தர்மினி


நறுமணம் வீசும் பூக்களென்றும்
மீனென்றும் மானென்றும் சொல்வர்.
நிலவென்றும்
கனிகளைக் காய்களை உவமித்தும் பாடுவர்.

பொய்கள் வாய்களில் வழிய வழிய
அவளுடலைப் புகழ்வார்கள்.

கசந்து போன வார்த்தைகளைக் குப்பையிற் தள்ளி,
உயிரினங்களில்
நானொரு மனிசியென்றாள்.

தனதுடலைத் தழுவிக் கொண்டு
பெயர் சொல்லிப் பாடினாள்.

பொய்யை விடப் புளுகை விட
அவ்வாறே அவையென்றாள்.
பெயர் சொல்லிப் பாடினாள்.

வருணனைகள்
மறுதலிக்கப்பட்ட சினத்தில்
தங்கள் பேனா முனைகளைக் கூர் செய்து
உதடுகளைத் தைத்திடவும்
தங்கள் எழுதுகோல்களினால்
விரல்களை உடைத்திடவும் சபதஞ் செய்து
பவித்திரமும் பண்பாடும் பறப்பதாகப் பரிதவிப்பார்கள்.

http://www.vallinam.com.my (april 2010)

Advertisements