தர்மினி

பாண்டிச்சேரிப் பொதுச்சனங்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதற்குத் துடிதுடிக்கின்றார் தமிழச்சி. ‘பாலியற் தொழிலாளிகள் பாவம்’ என்ற ஒரு வசனத்துடன் அவர்களது பிரச்சனைகளை ஓரங்கட்டித் தாண்டிச் சென்று விடுகின்றார்.

மற்றவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்தல், கண்காணித்தல், கதையைப் புரட்டிப் போட்டு தன் ஒழுக்கத்தை நிருபித்தல்,  பொலிஸ், நீதிமன்றம்,அரசாங்கம் ஆகிய அதிகார மையங்களைச் சொல்லி மிரட்டுதல் ஆகியவை தான் ஒடுக்கப்படுவோருக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களின் வழிமுறையாகவிருக்கிறது.  மக்களுக்காகப் புரட்சி செய்கின்றோம்,புரட்டிப் போடுகின்றோம்  என்று இவர்கள் சொல்வதையும் மீறிக் கொண்டெழும் தூய்மைப் பண்புகள்.
இதனைச் மிகவும் குதூகலத்துடன்  தனது இணையத்தளத்தில் கடந்த 30 டிசம்பரில் ‘பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்பில் விபச்சாரம்!  ‘ என்ற தலைப்பில் தோழர்கள் படையுடன் துப்பறியச் சென்று வெகு வீராப்பாக எழுதியுள்ளார். காவல் துறை என்ன செய்கிறது? ‘ஒழுக்கங் கெட்டுப் போகிறதே பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்’ என்று கவலைப்படுகின்றார். அங்கு பாலியற் தொழிலுக்கு வந்த பெண்களை அடையாளங் கண்டு அது, இது என அஃறிணையிற் குறிப்பட்டுப் பேசுகின்றார்கள்.       ஒரு பொலிஸ்காரியின் வேலையைப் பார்ப்பது தனக்கு கௌரவம் என்று காட்டிக் கொள்வது போல அலட்டிக் கொள்கின்றார்.
அந்தக் கிராமத்துப் பெண்கள் சித்தாள் வேலைக்குப் போவதைப் போலவோ ,வயல் வேலைக்குச் செல்வதைப் போலவோ ஒரே கிராமத்திலிருந்து குழுக்குழுவாகச் சேர்ந்து வருகின்றார்கள். காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறுவரை வேலை பார்க்கின்றோம் என்கிறார்கள்.பொதுவாகவே கிராமங்களில் இரகசியம் பேணப்படுவது கடினம்.கூட்டாக வந்து தொழில் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் காரணம், குடும்ப வறுமை.கொழுப்பெடுத்து குத்தாட்டம் போடவோ, ஊர் உலாத்தவோ கிராமத்திலிருந்து பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப் வரவில்லை. ‘அவர்களிடம் மேட்டர் எதுவும் கிடைக்கவில்லை காமெடியானது தான் மிச்சம்’ என்று கவலை வேறு.

தமிழச்சி, நளினி ஜமீலாவின் ஒரு பாலியற் தொழிலாளியின் சுயசரிதத்தைப் படித்திருந்தால் வயிற்றுப்பாட்டுக்கு தொழில் செய்யும் பெண்ணின் கையில் காசைத் திணித்து அவரது தோழர்களும் சனங்களும் சுற்றி நிற்கக் கையைப் பிடித்திழுத்து ‘வாரியா?” என்று கிண்டல் செய்திருக்க மாட்டார். மிராசுதார்ப் புத்தியும்  ,  எளிய விளிம்பு நிலை மக்களின் மீதான எள்ளலும்,பணத்தின் திமிர்த்தனமும்  தமிழச்சி நெஞ்சில் பொங்கி வழிகின்றது.
எவனாயிருந்தால் எனக்கென்ன என்று எழுந்த மானத்துக்கு செருப்பால் அடிப்பேன் என அறைகூவல் விடும் தமிழச்சி அந்தப் பெண்களைக் கூட்டிக் கொண்டு போன ஆண்களிடம் ஏன் பேட்டி எடுக்காமல் விட்டு விட்டார்? பணங் கொடுத்து ஒரு பெண்ணை லாட்ஜ்க்கு அழைத்துச் செல்வது அவர்களது குடும்பத்துக்குத் தெரியுமா? என்று ஆண்களிடம் கேட்காமல்,அப்பெண்களிடங் கேட்கின்றார். இந்தத் தொழில் செய்வது உங்கள் குடும்பத்துக்குத் தெரியுமா? என்று விடுப்பு விசாரிக்கின்றார்.  அங்கு பரபரப்பான இடமென்பதால் உடனே வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றார்களாம்.ஏன் வேலை மினக் கெட்டுப்போறாய் என அவன் ஒருத்தனிடமாவது கேட்டுக் கொள்வது தானே. அரசயந்திரம் பாண்டிச்சேரியில் அவலமாய் கிடக்குதென்று புலம்பி கண்காணிப்பாளராகவிருக்கின்றார். ஏன் பணங் கொடுத்துப் போகும் அந்த ஆண்களை நிறுத்தி காசு கொடுத்துக் காதலற்ற, காமத்தை வேண்டுவதன் உளவியலை ஆராய்ந்து எழுதியிருக்க வேண்டியது தானே.
நடுத்தர வயதான பெண்ணுடன் இருபத்தைந்து வயதுள்ள ஆண் சென்று வந்ததைக் குறிப்பிட்டு   ” நடுத்தர வயதான அந்த பெண்ணிடம் படுத்த பொடியனுக்கு 25-வயதிற்குள் தான் இருக்கக்கூடும். கொடுமை! ” கவலைப்படுகின்றார். கலாச்சாரக் காவலர்கள் நிறைந்த நாட்டில் பாலியல் வறுமை அந்த இளைஞனுக்கு இருக்கிறது.பொருளாதார வறுமை அந்தப் பெண்ணுக்கு இருக்கிறது.அதிலே தமிழச்சிக்கு என்ன கொடுமையை யார் செய்தார்?
அடுத்தவர்களது இரகசியங்களை ஆராய்ந்து ஒழுக்க மதிப்பீடுகளைக் கற்பித்துக் கொண்டு பொலிஸ்காரியாக பெருமிதமாய்ப் பேசுதல்,அதிகார மையங்களைத் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிமுறையிடல் போன்ற மேல் வர்க்க குணாம்சங்கள் பெரியாரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் காட்டிக் கொள்ளும் பிம்பத்திற்கு எதிரானவை. ‘ஆண் இரண்டு ஆசைநாயகிகளை வைத்திருந்தால்,பெண் நான்கு ஆசைநாயகர்களை வைத்திருக்க வேண்டும்’ எனப் புனிதங்களைக் கவிழ்த்த பெரியாருக்கு இழுக்கு.

Advertisements