மோனிகா

மைதிலி அக்கா

மைதிலி அக்கா மிகவும் அழகி.

பத்தாம் வகுப்பு போனபோது என் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.

வரலாற்றுப் பாடம் நடக்கையில் வாயில் சீட்டியிட்டு

சினிமா பாடல் செவிக்குக் கொடுப்பாள்.

நடனப் போட்டியில் சலங்கைகளோடு

‘வைதேகி காத்திருந்தாள்’ பாடலுக்கு

வெறி கொண்டு ஆடுவாள்.

தெருவில் நடக்க

முலைகள் குலுங்கச் சிரித்தபடி

கெண்டை விழிகளை பக்கம் நான்கும் சுண்டிவிடுவாள்.

பரீட்சைக்கு வரவில்லை பாவாடைக்காரி.

சிங்காரித்துச் சினிமா படத்திற்கு ஆடப்போனாள்.

இருபது வருடமாய் எத்தனை சினிமா.பார்த்தேன்..!

இதுவரை காணோம் என் பள்ளிக் காதலி.

வயலின்

உத்திரப் பரணில் உறங்கிக் கிடந்த வயலின்.

தூசி தட்டி தங்கை எடுத்துக் கொடுத்தாள்.

நினைவுப் பேழையை திறப்பது போல்

அது தனது நரம்பில் இசையை எழுப்பிற்று.

குட்டைப்பாவாடை நாட்கள்,

தோள்பட்டையிட்ட சட்டை,

நதியா கம்மல்,

கண்ணாடி பதித்த சிவப்புப் பாவாடை,

கண் முன்னே தட்டிய காலம் பல

கானம் தந்த காற்றினூடே.

நாலிரண்டு வருடத்தின் பின்

நண்பன் அழைத்தான்.

அவன் குரலும் அப்படியே,

நாட்கள் உறைய நனவிலி மனதினுள்.

Advertisements