கொப்புகளிற் பனி படர்த்தி
வெறுங்குச்சிகளை மரங்கள்
கிளை விரித்து நிற்க,
மூடிய சன்னல்கள்,கதவுகள்
உறைந்த பனித்துகள்களாகிக் கூரைகள்.
விறைத்து
இறுகி
நிலமெல்லாம் வெறுமை.

கண்கள் உயர்த்த
மாவு பூசிய வானம்
நிறங்களை விழுங்கித் தொங்கியது.
 
ஒற்றைப் பறவையில்லை
காற்றிற் கிளம்பியலையும்
கடதாசி,சருகில்லை
வீதி ஒன்றைக் கீறிச் செல்லும்
விமானங் கூட வானிலில்லை.
 
பாதி திறந்த
ஒற்றைச் சன்னலினூடே
விரக்தியில் வரைந்த ஓவியனின் காட்சியொன்றாய்
அப்பனியுறைவு கொழுவப்பட்டிருந்தது.
 
வெறுமை படர்ந்து வந்து
என் தோள் போர்த்தி(த்)
தனித்திருக்கும் குளிர் பொழுதை
பாலைவனமொன்றில் பயணிப்பதாய்ச் சொல்லி
என் சன்னலின் ஓவியத்தை
மறுவளமாய்த் திருப்பியது.
 
நானொரு நாள்
உப்பளத்தில் நின்றதையது
நினைவுறுத்துவதையும் சொல்லி(ச்)
சன்னலை மூடினேன்.

 தர்மினி

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
Advertisements