தென்றல்

செந்நிற நாக்குகளைக் கொழுந்து விட்டெரித்தபடி
இரத்தமும் சதையும் கொண்ட
மனித மாமிசத்தாலாகிய மிருகங்களிடையே
சிக்கிய ஒருத்தியின் கதை.

பாசப் பிறப்புகளுக்கும்
வேசம் போட்டு உறவு சேர்ந்தவர்களுக்கும்
இவளொரு முட்டாள்.

தம்முள் பசியோடு உறுமும் கொடும் பேய்களுக்கு
உணவாக்க முயன்று
நிமிடங்களில் பசியாறுவார்கள்.

உண்மைகளறிந்தும்
முகப்பூச்சொன்றைத் தடவி
தினந்தினம் பொய்யாய் நடித்து
அவர்கள் வாயிலிருந்து சப்பித் துப்பத் துப்ப
உயிர்த்தெழும் பெரும் நடிகை.

அத்தனை கெட்டித்தனத்தையும்
எண்ணெய் ஊற்றி எரித்தெடுக்கும்
கூரான பற்களை வளர்த்த
கோரமான வேடதாரிகள் தான் அவர்களும்.

பாவம் ……
ஏப்பம் விடும் பிசாசுகள்
தன் குட்டிகளையும் தின்னக் காத்திருக்கும் கபடமறியாமல்
சாயத் துணிகளையும்
சரிகைச் சால்வைகளையும்
உடுத்தி
மீண்டும்
பூச்சொன்றைப் பூசத் தயாராகுவாள்.

Advertisements