்பாகவும் கட்டளையாகவும் காட்டத் தெரிந்த மனிதன். சரவணனின் படிப்பு அவரது கனவாகும். திறமையான மாணவன் சரவணன். ஆனாலும் திணிக்கப்படும் கல்வியால் அப்பாவின் மீது பயமும் கோபமும் ஏற்படுகின்றன. இரக்கமின்றி படிப்பு விடயத்தில் கண்டிப்பு காட்டப்படுகிறது.

ஆறேழு வயதிலேயே பெண்களைப் போல உடையணிந்து நடனமாடி சந்தோசப்படுகிறார். ‘’இதுல என்ன தப்பு இருக்கு? ஆம்பளைன்னா சட்டை டவுசரு தான் போடணுமா? எனக்கு பாவாடை சட்டை தான் புடிக்குது. போட்டா என்ன? எனக்குள் இயல்பான விசயமாகவே தோன்றியதை ஏன் மற்றவர்கள் வினோதமாக பார்க்கின்றனர்?’’ இப்படி எழுதப்பட்டிருக்கும் சரவணனின் வரிகளில் மெல்ல மெல்ல மாறிவரும் மனநிலையைக் காணமுடிகிறது. ஒரு சிறுவன் தன்னுணர்வுகளின் போராட்டத்துடன் தவிக்கிறான். அவனைச் சுற்றி கேலியும் கிண்டலும் தான். தன் பெண் உணர்வுகளைச் சிலராவது புரிந்து விட்டார்கள் எனக்கூட அவனை சந்தோசப்பட வைக்கின்றன அந்தக் கிண்டல்கள்.

அவனறியாமல் வெளிப்பட்டுவிடும் பெண்மையினால் ஊரிலும் பள்ளியிலும் கேலியுடன் பார்க்கப்பட தனிமையில் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறான். இளங்கோ ‘என்ற ஆண் மீது ஏற்பட்ட காதலினால் பெண்மையை உணர்ந்தேன்’ எனச் சொல்கிறார்.

மூன்றாம் பாலினராயுள்ளோரின் உளவியல் சிக்கல்கள் மற்றோரால் விளங்கிக்கொள்ள முடியாது. வித்யா அதை இப்படி விபரிக்கிறார். ‘’புதுமைப் பெண்ணாக இருக்க விரும்புவேன். இதைப் புரிந்து கொள்வது மிகவும் சிக்கலானது. ஆணாக இருக்கிறேன். உடலளவில் பெண்ணுமல்ல. ஆனால் எதிர்காலம், தொழில் குறித்துச் சிந்திக்கும் போது பெண்ணாக பெண் பார்வையிலேயே என் எண்ணவோட்டங்கள் இருந்தன.’’ இவ்வாறு நகரும் நாட்களில் தற்செயலாகச் சந்திக்கும் செந்திலும் தன்னைப் போல உணர்வுள்ளவர் என அறிந்து மகிழ்கிறார். வாடி, போடி என இருவரும் ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். இச்சந்திப்பு திருப்பத்தை அவரது வாழ்வில் ஏற்படுத்துகிறது. அவர் போன்ற உணர்வுள்ளவர்கள் சந்திக்கும் தொண்டு நிறுவனத்துக்குப் போய்வர ஆரம்பிக்கிறார்.

அவர்கள் எல்லாம் என்னைப் போலவே ஆண் உடையில் நடமாடுபவர்கள் இவர்களை ‘கோத்திகள்’ என்பார்கள். ஆண் உடையில் பெண் தன்மையோடு காணப்படுபவர்களைக் குறிக்கும் சொல் அது. அவர்களோடு வெளிப்படையாகவே பெண் உடையணிந்து பெண் போலவே தோற்றத்தில் காணப்படுபவர்களையும் ஆபரேஷன் செய்து கொண்டு பெண்ணாகவே மாறியவர்களையும் அங்கே காண முடிந்தது. ‘அவர்கள் தாம் திருநங்கைகள்’ என்று தன்னை ஒத்தோரைச் சந்தித்த மகிழ்ச்சியில் எழுதுகிறார்.

