-மோனிகா

பெண் மொழி என்றொன்றிருக்கிறதா? அப்படி இருப்பின் அதற்கான வார்த்தைகள் “இவ்விவைகள்”தான் என்றிருக்கின்றனவா? பெண்ணிற்கென்று தனி மனம் ஒன்று உண்டா? அது தீண்டல்களையும் ஏளனத்தையும் கண்டு ஒதுங்கிக்கொள்ளும் மனமா இல்லை துடித்து எழுந்து நம் வார்த்தைகளால் அனலிற்கரைக்கும் மனமா? பாலினம் என்பதே ஒரு கற்பிதம் என்கிறார்களே. அப்படிப் பார்க்கையில் பாலியல் நிகழ்வுகளில் தன்னை ஒரு குறிப்பிட்ட பாலினம் சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்வது சரியானதுதானா?

வோல்கா என்ற தெலுங்கு எழுத்தாளர் தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் பெயரில் கொண்ட கதைகளால் வெளியிடுகிறார். சமூகத்தால் உச்சரிப்பதற்கும் தாழ்வானதாக கருதப்படுகின்றன பெண்களின் வாழ்வாதாரமாக உள்ள அவர்களின் அந்தரங்க உறுப்புக்களின் பெயர்கள். ஒரு பாலியல் தொழிலாளியின் யோனி அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதுடன் எத்தகைய வன்முறைக்கும் வலிக்கும் உள்ளாகிறது என்பதை மையமாகக் கொண்டது யோனி என்ற ஒரு கதை.

மகாஸ்வேதா தேவியின் “மார்பு கொடுப்பவள்” (Breast giver) என்ற பெயரில் காயத்திரி சக்ரவர்த்தி ஸ்பிவாக்கினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட ஒரு கதை சமூகத்தால் தாழ்த்தப்பட்ட கீழ்சாதித் தாதிப் பெண்களின் மார்பகங்கள் எதிர்கொள்ளும் பாலியல் வக்கிரங்களையும் வேதனைகளை சொல்லிச் செல்கின்றன.

ஒரு புறம் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தலையும் உடல்கள் குறித்த படைப்புகள் எழுகையில் மறுபுறம் தனது பாலியல் உபரிகளைக் கொண்டு பெருமிதப்படும் பாலியலைக் கொண்டாடக் கூடிய எழுத்துக்களும் நீண்ட காலமாகவே எழுதப்பட்டு வருகின்றன. இங்கு லிண்டா நோக்ளினின் கூற்றைப்போல பெண்ணியம் என்பதை “ஒரே” கருத்தாக்கம் உடையதாய் சாராம்சப்படுத்துவதில் பிரச்சினை எழுந்து போகிறது.

ஒரு ஒன்றாம் வகுப்பு புத்தகம் சொல்கிறது.”காலையில் அம்மா சமைக்கிறாள். அப்பா செய்தித்தாள் வாசிக்கிறார். தங்கை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்” என்று. ஒரு பொருளாதாரக் கடைநிலையிலிருந்து வரும் சிறுவனுக்கு அம்மா காலை விடியலுக்கு முன்னே வேலைக்குப்போவதையும் இரவு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அப்பா பத்துமணிவரை குடித்துவிட்டுக் கிடப்பதையும் பார்த்துப் பழகிவிட்டபோது இத்தகைய குடும்பச் சூழலுடன் எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

“அங்காடித் தெரு” திரைப்படத்தில் இடம்பெறும் “மாரைப் பிசஞ்சான்” என்கிற வன்முறை அங்காடித் தெருவிற்கு மட்டுமன்று. தினசரி நான் நடந்துபோகின்ற இருள் அடர்ந்த எல்லாத் தெருக்களுக்கும் பொருந்தும். அந்த இரு சக்கிரவாகன ஓட்டிக எந்த அரசியலை/சாதி சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்ற ஆராய்ச்சியை அவர்களின் ஹெல்மட்டுகள் மூடி மறைத்துவிட இருளையே வன்முறைக்கான ஒன்றாகக் காண்கிறோம் பெண்களாகிய நாங்கள்.

