-மோனிகா

நான் நடக்கத் தோன்றியது,

நகரம் தன் முகம் மாற்றிக் கொண்டதென.

காணாமற்போயின, கான்கிரீட் தளங்களில்

மழை பெய்யக் கிளம்பிய மண் வாசங்கள்,

சிறு வயதில் சித்தப்பாவும் மாமாவும் நட்ட

செவ்வரளி, சம்பங்கி மற்றும் பாம்பின்

பயம் காட்டும் நாகலிங்கப் பூக்கள்.

அடையாளம் அற்றுப்போன தெருக்களில்

புறாக்கூண்டுகளோ புற்றுகளோபோல்

நட்டு வளர்ந்தன கான்கிரீட் காடுகள்.

விலங்குத் தனமாய் வீதியை மறைத்த

விளம்பர போர்டுகள் நிலவை விழுங்கி

இருளைக் கக்கின.

கண்ணாமூச்சி, கல்லாங்காய், தாயமும் தவிர்த்து

கண் கண்ணாடியூடே கணிணியிற் காரோட்டினர்

நவீன பார்த்தசாரதிகள்.

நிஜக் கார்நிறுத்தம் குழி தோண்டிப் புதைத்தது

சாலைக்குப் பூதூவும் சரக்கொன்றைமரங்களை.

சுரீரென்ற வெயிலில் சரீரம் நோக

எட்டப் போகவேண்டும் இன்னும் இந்த

தொட்டாற் சிணுங்கி நாகரிகத்தினூடே.

எனக்குத் துணையாய்,

காற்றின் முடிவிலா அன்பின் தளர்வில்

மிதக்கிறதொரு

பிளாஸ்டிக் பை.

Advertisements