நான் சந்தித்த மரணங்கள்-புத்தகம்


தர்மினி

‘எழுத்ததிகாரத்திற்குள் சிக்கிக் கொள்ளாத,புனைவுகளற்ற வாய்மொழி வரலாற்றின் அச்சு அசலான கச்சாப்பிரதி இது என்றால் மிகையாகாது’-கருப்புப்பிரதிகள்

சாதனை செய்தவர்கள்,சாகசங்கள் புரிந்தவர்கள் சமூகத்துக்காகப் போராடியவர்கள் தங்களின் வெற்றிக்கதைகளை வீரக்கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது இச்சமூகத்தின் கசடுகளிலிருந்தும் புறக்கணிப்புகளிலிருந்தும் விளிம்பு மனிதர்கள் தம் கதைகளைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.இவர்களது எழுத்துகளை, உணர்வுகளை, கதையாடல்களை விலக்கிவிட்டு கலாச்சாரமும் இலக்கியமும் பன்முனைப்புடன் நகர முடியாது. வாழ்வில் வேதனைகளையும் அவமானங்களையுமே கொண்டவர்களாக நம்மிடையில் மக்கள் வாழ்வது பற்றிய சலனஞ் சிறிதுமின்றி பண்பாடு, விழுமியங்கள் என்று கதையளந்து கொண்டிருப்பதையும் சமூகப் பாசாங்குகளையும் அக்கதைகள் சற்றும் ஈவிரக்கமின்றி கேள்விகளைக் கேட்கின்றன. அதையெல்லாம் தாண்டிய வாழ்வொன்றுக்குள் தள்ளிவிட்ட சமுதாயம் மறுபுறம் இவை பற்றி எதுவும் அறியாத மக்கள் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மரண கானா விஜி தன் கதைகளைச் சொல்லச் சொல்லக் கேட்டு கார்க்கோ அவற்றைத் தொகுத்திருக்கிறார். அவரது கதைகளில் மரணங்கள் ஊடுபாவிச் செல்கின்றன. விஜியின் வாழ்க்கையும் மரண கானா என்ற அடைமொழியுடன் பிணைந்து விட்டது அவரது இசைத் தொழிலின் நிமித்தமாகத் தான். ஆனால் தொழிலுக்காகச் சந்தித்த மரணங்களை விட கோரமான சிறுபிராயத்திலிருந்தே அது தொடர்கின்றது என்பதை இப்புத்தகத்தைப் படிக்கும் போது அறிய முடிகின்றது.

நீளமான கடற்கரைகளில் ஒன்றெனவும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும் சொல்லப்படும் மெரீனா கடற்கரையில் மிகச் சிறுவயதிலேயே பெற்றவர்களால் புறக்கணிக்கப் பட்டுக் கைவிடப்பட்ட, கால்கள் ஊனமுற்ற குழந்தையின் வாழ்வு அக்கடற்கரையின் குற்றங்களிடையில் பசியும் தனிமையுமாகத் தொடங்குகின்றது. ” உடை கிடையாது ஒரேயொரு பச்சைத் துணி மட்டும் தான் எங்கிட்ட இருந்துச்சு” என்கின்றார்.பெயரென்ற ஒன்று இடப்படாத நிலையில் அங்கு நடைபெறும் இருட் குற்றங்களைப் பார்த்தே வளருகின்ற போது துணையாகவும் உணவு வழங்கியும் கரிசனை காட்டும் பாலியற் தொழிலாளியாக விஜி என்ற பெண். “அந்த விபச்சாரி மட்டும் தான் என்னை உறவாய்ப் பார்த்தா,அவள்  தான் நான் பார்த்த முதல் பார்த்த இரக்கமுள்ள பெண்ணாயிருந்தா”என்று சொல்லும் இவருக்கு விஜி என்ற பெயருக்குக் காரணமாகவும் அப்பெண்ணிருக்கிறாள்.