இதற்கிடையே கேலி, கிண்டல் இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்வு சுவாரசியம் ஆகிறது. நாடகம் அவரை ஈர்க்கிறது. நாடகத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மு ராமசாமி, முருகபூபதி, ஒத்திகை விஜி எனப் பலர் நட்புறவோடு காணப்பட்டனர். இவர்களது புரிந்துணர்வும் ஆதரவும் உறுதுணையாக இறுதிவரை இருக்கின்றது. ஆயினும் இயல்பாக வாழ முடியாத நிலை. இரட்டை வாழ்வு துன்பமாக அமைகிறது. முடிவில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சென்னையில் வேலைக்கு அலைகிறார். கோத்திகளுக்கான தொண்டு நிறுவனங்களில் உள்ளவர்களும் கூட ஆணாகவே உடையில் தோற்றமளிக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். வித்யாவால் அதை ஏற்க முடியவில்லை.

மேலோட்டமாக மூன்றாம் பாலினத்தின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளும் எம்மால் இவரது தவிப்பு புதிய விடயமாகத் தெரியும். அவரது வார்த்தைகளை வாசிக்கும் போது தான் ஆணுடலின் மீதான அவரது வெறுப்பும் பெண்மைக்கான ஏக்கமும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எதுவும் தவிர்க்க முடியாத வசனங்கள் போலவே தோன்றும்.

புடவை, பொட்டு, தோடு, மூக்குத்தி ஆகியவற்றை அணிந்து பிரீத்தி என்ற பெயருடன் ஒரு பெண் தோற்றத்தில் புனே புறப்பட்டு விட்டார். அங்கு வித்யா என்ற பெயர் இடப்படுகிறது.

தாய் என்ற நிலையில் இருந்து இச்சமூகத்துக்குள் இணைய விரும்புபவரை ஒருவர் தத்தெடுப்பார். அவரைக் குரு என அவர்களது சமூக உறவுமுறையில் அழைப்பர். அதே போல நானி-பாட்டி, சேலா-மகள், கோடி-பொலிஸ், பந்தி-ஆண், நாரன்-பெண், நிறை வேறு சொற்கள் சொல்லப்படுகிறது.

விரும்பியவர்கள் அம்மா, மகளாகலாம். இதை ரீத் போடல் என்பர். இவர்களிடையே பஞ்சாயத்து உண்டு. தண்டனைகள், விலக்கி வைத்தல் உண்டு. வடஇந்தியாவில் பெரும்பாலும் இஸ்லாமியக் கோட்பாடுகளையும், தென்னிந்தியாவில் இந்துமதக் கோட்பாடுகளையும் அதிகளவு கொண்டுள்ளதாகவும் பல பிரிவுகளாகவும் இருக்கின்றனர். ஏதாவது ஒரு பிரிவில் தத்துப் போய் திருநங்கைகளின் சமூகத்தில் ஒருவர் ஆகலாம். ஆனால் இதற்காக உறுதியுடன் இருக்கின்றாரா என அந்நபரின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படும். மூத்த உறுப்பினரை நாயக் என்பர். ஒரு பிரிவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் இவரது சொல்லே செல்லுபடியாகும். இங்கு பிறரின் சாதி, மதம், இனம் பற்றிக் கேலி செய்வதோ, அவை பற்றிக் கேள்வி கேட்பதோ கூடாது என்ற கடுமையான விதிமுறையைக் கடைப்பிடிப்பவர். இவர்களின் சமூகத்தில் பன்றி பற்றிக் கதைப்பதோ அல்லது உண்பதோ இல்லை. பன்றியை உண்பவர்களின் வீட்டிலிருந்து எதையும் குடிக்கவோ சாப்பிடவோ கூடாது போன்ற பல அவர்களுக்கேயுரிய பழக்கவழக்கங்கள் உண்டு.

இவ்வாறான சமூகம் ஒன்றில் அங்கத்தவர் ஆகிவிடுகிறார். அவரது குடும்பத்தவர்களால் அதை சீரணிக்க முடியவில்லை. அது பற்றி வித்யா ‘‘பல்லாயிரக்கணக்கான திருநங்கைகளால் எப்படித் தன் குடும்பத்தாரிடம் தம் நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரியவைத்து திருநங்கைகளாக அவரவர் வீடுகளில் வாழமுடியவில்லையோ அதே மாதிரி என்னாலும் அது முடியாமல் போனது’’, ‘’நான் சரவணன் தான் இல்லையே தவிர மனிதப்பிறவி தான். பூதமல்ல, பிசாசல்ல’’ என்கிறார். ‘’திருநங்கைகள் என்ன பாவம் செய்துவிட்டார்கள்? ஆணாகப் பிறந்து பெண்ணாக உணர்வது ஒரு பாவம் என்றால், அது இயற்கையின் ஏற்பாடு. நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ இவை தன் சமூகம் சார்பாக மற்றைய இருபாலினத்தவர்களிடமும் வித்யா கேட்கும் கேள்விகள்.

