-மோனிகா

ஊரின் மரப்பாலம் ஊறித் தலை சாய்க்க

சிமெண்டில் பாலம் கட்டிய செல்வந்தர்,

பின்னர் ஊரெங்கும் கடன்பட்டும்

உத்தமராய் வாழ்ந்த தாவிது மாமா.

உடன் பிறந்தோர் தாண்டி,

ஊரார் குழந்தைக்கெல்லாம்

காதுகுத்து, பூப்பு நீராட்டு,

புனிதஸ்நானம் என

பண்டிகைக்கும் படிப்புக்கும்

பகைமை பாராட்டாதவர்.

காலப் புயல் மறந்து தனதென்று

கனவுகளைக்கூட சொந்தமாக்காதவருக்கு,

சொந்தங்களே கனவாய்ப்போயின

சொத்துக்கள் மறைகையில்.

கட்டிய மனைவியை காசநோய்க்குக் கொடுத்து

கர்ண பரம்பரையிலிருந்து

ஒய்வு பெற்றார் தாவிது மாமா.

ஏசுநாதர்முன் எரியும் மெழுகு போல

இல்லாமல் போன அவரின் கல்லறையில்

எல்லாரும் வைத்தனர்

பிளாஸ்டிக் பூக்கள்.

Advertisements