-மோனிகா

நீண்ட இப்பிரயாணத்தில்
நான் உறங்கத் தலைபட்டபோதெல்லாம்
யாரோ ஒருவரின் கூச்சலும்
குழந்தைகளின் அழுகுரலும் என்னை
விழிப்புறச் செய்கிறது.
விழித்து நான் பேச எத்தனித்தபோதெல்லாம்
கேட்பவர்கள் உறக்கத்திலோ, கனவிலோ
அல்ல, ஏதோ ஒரு கேளிக்கையின்
மையப்பகுதியிலோ மனத்தை
பொதித்து வைத்துள்ளனர்.
தேர்ந்த ஒரு ஓட்டுனன் வழிநடத்த
தண்டவாளங்களை தக்கபடி மாற்றி
மக்களைச் சேருமிடம் சேர்த்துவிடுகிறது,
இந்த ஊர்தி.
தீர்மானமாய் பயணச்சீட்டு வாங்கியபின்னும்
மறதியில் ஆங்காங்கே இறங்கியதாய்
மார்தட்டிக் கொள்வார் சிலர்.
கடைசி நிறுத்தத்திலும் கால்கள் இறக்காமல்
திரும்பத் திரும்ப நினைப்பும் நிகழ்வுமாய்
காற்றிலையும் சருகென
அலைப்புற அமர்த்துவேன் நான் என்னை.

Advertisements