இந்தியாவின் வடமாநிலங்களில் கிருஸ்ணரின் அவதாரமாக இச்சமூகத்தைப் பக்தியுடனும் பயத்துடனும் பார்க்கின்றனர். இவர்களது சாபம் பலிக்குமென நம்புகின்றனர். அதனால் அங்கு வாழவே இவர்கள் விரும்புகின்றனர். சட்டரீரிதியான அங்கீகாரம் கிடைக்காததாலும் பொதுவெளிச் சமூகம் சகமனிதர்களில் ஒருவராக மரியாதையுடன் ஏற்காததாலும் நிரந்தரமற்ற வருமானங்களைத் தேடுகின்றனர். இவர்களது பிரதான தொழில்களாவன பாலியல் தொழில், பிச்சை கேட்டல். இதனை வசூல் என்றும் சொல்வர். (ரயில் கேட்டல், கடை கேட்டல், சிக்னலில் கேட்டல்) தற்போது சமையல், நடனம், கரகாட்டம், கும்மிப்பாடல் போன்றவையும் சிலரால் செய்யப்படுகின்றது.

வித்யா தயக்கத்துடன் கடை கேட்டலுக்குப் புறப்படுகிறார். பின் சாதாரணமான விடயம் அதைச் சுறுசுறுப்பாகச் செய்யத் தொடங்கிவிட்டார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம் தான் நிர்வாணத்தின் போது மருத்துவமனைக்கு கொடுக்க உபயோகிக்க வேண்டிய நிலை. அதன் பின்பு உடலின் ஓய்வு தேவைப்படும் போது இந்த வகையில் சேர்க்கப்படும் பணமே உபயோகிக்கப்படும்.

வித்யா தான் பிச்சை எடுத்தது பற்றி குறிப்பிடும் போது ‘’தொடக்கத்திலிருந்தே திருநங்கைகளின் இன்னொரு தொழிலான பாலியற் தொழிலில் எக்காரணம் கொண்டும் இறங்குவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்து வந்திருக்கிறேன். பெண்ணாவது என்பது தான் என் விருப்பமே தவிர, விதிக்கப்படும் அவலங்கள் அனைத்துக்கும் உடன்படுவதல்ல. என் பிச்சைக் காலங்களுக்கும் கூட ஒரு சரியான காரணம் என்னிடம் இருந்தது. என் நோக்கம் நிறைவேறியவுடன் திரும்பவும் வேலை தேடித்தான் நான் புனேயை விட்டுப் புறப்பட்டேன்’’ என்று மீண்டும் திருச்சி நோக்கிப் பயணித்ததற்கு காரணம் சொல்கிறார்.

மீண்டும் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் நண்பர்களைச் சந்திக்கும் ஒரு சம்பவம். அவரது பழைய வகுப்புத் தோழிகள் அவரை வாடி, போடி என்று உரையாடவும், சின்னதாக ஒரு பொட்டு வைத்துக் கொள் என்று சொல்லவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். தன்னையும் சினேகிதியாக ஏற்றுக் கொண்டதை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். வித்யாவின் பல வருடப் போராட்டத்தை அவரைச் சுற்றியிருந்த சிலராவது புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்கின்றனர். வாசிக்கும் எமக்கு அது பெரும் நிம்மதியைக் கொடுக்கும். மீண்டும் வீட்டில் சுமுகமற்ற நிலை ஏற்படுகிறது. நண்பர்களின் உதவியுடன் வேலை தேடப்படுகிறது. ஆனால் எத்தனை திருநங்கைகளுக்கு இவ்வாறான தோழர்களும் படிப்பும் வாய்க்கப் பெறும்?

அயராத முயற்சிகளால் மதுரையில் வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்கிறார். இந்நேரத்தில் வலைப்பக்கம் ஆரம்பித்து நடத்துகிறார். ஆயினும் தன் வாழ்வின் பிரச்சனைகள் முடிந்ததென்று நிம்மதியாக இருக்கவில்லை.

‘ ‘திருநங்கைகளுக்கான சமூக அங்கீகாரம் என்பது என் ஒருத்தியின் நல்வாழ்வுடன் முடிந்து விடுவதல்ல’’ என்று அடுத்த போராட்டத்தை ஆரம்பிக்கிறார். சரவணன் என்ற அவரது பெயரை சட்டபூர்வமாக லிவிங் ஸ்மைல் வித்யா என்பதாக மாற்ற விண்ணப்பித்து அதற்கான வேலைகளைச் செய்கிறார்.

