-துமி-

இன்னமும் கிழியவில்லை

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்

துணிகளுக்கிடையிலான

அந்த நூற்புடவை.

பழையதென்று ஒதுக்கி

வசதியற்றவர்களுக்குக் கொடுத்தாயிற்று

இதற்குப் பின் வாங்கிய

எத்தனையோ புடவைகளை.

ஏனோ, பிற பெண்களைப்போல்

இல்லை நான் பழையவற்றைக்

கொளுத்த மனமின்றி கொழுந்தாய் மடிவதில்.

ஆனால், இது மட்டும்

விதிவிலக்காயிற்று.

எத்தனையோ முறைகள்

உடுத்தி, துவைத்து, உலர்த்தி

சாயம் போன பின்பும்,

என்னுடனேயே சதைபோல் ஒட்டும்

கர்ண கூடாயிற்று.

அன்றும் இதைத்தான் உடுத்தியிருந்தேன்.

புணர்ச்சி வேகத்தில் அவன்

இன்னொரு பெண்ணின் பெயரைக்

கூறிய பொழுதும் மெளனமாய்.

போகித் தீயினில் அவனை எறிந்து

பொசுக்கிய போதும் நினைவின் புகையாய்

பயனற்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளுக்கிடையில்

என் உள்ளம் சுமந்த இந்தப் புடவையும்…

12/5/10

Advertisements