-மோனிகா

நம்மால் ஒன்றுமாகாது.

அவர்களது செய்தி

நமது காதுகளில் விழவில்லை.

விடுதலை, வீழ்ச்சி, பின்னடைவு

என்ற சொற்களும்

ஏகாதிபத்தியம், எழுச்சி, வளர்ச்சி

போன்ற வார்த்தைகளும்

எமது காதுகளில் விழவேயில்லை.

சாத்தியப்பட்டது, சாத்தியப்படுவது, சாத்தியமாகக்கூடுவது

என்ற

சத்தியங்களெல்லாம் நாங்கள் கேள்விப்படாதவை.

அன்னியர், ஆயுதபேரம்,

புரட்சி, போராட்டம்,

தேசியம்/எல்லை

எதுவும் அறியாமல்

பாதுகாப்பிற்காக

போராடும்

சாதாரணர் நாங்கள்.

நாங்கள் எதிரிகள்.

ஒரு சொல்

மந்திரம்போல் இயங்கும்

ஒரு சொல்லை மலைகளொத்த

முதுமக்கள் தாழியினின்று இறக்கி

எல்லார் மனத்திலும்

இறைத்துச் செல்வான்

ஒருவன்.

யாருமல்லாத ஒரு வனாந்திரத்தில்

தேடித்திரிந்தபோது

கண்டெடுத்ததாகக் கூறி

ஈசல் பூச்சிகளிடமிருந்து காப்பாற்றித்

தன் இதயத்துள் பதுக்கி

மற்றுமொரு சொல்லை

பூசையிடுவான்

மற்றொருவன்.

சொற்கள் அனைத்தும் தனிமையிற் புழுங்கி

வெளிவந்து தர்க்கிக்கும் ஒருநாளில்

அடங்கா மிருகமாய்

அதனைத் தள்ளிபின்

சிறியதொருவனாய் சிதைவான்

இவன் தானே ஒரு

சொல்லாய்.

Advertisements