நல்ல சில கனவுகள் நினைவில் நிற்பதில்லை. அதே நேரம் கெட்ட கனவுகளோ வாழ்க்கை முழுவதும் நினைவில் நிலைத்து விடுகின்றன .கனவுகளைப்போலவே நமது அடியாழ மனதிலும் நம் உடல் குறித்த வன்முறைகளைத் தாண்டி உடல் மற்றொரு தளத்திற்கு செல்வதென்பது மிகவும் அரிய நிகழ்வாகவும் பொருத்தமில்லாததாகவும் போய்விடுகிறது. குறைந்தபட்சமாக உடலைக் கொண்டாடுவது மட்டுமே ஒரு விடுதலையின் உச்சகட்டம் என்று கூறிக்கொள்வது மற்ற வாழ்நிலைகளால் ஜீரணிக்கவும் முடியாததாகிறது. கிளைவ் பெல், குளோரியா ஸ்டீனம் (சிறு வயதில் அவரது “lady love your cunt” என்ற புத்தகத்தை சிலாகித்துப் படித்திருக்கிறேன்) போன்ற இரண்டாவது அலை பெண்ணியவாதிகளை எதிர்த்து மூன்றாவது அலை பெண்ணியம் சாராம்சப்படுத்துதலுக்கு எதிராக அமைந்தது 1990 கள் முதல்.

இந்த சூழலில், சல்மாவின் “பச்சை தேவதை” தொகுப்பிலிருந்து இரண்டு தூமை பற்றிய கவிதைகளைப் பார்க்கவிழைகிறேன். இக்கவிதைகள் “நான்” என்பதில் பகுதியாகிப் போகும் பெண் உடலை கூசிக் குறுகச் செய்யும் சமூக வன்முறைக்குச் சாதகமான் “தூமை” என்ற நிகழ்வோடு தனது தனிமையையும் இச்சமூகத்தின் அழுக்குகளை வாழ்கையிற் சுமக்கும் சுத்திகரிப்புத் தொழிலாளியையும் இணைத்துப் பேசுகின்றன.

இந்த மாலை

வேறெந்தப் பொழிதுகளையும்விடச்

சுமக்கவே இயலாதபடிக்கு

எப்படி இவ்வளவு கனத்துவிடுகிறது

இந்த மாலை

மாதவிடாய் ஈரம் நிரம்பிக்

கனக்கிற பஞ்சைப்போல.

அதிர்வு

கசங்கிய அரைக்கால்

உடை தரித்து

நாசியை எக்கும் நாற்றம் பருகியபடி

குப்பை சுமப்பான்

எத்தனையாவது பரம்பரையென

என்னைப் போன்றே தானும் அறியாதபடி

சுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும்

இடையேயான தூர்ந்துபோன

வேறுபாடுகளுடன்

நான் விலக்கிச் செல்கிற இடங்களையே

வசிப்பிடமாக்கிக் கொள்கிறான்

என் வீட்டுக் குப்பைகளை அள்ளும் தருணத்தில்

சூல்கொள்ளாது உடைந்த

என் கருமுட்டைகளின் கரைபடிந்த

நாப்கின்களைக் கண்டு

என்ன நினைத்துக்கொள்கிறானோ

நடுங்கிக் கூசும் என் கருப்பை.

தனது இரண்டாவது கவிதையில் சல்மா, தூமை என்ற ஒரு சுமையை உலகம் கண்டு அருவருப்பதைப் புலப்படுத்துவதுடன் தனக்கும் கீழ் தனது வாழ்க்கையையும் பிழைப்பையுமே அழுக்குகளுடன் ஏந்திச் செல்லும் ஒரு சுற்றுப்புறத் தொழிலாளியின் (அவன் அத் தூமைச் சீலைகளை கண்டு அருவருப்பது ஒரு ஆணாதிக்க சமூக மதிப்பீட்டின் ஊடாடல்தான் என்றாலும்) தன்னிலையையும் குறித்து கவலை கொள்கிறார். ஆதித்தாய் ஆதி உணர்வு என்பதெல்லாம் போய் அடையாளம் தெரியாதவையாக கரைகின்றன அவர்களது முகங்கள்.

இனிவரும் கட்டுரைகளின் பாலியல் அடையாளங்களையும் அது சார்ந்த சிக்கல்களையும் பற்றி எழுத உள்ளேன். அதற்கான சிந்தனையிலும் வாசிப்பிலும் ஈடுபட்டுள்ளேன். இனி அது தொடரும்…

Advertisements