தர்மினி

ஒரு மரங் கூட அசையாமலிருந்தது.                                                                 புயலெழுந்து படலமாக(த்)
தன்னந் தனியே வாரிச் சென்று வீசியது.

கரைந்து சூனியமாகிப் போக(க்)
களவாடிச் சென்ற காற்று,
வெற்றுப் பெயராகிய _அதை
வார்த்தைகளைத் தீத்தி விடும் நாவால்
வடிவஞ் செய்து
என் மனசை விரித்து
அதிசயக் கைகளால்
ஒன்றாக்கிச் சுழற்றி

புதிதாய் மீட்டுக் கொடுத்த                                                                                                       உருவை
மாயாவென்றழைத்தது.

தேடியலைதலில்                                                                                                                தோற்றுச் செத்த உயிரை
மீள் பிறத்தலின்
தாயாகிய புயலது.

சாவில்
வெறுமை இறுகிய கூடாகிக் கிடந்ததை
உரசிச் சென்று
வெப்பங் கனல அனல் தடவி
ஈரச் சிதறலில் உடல் பரப்பி
ஒரு பொழுதில்,

சிறு புள்ளியொன்றிற் கைப்பற்றி                                                                             மீட்டுச் செல்ல மையங் கொண்டு                                                                               புயலாய் விழுங்கிப் புதிதாக்கித் துப்பியது.

மாயாவாகிய நானானேன்.

Advertisements