உணவும் உடையும் ஒண்டுவதற்குச் சுவருமில்லாத அனாதைகள் கடற்கரையிலும் சுடுகாட்டிலும் வாழும் நாட்டில் எத்தனை ஏவுகணைகளை விண்ணுக்கு ஏவி என்ன கிழிக்க வேண்டியிருக்கிறது? வல்லரசாகி என்ன சாதிக்கப் போகின்றது? தமிழராய்ச்சி மாநாடுகளை நடாத்தித் தமிழை வளர்த்தென்ன? தின்று கொழுத்த பணக்காரர்கள் உடற்பயிற்சி நடைக்கு மெரீனாவைச் சீரமைத்துக் காட்டும் கரிசனத்தை இம்மாதிரி அனாதைகளின் நடைபாதைவாசிகளின் நலன்களில் காட்டினாலென்ன?
எழுந்து நடக்கக் கூட முடியாத குழந்தையைக் கடற்கரையில் விட்டுவிட்டுப் போகுமளவு மனம் மரத்தப் போகும் வறுமையும் கொடூரங்களும் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டுள்ள நிலையில் ,தாம் எதிர் கொள்ள முடியாத வாழ்வின் அவலத்தை, ஊனமற்ற அக்குழந்தை மட்டும் எப்படி எதிர் கொண்டு உயிர் வாழுமென சிந்திக்க முடியாத மனிதர்களாகப் பெற்வர்கள் இருக்கின்றார்கள்.

எவ்விதமான ஒழிவுமறைவோ நாகரிகத்துக்குட்பட்டோ கதை சொல்லாமல்,குற்றங்களிலிருந்தும் பசியிலிருந்தும் உயிரைக் காப்பாற்றியபடி வாழ்தலின் வலி கூடிய தன் கதையையும் தன் போன்றோரின் கதைகளையும் சொல்லும் விஜி,அதிலிருந்து மீண்டு இன்றொரு கலைஞனாக வாழ்வதை ஒரு சினேகிதனாகச் சொல்லிக் கொண்டு போகிறார்.
எப்போதும் உண்மைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை தான் போலிருக்கிறது. எழுத்தாளன் கற்பனை செய்யும் போது இதுவெல்லாம் கதைக்குப் பொருந்துமா?படிப்பவர்கள் நம்புவார்களா? சாத்தியமா? எனச் சீர்தூக்கிப் பார்த்து வரையறைகளையும் வடிவங்களையும் எழுத்துப் போக்குகளையும் தாண்டுதல் – தாண்டாமை பற்றிச் சிந்தித்துக் கவனமாக ஒரு கதையை ஓர் கதாபாத்திரத்தைப் படைக்க முயலுவார்கள்.ஆனால் உண்மைகள் எதற்கும் கட்டுப்படாத கதைகளைத் தான் படைக்கின்றன.
மரணகானா விஜியின் வாழ்க்கைக் கதை, கற்பனை செய்யும் ஒருவரால் இட்டுக்கட்டி நிரப்ப முடியாத சம்பவங்களால் கொண்டலைக்கப் பட்டதை முன்வைக்கின்றது. விஜிக்கு இச்சமூகம் கொடுத்த வாழ்வு தானது. இன்றளவும் மெரீனாக் கடற்கரையும் அது போன்ற இடங்களும் இம்மனிதர்களை உருவாக்கியவாறும் புறக்கணித்தவாறும் தம் களியாட்டங்களை நடாத்திய படியேயிருக்கின்றன. பசியெழுந்து அவ்வலி தாங்க முடியாத போது அதைத் தீர்க்க வேண்டி, நாய் சிறுநீர் கழித்ததைக் கண்ணால் கண்ட பின்னும் அதையெடுத்துச் சாப்பிடுவதைத் தவிர வேறெதுவுமே அச்சிறுவன் முன்னால் இருக்கவில்லை.
அவ்வப்போது விஜியைப் போல வந்து சேரும் அனாதைச் சிறுவர்கள்,கைவிடப்பட்ட பெண்கள் என விளிம்பு நிலையிலிருக்கும் இவர்களிடையில் பாசமும் கருணையும் ஊடாடுதல் தான் வாழ்வை நகர்த்துகின்றது.விஜி என்ற பெண் இறந்த பின் உணவுக்கு வழியற்றிருக்கும் சிறுவனுக்கு அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் பாபுவின் நட்பு துணையாகின்றது. அதிலே ஒரு சம்பவத்தைச் படிக்கும் போது அவலம் நிறைந்த சம்பவமொன்று பசியினை வென்றுவிடுவதைப் பாருங்கள்.
கடற்கரையில் கட்டுமரத்தின்  கீழ் உறங்கிக் கொண்டிருந்த பாபுவின் தாயார் செத்துப் போய்க் கிடக்கிறார். கடற்கரையில் கூட்டம் சேர்ந்து பிண அடக்கத்துக்கு பணம் சேகரித்துக் கொடுக்கின்ற போது, இறந்து விட்டால் என்ன செய்வது என அறியாதவர்களயிருக்கிறார்கள் இச்சிறுவர்கள். அவர்களின் பிரச்சனையாகவிருக்கும் பசி ஒன்று தான் நினைவுக்கு வர காசை எடுத்துக் கொண்டு போய் வீதியில் வண்டிக்கடையொன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,கடற்கரையில் அனாதையாகக் கிடந்த பாபுவின் தாயாரைக் குப்பை லாரி தூக்கிப் போவதை சாதாரணமாகப் பார்த்த படியே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இச்சிறுவர்களைக் கடற்கரையிலும் வாழ விடாமல் நித்திரையில் ஆண்கள் தொல்லைப்படுத்த, நான்கு அனாதைச் சிறுவர்களுமாக இராயபுரம் சுடுகாட்டுக்குள் வாழத்தொடங்குவது , ஊனமுற்ற பிணமொன்று கட்டையோட புதைக்கப்படுவதைப் பார்க்குமிவர்கள் பின்னர் சவக்குழியைத் தோண்டி அக்கட்டையை விஜிக்கு ஊன்று கோலாகக் கொடுப்பதெனத் துயரங்களை வாழ்தலுக்கு ஏற்றவாறு கடந்து ஏறி மிதித்துக் கொண்டு ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து தீர்த்தனர்.
மெரீனா கடற்கரையில் அனைத்துக் குற்றங்களையும் செய்தேன். குற்றவுணர்வினால் எனக்குள் கத்தல் பிறந்தது. கத்தல் மேல் சித்தாந்த வார்த்தைகளைப் போட்டுப் பாடினேன் கானாவாக உருமாறியதென தான் கானா பாடத் தொடங்கியதைச் சொல்கின்றார் விஜி.
வாழ்வின் வேதனைகள் அனைத்தும் கடந்த வெறுமை நிலையிலும் அவனுள்ளிருந்து அது உருவாகின்றது.  விஜி சந்தித்த தோழர்களின் மரணங்களும் அதன் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாழ்வுமாக மரணங்கள் ஊடுபாவும் சம்பவங்களோடு மரணகானா கலைஞனாக நம்பிக்கையுடன் இன்று வாழ்ந்து கொண்டிருப்பதை அறுபத்திரெண்டு பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் மூலமாக எங்களுக்குச் சொல்லிச் செல்கின்றார்.
இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு அவலத்தையும் எழுதுவதென்றால் அது அச்சம்பவங்களின் தொகுப்பாகிவிடும்.நான் இங்கு குறிப்பிடாத விடயங்களும் அதை எம்முடன் உரையாடும் தொனியில் எழுதப்பட்டிருப்பதையும், அவற்றை அவரது வார்த்தைகளாய் உணரும் போது தான் அது நிறைவான பகிர்தலாயிருக்கும்.  இப்புத்தகத்தைப் படித்து மரணகானா விஜியோடு  நீங்களும் கதைத்துப்பாருங்கள்.
‘ நான்  சந்தித்த மரணங்கள்’       

