சாரல்களாக மழையிறங்குதல்
மெதுமெதுவாகக் கடலினுள்
கால்கள் உள்ளிழுத்தல்
எதுவென்றறிய முடியாத ஒன்றாயிருந்தது.
 
உன்னைத் தேடுதலில்
நானொரு ஆழத்தில் அமிழ்தலும்
புத்துயிர்ப்பாய் விரிதலும்
எவ்வகையடங்கும்?
 
காதுகளில் மிதக்கும் வார்த்தைகள்
உட்பரவி சிறகுகள் வளர்க்கும்
சில போது
கூராய் ஊடுருவிச் சிறுநெருப்பொன்றைக் கொழுத்திவிடும்.
 
கடத்திக் கலைபட்ட நாயாகப் பூனையாக
மீளப் படலையோரம் பதுங்கிக் கிடக்கும்
கொடுமை செய்யன்பு.
 
 ஆயினும்,
 மோதும் முகில்கள்
மெதுவாகக் கலைந்து செல்லுமொரு காட்சியாக
அது,
எங்ஙனம் சிதறிப் போகின்றது?

மெல்லென வீசிய காற்றொன்றில்
மிதந்ததொரு இறகாக
நம் கைகளினின்று
அது,
விலகிப் பறக்கின்றது.

ஒரு குறைக் கனவின் காட்சிகள்
புகார் பரவி
நினைவிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது.
 
மிக இயல்பாக
வழி நடந்து போகின்றது
நமக்கிடையிலான நேசம்.

சுற்றி நிறைந்திருக்கும் காற்றாக
சூழ்ந்திருக்கிறது.
பெருங் கொடுமை செய்யுந் தனிமையது.

தர்மினி

Advertisements