தர்மினி

                                                                

இறுதிக் கோப்பை மது பற்றி,
கடைசி மிடறைத் துளி சிந்தாமல்
சுவைத்து
அது தொண்டையிலிறங்கிக் கரைந்து போவதை
கவிஞர்களும் மதுவருந்தித் திளைப்போரும்
வருணனை செய்வர்.
அவர்கள்
மதுவின் முதல் மிடறை இரசித்தறியாத மடையர்கள்.

முதற் தூக்குதலில்
தோழமைக் கிண்ணங்களின் உரசலோடு
கோப்பையை முத்தமிடாதவர்கள்.
காதலைச் சொன்ன ஒரு நாள் போல்
அது வெப்பத்தை உணர்த்தும்.

புதியதொரு முத்தத்தையொத்த
முதற் கோப்பை மதுவிற் கிளர்ச்சியடையாதவர்கள்.
வெற்றுப் போத்தல்களை வீசும் வரை     
போதையைச் சுகிக்காதவர்களாய்
கடைசிக் கிண்ணத்திற் கரைந்திடுவர்.

பியர் நுரைகளில்
வைன் நனைந்த உதடுகளின் புளிப்பில்
கள் அருந்திய மிதப்பில்
ரக்கீலா,வோட்கா,விஸ்கி,பிராந்தி மற்றும் பலவும்
இதமான தீயாய் வருடிச் செல்லும் கிறக்கத்தில்
பாடல்களிசைத்துத் தாளங்கள் தட்டும் குழாமிலிருந்து
இசைகள் பொங்கும் கோப்பையின்
முதற் துளியை உதடுகளில் மீட்டாதவர்கள்.
அவர்கள்
கடைசிக் கோப்பை பற்றிக் கதைப்பர்.

 

Advertisements