 மரண கானா விஜி

டிசம்பர் 2009
வெளியீடு-கருப்புப் பிரதிகள்
பி.55.பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை
சென்னை 600 005

விலை:40 ரூபாய்

4 thoughts on “நான் சந்தித்த மரணங்கள்-புத்தகம்

  1. //கடற்கரையில் கட்டுமரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த பாபுவின் தாயார் செத்துப் போய்க் கிடக்கிறார்.கடற்கரையில் கூட்டம் சேர்ந்து பிண அடக்கத்துக்கு பணம் சேகரித்துக் கொடுக்கின்ற போது, இறந்து விட்டால் என்ன செய்வது என அறியாதவர்களயிருக்கிறார்கள் இச்சிறுவர்கள். அவர்களின் பிரச்சனையாகவிருக்கும் பசி ஒன்று தான் நினைவுக்கு வர காசை எடுத்துக் கொண்டு போய் வீதியில் வண்டிக்கடையொன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,கடற்கரையில் அனாதையாகக் கிடந்த பாபுவின் தாயாரைக் குப்பை லாரி தூக்கிப் போவதை சாதாரணமாகப் பார்த்த படியே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.//

    என்ன கொடுமை இது ………….

  2. ப்ரியன் ,இதை விடப் பல கொடுமையான சம்பவங்கள் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டுள்ளது.மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு வாழ்வின் கடைசி எல்லைவரை போராட வேண்டிய உலகமிது.
    தர்மினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s