– மோனிகா

கதவுகள்

இரவைக் கிழித்து நான் உள் பெயர்ந்தபோது

அறிந்திருக்கவில்லை

இக்கோட்டைக்குள் இத்தனை கதவுகளென்று

தொடர்ந்து காற்றடிக்க ஒரு கதவு

படார் படாரென்று முகத்திலறைந்தது.

கர்ப்பக்கிரகத்துக் கதவுபோலொன்று

புனிதம் ஏந்திக் கனத்துப் போய்

மூடிக்கிடக்கிறது.

ரகசியங்கள் நிறைந்ததாய் மற்றொன்று

உள்ளே வண்ணத்துப் பூச்சியோ

ஒளிரும் விட்டில்களோ இருந்தும்

வெளியே ஒட்டடை நூற்று

ஒரு துளி சூரியன் தெளித்ததாய்.

ஒன்றேயொன்று நடைகழி, பால்கனி என

பாதை முழுதும் பகிரங்கப்படுத்திக் கொண்டு.

கண்ணயர்ந்தேன்.

விடியலில் பார்க்கலாம்.

காதல் கோட்டை மோகினி முகத்தை.

காணா மரம்

மணி பிளான்டை திருடிக் கொணர்ந்து

வீட்டில் வைத்தால் பணம் கொழிக்கும்

ஆலமரம் அருகே இருந்தால் ஆடிக்களிக்கலாம்

வேம்பின் காற்று உடலுக்கு மருந்தைப்போன்று

வாழை, வாழையடி வாழையாய் விருந்துக்கு உதவும்

அரச மரத்தைச் சுற்ற ஆண்குழந்தை பிறக்கும்

பனமரக் கள் உடலுக்கு நன்று

தென்னங்கீற்றின் ஊஞ்சலில் பறவைகள் ஆடலாம்,

பாடல்களும்.

மணற்தக்காளி வாய்ப்புண் ஆற்றும்

இன்னும் எவ்வளவோ…

இந்தமரம் இரவில் அழகாய்

படுக்க பாய் விரிப்பதாய்

தலை நோகத் தைல விரல் பதிப்பதாய்

வெள்ளத்தில் ஓடி வரும் சருகிற்கெல்லாம்

வீடு பூட்டித் தருவதாய்.

வேரூன்றி பரவும் பெண்மரம்

விதை பரப்ப, உலகே சுபிட்சமாய்

யார் கண்களுக்கும் அறியாமல்.

நிலவின் கிழவி

சுவர்களுக்குள் நகரம் புழுங்கிற்று.

காற்றாட நடக்கையில்

என் எதிரே ஒரு கிழவி

வானத்து நட்சத்திரங்களை வாரி

கூடையில் அடைத்த வண்ணம் நின்றிருந்தாள்.

இவள் அந்த நிலவின் கிழவிதானோவென

ஒரு கணம் அஞ்சினேன்.

ஆனால், கிழவியோ நிலத்தின் கிழவி.

உன்னால் எப்படி இப்படி முடிகிறதென்றேன்.

“நான் அந்தக் காலத்தவள்”, என்று

அலற்றிக் கொள்ளாமல் கூறிச் சென்றுவிட்டாள்.

தலை உயர்த்திப் பார்த்தேன்.

நகரம் முழுவதும் நியான் விளக்குகள்.

Advertisements