ஆகாயத்தில் மினுமினுக்கும் சிலவற்றை(க்)
காகிதங்களிற் பரப்புதல்.

யாருமறியாக் குகையொன்றிலிருந்து
கண்டெடுத்த அபூர்வச் சொற்களாகக் காண்பித்தல்.

பெருங்கடலிற் சலித்துச் சிலவற்றைச் சிதறவிடுதல்.

ஒருவருமறியாச் சொல்லொன்றை
உருவாக்கலிற் துளிர்த்த வியர்வையுடன்
அதைத் தாளொன்றிற் கசியவைத்தல்.

அறியாதவொன்றை அலங்காரச் சொற்களால் ஆக்குதல்.

வசனங்களை வரம்பு கட்டி மறித்தல்.   

   பலவும்
கவிதையெனச் சொல்லிய பின்னர்,

‘ஒவ்வொரு பூவையும் நேசிக்கிறேன்
ஒவ்வொரு புல்லையும் நேசிக்கிறேன்’

கசங்கிக் கிடந்த துண்டொன்றில்
எழுதி விட்டுச் சென்றேன்.

தர்மினி

www.vallinam.com.my 

 

Advertisements