தர்மினி
தமக்கொரு நாடு தேவையென்று
வீடுகளிலிருந்து ஓடிப்போன
புதல்வர்
வெளி நாடுகளிலிருந்து திரும்பியிருந்தனர்.

‘சமையல் செய்தல்
துடைத்துக் கழுவுதல்
எதுவும் இளக்காரமில்லை’
அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர்.

எல்லைகளிற் புங்கு பூவரசு கிளுவை நட்டு
தரவை நிலங்களை
உழுது விதைக்காத பிழைக்கு வருந்தி
புற்கள் கிளறி உரம் வீசி
ஓய்வெடுக்கக் கடற்கரைகள் உண்டென்று
இப்போது கண்டதாகக் கவலையடைந்தனர்.

குறிஞ்சா, முருங்கையிலைகள்                                                                      தமிழ்க்கடையில்
எக்கச்சக்க விலையென்று
இருவேளை உண்பர்.

தமது ஊதிப் போன வயிறுக்கும்
உதிர்ந்து விட்ட தலைமயிர்களுக்கும்
அடிக்கடி காரணங்கள் சொல்லிக்கொள்வர்.

பக்கத்து வீட்டுப் பொடியன்
ஆமி பிடிச்சுக் காணாமல் போனது
ஷெல் விழுந்து
பள்ளிக்கூடம் உடைந்து
சிதறிச் செத்துப் போனவர்கள்,
பின் வளவுக்காரிக்கு ஆரோ வெடி வைச்சுக் கொன்றது
புலி விசாரிக்கக் கொண்டு போய்
வீடு வராத சனங்களுமென்று
கதைகளாகச் சொன்னபோது,
வாயிலிருந்து ஆ….ஆ என்றொரு சத்தத்தில்
ம்கும்..எனும் தலையாட்டலில்
எல்லாம் தாண்டிச் சென்று இடைவெட்டி
குளிருக்கு விறைத்த விரல்களாம் ஞாபகத்தில் நீவி,
எங்கள் ‘செப் ‘என்று
கதையொன்று சொல்லி
நேரச்சிக்கலில்
நித்திரை குழம்புவதாக முறைப்பாடு செய்வர்

அம்மாவுக்குத் தலையெல்லாம் வெள்ளையெனவும்
அடிக்கடி அவள் வயசும் கேட்டு’அப்பிடியா’ என்பர்.

மேலுமொரு
விடுமுறைக்காலம் வீணாகிப் போவதை நினைத்து
தம் நாடி தடவி நாக்குக் கடித்துச் சிரிப்பர்.

பலருக்கான கதையொன்றை எவரும் நடிப்பர் .
நடிப்புத் திறமை எல்லோருக்கும் உண்டாம்.

நன்றி:http://www.lumpini.in

Advertisements