அவள். அவன். அது கடல்.

– மோனிகா

1. அவள். அவன்.  அது கடல்.

அவள். அவன். அங்கொரு கடல்.

அவளைக் கடந்த அவன்
அலைகளின் உச்சம் கண்ணிற்பகர்ந்தான்.

அவளோ அவனை வரித்த வண்ண மரங்களை
கடற்கரையெங்கும் பொறுக்கிச் சேர்த்தாள்.

உப்புக் காற்றைப் பெயர்ந்தவனாய்
அவளது சிறுமரங்கள் நோக்கி கரை தழுவினான் அவன்.

அவனிடமிருந்து சிறுமரம் ஒன்றின் நுனியிற் தீண்ட

அவளது சிறுவிரல் தோரும் வண்ணப் பரவல்.

விடியலைப் பிரிந்து வீடு திரும்பினர்.
சுவர்கள் தோறும் மரங்களைப் பரப்பி
வீட்டினுள் கடலினை கொணர்ந்தாள் அவள்.

மனமெல்லாம் அலை விசும்ப
அகத்தினுள் மரம் வளர்த்தான் அவன்.
மறுபடி மறுபடி.

2. பட்டாம்பூச்சி மரம்
ஆயுளெல்லாம் ஆகாயம் நோக்கித் தொழுதழுத
கற்பாறைக்கூட்டம்.
இயற்கையின் ரகசியங்களை
கிசுகிசுவாய் முணுமுணுத்தலையும் நீரலை
(அது அப்படிப் பிறந்தது போலும்!).
பழுப்பும் மக்கலுமாய் மழைக்குப்பின்
மணமெழுப்பும் சோலை.
எகிறிக் குதித்து இரைந்தோடி மண்ணில் இஞ்சி
பின்னர் இல்லாமலேயே போகும் காட்டாற்று அருவி.
ஒளித்துகள் சிதற நுனியிற் பொறுக்கும்
காட்டுப் புல்தரை.
இவற்றின் நடுவே…
ஓரிடமாய் ஓங்கிவளர்ந்ததொரு
பட்டாம்பூச்சிகளின் மரம் அவள்.

3. பறத்தலைப் பழகுதல்

எழில் விளங்கு சாளரம்.
நிழல் பரவப் புகுந்தது
சாம்பல் புறாக்கூட்டம்.
அலகுகள் பருக, பறந்து துரத்தி பாசம் பழகிட
பளபள முட்டைகள், குஞ்சென்று ஆங்கே
காலம் போனது
களிப்பின் விளிம்பில்.

இன்று காலை ஏதோ சலனம்.
எல்லாப் பறவையும் ஒன்றாய் கூடி
கொத்தித் தீர்த்தன பறவையின் முதுகை.
“விரட்டிவிடலாம் அவற்றை” என்றார் வீட்டிலொருவர்.
“கொன்று கொன்றே குஞ்சுகள் காணோம்..
தின்றதோ இவை?” என்றார் இன்னமொருவர்.
“எத்தனை காலம் கூட்டிலமர்ந்து இலையும் புழுவும்
கொண்டே தருவது?
இறக்கை உந்திப் பறத்தல் வேண்டும்.
இதற்காகத்தான் பறவைத் தீண்டல்..”
என்றே கூறி முடித்தார் ஒருவர்.

மதியப் பொழுதில் கதவைத் திறந்தேன்.
கூட்டைக் காணோம். குஞ்சையும் கூட.
சற்றே தொலைவில் சுற்றித் திரிந்தது புறாக்குஞ்சு.
கண்டேன் அங்கே கடந்த காலத்து தந்தை முகத்தை.

4. பூனை
தேகம் மதர்த்து அலைந்ததொரு திருட்டுப்பூனை.
தனிமையின் இருளை மனதில் கரைத்தது.
கரைந்த இருளோ காகிதமெல்லாம்
கவிதை வரியாய் கசிந்துருகிற்று.
காமம் ஒளித்துக் கத்தும் பூனை.
வெள்ளைப்பாலுண்ணும்
ஒரு பிள்ளைப்பிராயத்ததுபோல்.
முதுகிற் சிலிர்த்து மோகம் விரட்டும்.
இருக்கைகள் முழுதும் இச்சையின் ரோமம்.
அடுப்பின் சூட்டினை அண்டத்துடிக்கும்.
திருட்டுப் பூனை.
தெரிந்தும்கூட
எதுவோ சொல்லி ஏற்றுவார் மடியில்.

photo courtesy: Thanks to:  Matic Verbančič

5 thoughts on “அவள். அவன். அது கடல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s