2002ல் திருநங்கைகளுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டு சில திருநங்கைகளிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கக் காரணமானவர்களில் ஒருவரான வழக்கறிஞர் ரஜனியுடன் தொடர்பு கொள்கிறார். எண் சோதிடம், மதமாற்றம் எனப் பெயரை மாற்றக் கூடியதாக இருக்கும் நாட்டில் தன் சுய அடையாளத்துக்கான பெண்பால் பெயரை மாற்ற அரசு அலுவலகங்களால் அலைக்கழிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின் வெற்றியும் அடைகிறார்.

இறுதியாக இக்கேள்விகளையும் வேண்டுகோள்களையும் முன் வைக்கிறார்.
*இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
*பால்மாற்று அறுவைச்சிகிச்சையை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?
*பள்ளிப் பாடங்களில் திருநங்கைகள் பற்றிய அறிமுகம்.
*சினிமாவில் தணிக்கைக்குழு திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தடை செய்ய வேண்டும்.

‘ஒரு திருநங்கையின் உலுக்கி எடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள்’ என்று அட்டை முகப்பில் எழுதப்பட்ட இந்நூலைப்பற்றி விமர்சனம் என்ற பெயரில் எழுதுவது சிரமம். விமர்சனம் என்பது அதிலுள்ள குறைகளும் நிறைகளும் சீர் தூக்கிச் சொல்லப்படுவது ஆகும். நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இதை எழுதினேன். இவருடைய வாழ்வின் வலிகளில் நாம் எப்படி நிறை, குறை சொல்ல முடியும்? எதை எழுதுவது? எதை விடுவது? வித்யாவின் எழுத்துக்கள் நூலின் இறுதிவரை என்னைச் சலிப்படைய விடாமல் விரட்டிச் செல்கின்றன. அந்த வரிகளில் சிலவற்றை அப்படியே எழுதுவதன் மூலம் தான் சரவணனின் உணர்வுகள் வித்யாவானதை சிரமமின்றிச் சொல்லலாம்.

குறுக்கே புகுந்து குதர்க்கம் பேசுபவர்களிடம் சில கேள்விகள் இருக்கும். வீதிகளில் சத்தமாகவும் ஆபாசமாகவும் ஏன் பேச வேண்டும்? ஏன் பாலியல் தொழில் செய்ய வேண்டும்? இப்படியான கேள்விகளுக்கெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து விடை பெறுங்கள் என்பது தான் பதில்.

நாம் வாசிக்கும் கற்பனைக் கதைகளையும் விட உண்மைக்கதைகள் நம்ப முடியாதவையாக இருக்கும். கற்பனை செய்பவன் எதையும் சீர்தூக்கிப் பார்த்து எழுதுவான். ஆனால் உண்மையோ கற்பனைக்குக் கிட்டாதவையாகவே இருக்கும். சலிப்பூட்டுவதில்லை. சரளமாக எழுத முடியும். லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்வும் உள்ளதை உள்ளபடியே சொல்லும் எழுத்தும் இலகுவான எளிய நடையும் அவரை எமக்கு நெருக்கமாக்கிவிடுகிறது. அருகிலிருந்து உரையாடிய உணர்வை ஏற்படுத்துகின்றது.

இப்படி ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். சோகங்களும் புறக்கணிப்புகளும் அவர்கள் சந்திப்பவையாகும். ஆனாலும் தமது சுயத்தை நிறுவிய திருப்தியுடன் வாழ்கிறார்கள். இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களின் மனதில், எங்கோ ஒரு மூலையிலாவது மூன்றாம் பாலினம் பற்றிய சிறு ஏளனமோ தவறான அபிப்பிராயமோ இருப்பின் அது மறைந்துவிடும். இல்லையென்றால் அவர்கள் நல்ல வாசகியோ அல்லது வாசகனோ இல்லை என்பது நிரூபணமாகிவிடும்.

எனது நன்றிகள்:   அரவானிகள் சமூக வரைவியல் – பிரியாபாபு.

புதிய கோடாங்கி செப்ரம்பர் 2008

புத்தக விபரம்:
Naan Vidya ,’Living Smile’
First Edition:December 2007 216Pages
Price Rs.100
Printed in INdia ISBN 978 _81_8368_578_8
Kizhakku,An imprint of New Horizon MediaPvt.Ltd;
No.33/15,Eldams Road,
Alwarpet,Chennai-600 018.

நன்றி : www.thesamnet.co.uk

Advertisements